கூடலூர், முதுமலையில் சுற்றுலா பயணிகளை கவரும் காட்டுத்தீ மலர்கள்


கூடலூர், முதுமலையில் சுற்றுலா பயணிகளை கவரும் காட்டுத்தீ மலர்கள்
x
தினத்தந்தி 22 Jan 2019 4:30 AM IST (Updated: 21 Jan 2019 11:38 PM IST)
t-max-icont-min-icon

கூடலூர், முதுமலையில் காட்டுத்தீ மலர்கள் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகின்றன.

கூடலூர்,

கூடலூர் பகுதியில் பருவமழைக்காலம் முடிந்து கோடை காலம் தொடங்கி உள்ளது. இங்கு ஒவ்வொரு காலக்கட்டங்களில் நிலவும் சீசனுக்கு ஏற்ப மலர் செடிகள் வளருகின்றது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஊட்டி, கல்லட்டி, நடுவட்டம் மலைப்பாதைகளில் குறிஞ்சி மலர்கள் பூத்து குலுங்கின. இதை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர். இதேபோல் காட்டு சூரியகாந்தி மலர்கள் மஞ்சள், வெள்ளை நிறங்களில் வனம் முழுவதும் பூத்தன.

இதனால் அழகிய மலர் சோலை போல வனங்கள் காட்சி அளித்தது. நீலகிரிக்கு தினமும் வரும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் அரிய வகை மலர்களை கண்டு ரசித்து செல்கின்றனர். தற்போது இரவில் கடும் பனிப்பொழிவும், பகலில் நன்கு வெயிலும் காணப்படுகிறது. கோடை காலத்தை வரவேற்கும் வகையில் வனத்தில் உள்ள மரங்களின் இலைகள் உதிர்ந்து வருகிறது.

கடும் பனியால் வனத்தில் உள்ள புற்கள், செடி, கொடிகள் கருகி வருகிறது. இதனால் வறட்சியான காலநிலை நிலவுகிறது. இதனை உறுதி செய்யும் வகையில் வறட்சியை தாங்கி வளரும் மரங்களும் பூக்க தொடங்கி உள்ளது. கூடலூர், முதுமலை, மசினகுடி பகுதியில் பிளேம் ஆப் தி பாரஸ்ட் மரங்கள் அதிகளவு உள்ளன. வறட்சியான காலநிலை தொடங்கி விட்டதால் இவ்வகை மரங்களின் பூக்கள் பூத்து குலுங்குகின்றன.

இந்த மரங்களில் இலைகள் இருக்காது. மரங்கள் முழுவதும் சிவப்பு நிற பூக்கள் காணப்படும். சற்று தூரத்தில் இருந்து பார்க்கும்போது தீ பிடித்து எரிவது போல் பிளேம் ஆப் தி பாரட்ஸ் மலர்கள் காணப்படும். இதனால் இவை காட்டுத்தீ மலர்கள் எனவும் அழைக்கப்படுகிறது. இவை சுற்றுலா பயணிகளை வெகுவாக கவருகின்றன.

கூடலூர்-முதுமலை- மைசூரு மற்றும் முதுமலை-மசினகுடி செல்லும் சாலைகளின் கரையோரமும் பிளேம் ஆப் தி பாரஸ்ட் மலர்கள் அதிகளவில் பூத்துள்ளது.

இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர். மேலும் தங்களது செல்போனில் புகைப்படங்களும் எடுத்து மகிழ்கின்றனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, பிளேம் ஆப் தி பாரஸ்ட் மலர்கள் காண்பதற்கு அழகாக இருக்கும். அவை மரத்தில் இருந்து கிழே உதிர்ந்தால் மான்கள், காட்டெருமைகள் உள்ளிட்ட வனவிலங்குகளுக்கு பசுந்தீவனமாக பயன்படுகிறது.

Next Story