கூடலூரில் வியாபாரியிடம் ரூ.30 ஆயிரம் வழிப்பறி - வாலிபருக்கு வலைவீச்சு


கூடலூரில் வியாபாரியிடம் ரூ.30 ஆயிரம் வழிப்பறி - வாலிபருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 21 Jan 2019 11:00 PM GMT (Updated: 21 Jan 2019 6:46 PM GMT)

கூடலூரில் வியாபாரியிடம் ரூ.30 ஆயிரம் வழிப்பறி செய்த வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கூடலூர்,

கூடலூர் ராஜகோபாலபுரம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டமூர்த்தி(வயது 48). இவர் அதே பகுதியில் எழுதுபொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் மணிகண்டமூர்த்தி நேற்று முன்தினம் இரவு 9.30 மணியளவில் வழக்கம்போல் கடையை பூட்டி விட்டு, அங்கிருந்து 150 மீட்டர் தூரத்தில் உள்ள தனது வீட்டுக்கு நடந்து சென்றார். அவரது கையில் கைப்பை ஒன்று இருந்தது. அப்போது அந்த வழியாக நடந்து வந்த ஒரு வாலிபர் திடீரென மணிகண்டமூர்த்தியை நெருங்கினார். பின்னர் கண்ணிமைக்கும் நேரத்தில் அவரிடம் இருந்த கைப்பையை பறித்து கொண்டு தப்பி ஓடினார். இதனால் அதிர்ச்சி அடைந்த மணிகண்டமூர்த்தி கூச்சல் போட்டார்.

ஆனால் அதற்குள் அந்த வாலிபர் தப்பி ஓடி மறைந்தார். இது தொடர்பாக கூடலூர் போலீசில் புகார் செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். ஆனால் இந்த வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. வியாபாரி மணிகண்டமூர்த்தியின் கைப்பையில் ரூ.30 ஆயிரம் பணம் மற்றும் செல்போன் இருந்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, அந்த வாலிபரை வலைவீசி தேடி வருகின்றனர். 

Next Story