அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.5 லட்சம் மோசடி மின்வாரிய ஊழியர் மீது கடைக்காரர் புகார்


அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.5 லட்சம் மோசடி மின்வாரிய ஊழியர் மீது கடைக்காரர் புகார்
x
தினத்தந்தி 22 Jan 2019 4:15 AM IST (Updated: 22 Jan 2019 2:14 AM IST)
t-max-icont-min-icon

அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.5 லட்சம் மோசடியில் ஈடுபட்ட மின்வாரிய ஊழியர் மீது கடைக்காரர் புகார் மனு கொடுத்தார்.

ஈரோடு,

திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் காமராஜபுரத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 47). இவர் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று புகார் மனு கொடுத்தார். அந்த மனுவில் அவர் கூறிஇருந்ததாவது:–

நான் கோழிக்கடை வைத்து நடத்தி வருகிறேன். ஐ.டி.ஐ. படித்து உள்ளேன். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நஞ்சை ஊத்துக்குளியை சேர்ந்த ஒரு பெண் மூலமாக ஈரோடு வெண்டிபாளையம் கதவணையில் வேலை பார்க்கும் மின்வாரிய ஊழியருடன் பழக்கம் ஏற்பட்டது. அவர் என்னிடம் ஆளும் கட்சி பிரமுகர்களையும், அரசு உயர் அதிகாரிகளையும் நன்கு தெரியும் என்றும், அவர்கள் மூலமாக தமிழ்நாடு மின்சார வாரியத்தில் வணிக உதவியாளர் பணி வாங்கி தருவதாகவும், அதற்கு ரூ.5 லட்சம் தரவேண்டும் என்றும் ஆசை வார்த்தை கூறினார். அவரை நம்பி நான் 3 தவணையாக மொத்தம் ரூ.5 லட்சத்தை கொடுத்தேன்.

எனக்கு அவர் பணி நியமன உத்தரவை கொடுத்தார். அதை பெற்றுக்கொண்டு விசாரித்தபோது அந்த பணிநியமன ஆணை போலியானது என்று தெரியவந்தது. அதைத்தொடர்ந்து அவரிடம் சென்று நான் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டேன். அதற்கு அவர் பணத்தை தர முடியாது என்று கூறியதுடன் கொலை மிரட்டலும் விடுத்தார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுத்தர வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறிஇருந்தார். மனு கொடுக்கும்போது பா.ம.க. மாநில துணைத்தலைவர் என்.ஆர்.வடிவேல் மற்றும் சிலர் உடனிருந்தனர்.


Next Story