தலைமை செயலகத்தில் யாகம் நடந்திருந்தால் விளக்கம் அளிக்க வேண்டும் ஜி.கே.வாசன் பேட்டி


தலைமை செயலகத்தில் யாகம் நடந்திருந்தால் விளக்கம் அளிக்க வேண்டும் ஜி.கே.வாசன் பேட்டி
x
தினத்தந்தி 22 Jan 2019 4:45 AM IST (Updated: 22 Jan 2019 12:39 AM IST)
t-max-icont-min-icon

தலைமை செயலகத்தில் யாகம் நடந்திருந்தால் விளக்கம் அளிக்க வேண்டும் என்று தஞ்சையில், ஜி.கே.வாசன் கூறினார்.

தஞ்சாவூர்,

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பொருளாதாரம் பின்னோக்கி சென்றுள்ளது. இதற்கு ஏற்றவாறு நிவாரணத்தை மத்திய, மாநில அரசுகள் இதுவரை பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுக்கவில்லை.

மத்திய அரசு வழங்கிய நிவாரண நிதி போதுமானது அல்ல. யானைப்பசிக்கு சோளப்பொறி போட்டது போல் உள்ளது. எனவே பாதிக்கப்பட்டவர்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்றவாறு அவர்களுடைய மறுவாழ்வு முறையாக சரி செய்வதற்கு தகுந்த நிவாரணத்தொகையை மத்திய அரசு வழங்க வேண்டும்.

நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக எந்த கட்சியும் அதிகாரப்பூர்வமான கூட்டணி அறிவிப்பு வெளியிடப்படவில்லை. த.மா.கா.வும் அதற்கு விதிவிலக்கல்ல. மக்களுடைய எண்ணங்களுக்கு ஏற்றவாறு, கருத்தை கேட்டு ஒத்த கருத்துடைய கட்சிகளளோடு கூட்டணி அமையும் என்று நம்புகிறேன்.

தலைமை செயலகத்தில் யாகம் நடந்தது என்பது ஒரு அதிகாரப்பூர்வமற்ற செய்தியாக இருக்கிறது. அது போன்ற நிகழ்வுகள் அங்கே நடக்கக்கூடாது. அப்படி என்றால் விளக்கம் கொடுக்க வேண்டியது அவர்களுடைய கடமை. சாமி படம் வைக்கலாம். ஒரு சாதாரண பூஜை போடலாம். யாக பூஜை நடந்தது என்றால் அதற்கு விளக்கம் கொடுக்க வேண்டும்.

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் கோடநாடு விவகாரம் குறித்து பல சந்தேகங்கள் வெளிவந்துள்ளன. ஆட்சியில் இருக்கும் முதல்-அமைச்சர் மீது ஒரு குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது. அதற்கு விளக்கம் தெரிவிக்க வேண்டிய கடமை ஆட்சியாளர்களுக்கு உண்டு. இதற்கெல்லாம் சி.பி.ஐ. விசாரணை தான் பல சந்தேகங்களுக்கு தீர்வு ஏற்படுத்தக்கூடிய நிலையை ஏற்படுத்தும்.

புயலால் பாதிக்கப்பட்ட பகுதியில் அந்த பகுதி மக்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்றவாறு உதவி செய்யவில்லை என்ற ஆதங்கம் இருக்கிறது. பிரதமர் நேரடியாக வரவில்லை என்ற எண்ணமும் மக்களிடம் இருக்கிறது. இத்தகைய சூழலில் பிரதமர் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நம்பிக்கை கொடுக்கும் வகையில் பணிகளை செய்ய வேண்டும் என்பது தான் எனது வேண்டுகோள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story