ஊட்டியில் குறைதீர்க்கும் கூட்டம்: குடிநீர் வினியோகம் செய்யக்கோரி முள்ளிக்கொரை பெண்கள் மனு


ஊட்டியில் குறைதீர்க்கும் கூட்டம்: குடிநீர் வினியோகம் செய்யக்கோரி முள்ளிக்கொரை பெண்கள் மனு
x
தினத்தந்தி 21 Jan 2019 11:00 PM GMT (Updated: 21 Jan 2019 5:51 PM GMT)

ஊட்டியில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் குடிநீர் வினியோகம் செய்யக்கோரி முள்ளிக்கொரை பெண்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர்.

ஊட்டி,

ஊட்டியில் உள்ள நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமை தாங்கினார். இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்துகொண்டு தங்களது குறைகள் மற்றும் கோரிக்கைகளை மனுவாக அளித்தனர். அதன்படி, ஊட்டி அருகே முள்ளிக்கொரை கிராம பெண்கள் பகலில் குடிநீர் வினியோகம் செய்யக்கோரி மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:-

முள்ளிக்கொரையில் 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அங்கு சிக்கம்மன் கோவில் பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு நள்ளிரவு நேரத்தில் குழாயில் குடிநீர் வருகிறது. ஆனால், மற்ற பகுதிகளில் பகலிலும், இரவிலும் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இரவு நேரத்தில் தண்ணீர் வருவதால், பெண்கள் வெளியே வந்து பிடிப்பதில் சிக்கல் உள்ளது. மேலும் இரவில் காட்டெருமைகள் நடமாட்டம் உள்ளதால், மக்களை தாக்கும் அபாயம் காணப்படுகிறது. எனவே, எங்களுக்கு பகலில் குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

ஊட்டி அருகே உள்ள அட்டுக்கொல்லை கிராம மக்கள் தனியார் தொழிற்சாலையில் உள்ள புகை வெளியேற்றும் எந்திரத்தை மாற்றக்கோரி மனு அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:- ஊட்டி அருகே எல்லநள்ளியில் தனியார் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலை அருகில் உள்ள அட்டுக்கொல்லை கிராமத்தில் நாங்கள் வசித்து வருகிறோம். தொழிற்சாலையில் இருந்து புகையை சுத்திகரித்து வெளியேற்றும் எந்திரம் (எவாப்ரேட்) அதிக சத்தத்துடன் செயல்படுகிறது என்றும், அதனை மாற்றக்கோரி மாவட்ட கலெக்டர் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடம் மனு கொடுத்து இருந்தோம். அந்த எந்திரத்தை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்து இருந்தனர். ஆனால், எந்திரம் மாற்றப்பட வில்லை.

கடந்த ஆண்டு மே மாதம் 31-ந் தேதி தொழிற்சாலையில் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர், ஆகஸ்ட் மாதம் 17-ந் தேதி கோவை இணை தலைமை சுற்றுச்சூழல் பொறியாளர் ஆகியோர் ஆய்வு செய்து எங்களது மனுவை மாசுக்கட்டுப்பாட்டு வாரிய சென்னை அலுவலகத்துக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை.

எனவே, தொழிற்சாலையில் புகையை வெளியேற்றும் எந்திரத்தை மாற்ற வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

Next Story