ஒகி புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடு கட்ட நிதி உதவி வாங்கி தருவதாக மோசடி; போலி போதகர் கைது


ஒகி புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடு கட்ட நிதி உதவி வாங்கி தருவதாக மோசடி; போலி போதகர் கைது
x
தினத்தந்தி 21 Jan 2019 4:30 AM IST (Updated: 21 Jan 2019 1:29 AM IST)
t-max-icont-min-icon

ஒகி புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடு கட்ட நிதி உதவி வாங்கி தருவதாக கூறி பணம் வசூலித்து மோசடியில் ஈடுபட்ட போலி போதகரை போலீசார் கைது செய்தனர்.

கொல்லங்கோடு,

ஒகி புயலால் கடந்த 2017-ம் ஆண்டு குமரி மாவட்டம் பெரிதும் பாதிக்கப்பட்டது. இதில் கடற்கரை கிராமங்களை சேர்ந்த ஏராளமான மீனவர்கள் வீடுகள் மற்றும் உடமைகளை இழந்து தவித்தனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு மற்றும் பல்வேறு தொண்டு நிறுவனங்கள் சார்பில் உதவிகள் செய்யப்பட்டது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மார்த்தாண்டம் துறை, வள்ளவிளை, நீரோடி ஆகிய கிராமங்களில் போதகர் எனக்கூறிக்கொண்டு ஒருவர் வந்து, ஒகி புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடு கட்ட நிதி உதவி வாங்கித் தருவதாக கூறி, அதற்காக ஒவ்வொரு குடும்பத்தினரிடமும் ஒரு தொகையை வசூல் செய்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் கேரள பதிவு எண் கொண்ட ஆட்டோவில் மார்த்தாண்டம் துறைக்கு போதகர் வந்தார். அவர், அங்குள்ள வீடுகளுக்கு சென்று தன்னை, கேரளாவில் இருந்து வருவதாக கூறி அறிமுகம் செய்து வீடுகள் கட்ட நிதி உதவி வாங்கித் தருவதாக கூறினார்.

இதில் சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள் அவரை பிடித்து வைத்துக்கொண்டு கொல்லங்கோடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து, அவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர், கேரள மாநிலம் காஞ்சிரங்குளம் பகுதியை சேர்ந்த ஷிபு எஸ்.நாயர் என்பதும், போதகர் என்று கூறிக்கொண்டு, அதே போல் உடையணிந்து, கேரளாவை சேர்ந்த அனைத்து பிஷப்புகளையும் தெரியும் என்றும், அவர்கள் மூலம் வீடு கட்ட நிதி உதவி வாங்கி தருவதாகவும் கூறியுள்ளார். மேலும் கேரளாவில் உள்ள அனாதை குழந்தைகள் வளரும் ஆசிரமத்துக்கு உணவுக்காக பணம் கேட்டு, ஒவ்வொரு குடும்பத்தினரிடமும் ரூ.8ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை பணம் வசூலித்ததும் தெரியவந்தது.

ஒரு பகுதிக்கு சென்று 10-க்கும் மேற்பட்ட வீடுகளில் பணம் வாங்குவது வழக்கம். அதன்பிறகு மீண்டும் அதே பகுதிக்கு ஒரு ஆண்டு கழித்து சென்று வேறு வீடுகளில் பணம் வசூலித்துள்ளார். அவர் இதுவரை ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் வரை மோசடி செய்தது தெரிய வந்துள்ளது. இந்த மோசடி குறித்து கொல்லங்கோடு அருகே உள்ள மேடவிளாகம் பகுதியை சேர்ந்த பிரியா என்பவர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அவரை தொடர்ந்து 15-க்கும் மேற்பட்டவர்கள் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலி போதகர் ஷிபு எஸ்.நாயர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

Next Story