அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் தைப்பூசத்தையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு


அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் தைப்பூசத்தையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு
x
தினத்தந்தி 22 Jan 2019 4:00 AM IST (Updated: 22 Jan 2019 1:31 AM IST)
t-max-icont-min-icon

அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில், தைப்பூசத்தையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

அரியலூர்,

தைப்பூசத்தையொட்டி நேற்று அரியலூர் மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. தைப்பூசத்தை யொட்டி அரியலூரில் உள்ள பாலதண்டாயுதபாணி கோவிலுக்கு பக்தர்கள் அரியலூர் பஸ் நிலையம் அருகே உள்ள விநாயகர் கோவில் இருந்து ஊர்வலமாக பால்குடம், காவடி எடுத்து வந்தனர். பக்தர்கள் கொண்டு வந்த பால் மற்றும் வாசனை திரவியங்களால் முருகனுக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னர் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதையடுத்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இதே போல் வி.கைகாட்டியில் உள்ள மகாசக்தி மாரியம்மன் கோவிலுக்கு தைப்பூசத்தையொட்டி நேற்று பக்தர்கள் பால்குடங்களை தலையில் சுமந்து ஊர்வலமாக வந்தனர். முன்னதாக வி.கைகாட்டி முட்டுவாஞ்சேரி சாலை அருகில் உள்ள ஓடையில் விரதம் இருந்த பக்தர்கள் நேர்த்திக்கடனாக பால்குடம், அக்னி சட்டி எடுத்தும், அலகு குத்தியும் மேளதாளம் முழங்க முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக வந்து கோவிலை அடைந்தனர்.

இதையடுத்து மாரியம்மனுக்கு மஞ்சள், பால், தயிர், பன்னீர் உள்பட 16 வகையான திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் வி.கைகாட்டி, காத்தான்குடிகாடு, ரெட்டிபாளையம், தேளூர், மண்ணுழி, ஒரத்தூர், விளாங்குடி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து வந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தா.பழூர் விசாலாட்சி சமேத விசுவநாதர் கோவிலில் தைப்பூச திருவிழாவையொட்டி சுவாமி மற்றும் அம்பாளுக்கு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் வள்ளி, தெய்வானை சமேத வில்லேந்திய வேலவருக்கு பல்வேறு பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் தீபாராதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மாலையில் வில்லேந்திய வேலவர், வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பல்லக்கில் வீதி உலா வந்தனர். இதற்கான ஏற்பாடுகளை சைவ பிள்ளை சமூகத்தினர் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

செந்துறை தாலுகா நல்லாம்பாளையம் கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சுப்பிரமணியர் கோவிலில் 100 ஆண்டுக்கு மேலாக தைப்பூச வழிபாடு நடைபெற்று வருகிறது. அதன்படி இந்த ஆண்டிற்கான தைப்பூச வழிபாட்டையொட்டி நேற்று கிராம இளைஞர்கள் விரதம் இருந்து 2 நாட்களுக்கு முன்பு கும்பகோணம் அருகே உள்ள கொள்ளிடம் ஆற்றுக்கு நடந்து சென்று காவடி கட்டி காவிரி நீரை கொண்டு வந்தனர். காவடி எடுத்து வந்த இளைஞர்களை கிராம மக்கள் வரவேற்றனர். பின்னர் பக்தர்கள் சுப்பிரமணியர் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்தனர். அதனை தொடர்ந்து பக்தர்கள் மயில் காவடி மற்றும் பால்குடம் எடுத்து கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக வந்தனர். தைப்பூசத்தையொட்டி அரியலூர் மாவட்டத்தில் பல இறைச்சி கடைகள் அடைக்கப்பட்டிருந்தது.

இதேபோல் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில்களிலும் நேற்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பெரம்பலூர்-எளம்பலூர் சாலையில் உள்ள பாலமுருகன் கோவிலில் 39-ம் ஆண்டு தைப்பூச விழா நேற்று வெகு விமரிசையாக நடந்தது. காலையில் பாலமுருகனுக்கு பால், தயிர், பன்னீர், பஞ்சாமிர்தம், சந்தனம், இளநீர் உள்ளிட்டவையால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. மதியம் பாலமுருகனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதையடுத்து மாலையில் அலங்கரிக்கப்பட்ட தேரில் பாலமுருகன் எழுந்தருளினார். தொடர்ந்து பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் காமராஜர் வளைவு, கடைவீதி, வடக்கு மாதவி சாலை வழியாக சென்று மீண்டும் கோவிலை வந்தடைந்தது.

மங்களமேடு அருகே கீழப்புலியூர் கிராமத்தில் உள்ள பால தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு தைப்பூச திருவிழாவையொடி பக்தர்கள் பால் குடங்கள், காவடி, பன்னீர் காவடி எடுத்து வந்தனர். அதனை தொடர்ந்து பாலதண்டாயுதபாணி சுவாமிக்கு பால், பன்னீர், தயிர், சந்தனம், தேன், பஞ்சாமிர்தம், திருநீர் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, வெள்ளி கவசம் சாத்தப் பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

Next Story