வட்டார போக்குவரத்து அலுவலகம் முன்பு வாடகை தராததால் வேனுடன் டிரைவர்கள் ஆர்ப்பாட்டம்


வட்டார போக்குவரத்து அலுவலகம் முன்பு வாடகை தராததால் வேனுடன் டிரைவர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 21 Jan 2019 11:00 PM GMT (Updated: 21 Jan 2019 7:33 PM GMT)

தஞ்சை வட்டார போக்குவரத்து அலுவலகம் முன்பு வாடகை தராததால் வேனுடன் டிரைவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர்,

கடந்த நவம்பர் மாதம் வீசிய கஜா புயல் காரணமாக தஞ்சை மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டது. ஏராளமான வீடுகள், மரங்கள் சேதம் அடைந்தன. லட்சக்கணக்கான தென்னை மரங்களும் முறிந்து விழுந்தன.

அப்போது பாதுகாப்பு பணிக்காக போலீசாரை அழைத்து செல்வதற்காக தனியார் வேன் மற்றும் கார்கள் வாடகைக்கு எடுக்கப்பட்டன. இந்த வேன் மற்றும் கார்களில் போலீசாரை அழைத்துச்செல்வது, அவர்களுக்கு உணவு ஆகியவையும் கொண்டு செல்லப்பட்டன. இவ்வாறு தஞ்சை நகரில் இருந்து 22 வேன்கள் மற்றும் 3 கார்கள் வாடகைக்கு எடுக்கப்பட்டன.

அவ்வாறு எடுக்கப்பட்ட வேன் மற்றும் கார்களுக்கு இதுவரை வாடகை கொடுக்கப்படவில்லை. இந்த வேன் மற்றும் கார்கள் வட்டார போக்குவரத்து அலுவலகம் மூலம் வாடகைக்கு எடுக்கப்பட்டதால், டிரைவர்கள் மற்றும் உரிமையாளர்கள் நேற்று தஞ்சை வட்டார போக்குவரத்து அலுவலகம் முன்பு வாடகை வேன் மற்றும் கார்களை நிறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் அவர்கள் கூறுகையில், “கஜா புயல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசாரை அழைத்துச்செல்வது, உணவு கொண்டு செல்வது ஆகிய பணிகளில் ஈடுபட்டோம். ஒரு சில வேன்கள் 10 நாட்களும், ஒரு சில வேன்கள் 5 நாட்களும் இயக்கப்பட்டன. இவ்வாறு ஒரு வேனுக்கு வாடகை கட்டணம் ரூ.20 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை என மொத்தம் ரூ.5 லட்சம் வரை தர வேண்டி உள்ளது.

வேன்கள் இயக்கப்பட்ட போது அதற்கான டீசல் மற்றும் டிரைவர்களுக்கு பேட்டா ஆகியவை மட்டும் கொடுத்துள்ளனர். 60 நாட்கள் ஆகியும் இதுவரை ஒரு வாகனத்திற்கு கூட வாடகை தரவில்லை. இது குறித்து வட்டார போக்குவரத்து அதிகாரியிடம் கூறினோம். அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு எங்களுக்கு வாடகையை கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்”என்றனர்.

Next Story