சார்ஜா, மலேசியாவில் இருந்து கடத்தல்: சென்னை விமான நிலையத்தில் 10 கிலோ தங்கம் சிக்கியது 3 பேர் கைது


சார்ஜா, மலேசியாவில் இருந்து கடத்தல்: சென்னை விமான நிலையத்தில் 10 கிலோ தங்கம் சிக்கியது 3 பேர் கைது
x
தினத்தந்தி 21 Jan 2019 4:00 AM IST (Updated: 21 Jan 2019 12:51 AM IST)
t-max-icont-min-icon

சார்ஜா, மலேசியாவில் இருந்து சென்னைக்கு குழந்தைகளுக்கான விளையாட்டு கருவிகளில் மறைத்து கடத்தி வரப்பட்ட ரூ.3 கோடியே 30 லட்சம் மதிப்புள்ள 10 கிலோ தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 3 பேரை கைது செய்தனர்.

ஆலந்தூர்,

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு மலேசியாவில் இருந்து விமானம் வந்தது. அதில் வந்த கமர்அலி (வயது 38) என்பவரை சுங்க இலாகா அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித்தனர். அப்போது அவரது உடைமைகளில் குழந்தைகளுக்கான 47 விளையாட்டு கருவிகள் இருந்தன.

சந்தேகத்தின் பேரில் அவற்றை பிரித்து பார்த்தபோது, அதில் சிறிய வட்ட வடிவத்திலான தங்க கட்டிகள் மறைத்து வைக்கப்பட்டு இருப்பது தெரிந்தது. அவரிடம் இருந்து ரூ.1 கோடியே 5 லட்சம் மதிப்புள்ள 3 கிலோ 200 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

அதேபோல் சார்ஜாவில் இருந்து சென்னை வந்த விமானத்தில் வந்த ரியாஸ்கான் (32), இப்ரகீம்ஷா (52) ஆகியோரின் உடைமைகளையும் சுங்க இலாகா அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் சோதனை செய்தனர். அதில் 2 பேரின் சூட்கேஸ்களிலும் குழந்தைகளுக்கான விளையாட்டு கருவிகளில் சிறு சிறு தங்க கட்டிகளை மறைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர்.

2 பேரிடம் இருந்தும் ரூ.2 கோடியே 25 லட்சம் மதிப்புள்ள 6 கிலோ 600 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர்.

இதையடுத்து 3 பேரையும் கைது செய்த சுங்க இலாகா அதிகாரிகள், இவர்கள் யாருக்காக இந்த தங்கத்தை சார்ஜா, மலேசியாவில் இருந்து சென்னைக்கு கடத்தி வந்தார்கள்?. இதன் பின்னணியில் சர்வதேச கடத்தல் கும்பல் உள்ளதா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஒரே நாளில் சென்னை விமான நிலையத்தில் 3 பேரிடம் இருந்து ரூ.3 கோடியே 30 லட்சம் மதிப்புள்ள 294 தங்க கட்டிகளை கொண்ட 9 கிலோ 800 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Next Story