ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் எல்.கே.ஜி மற்றும் யூ.கே.ஜி. வகுப்புகளை அமைச்சர் தொடங்கி வைத்தார்


ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் எல்.கே.ஜி மற்றும் யூ.கே.ஜி. வகுப்புகளை அமைச்சர் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 21 Jan 2019 10:30 PM GMT (Updated: 21 Jan 2019 9:22 PM GMT)

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் எல்.கே.ஜி. மற்றும் யூ.கே.ஜி. வகுப்புகளை அமைச்சர் பாஸ்கரன் தொடங்கி வைத்தார்.

சிவகங்கை,

மாவட்டத்தில் உள்ள 69 அங்கன்வாடி மையங்கள் அந்தந்த பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிகளுடன் சேர்க்கப்பட்டுள்ளது. அவை நேற்று முதல் எல்.கே.ஜி. மற்றும் யூ.கே.ஜி. வகுப்புக்களாக மாற்றப்பட்டு செயல்பட தொடங்கியுள்ளது. இதன் தொடக்கவிழா சிவகங்கையை அடுத்த தமராக்கி வடக்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கலெக்டர் ஜெயகாந்தன் தலமையில் நடைபெற்றது. உதவி தொடக்கக்கல்வி அதிகாரி பால்ராஜ் வரவேற்று பேசினார்.

இதில் கலந்து கொண்ட அமைச்சர் பாஸ்கரன் புதிய வகுப்புகளை தொடங்கி வைத்து பேசியதாவது:– கிராமபுறங்களில் உள்ள மாணவ–மாணவிகள் நகர் புறங்களில் உள்ளவர்களுக்கு ஈடாக ஆங்கிலவழிக்கல்வி படிக்க வேண்டும் என்பதற்காக தமிழகம் முழுவதும் அங்கன்வாடி மையங்களை ஊராட்சி ஒன்றிய பள்ளிகளுடன் இணைத்து அதில் எல்.கே.ஜி. மற்றும் யூ.கே.ஜி. வகுப்புக்களை தொடங்கி ஆங்கிலவழிக்கல்வி தொடங்கப்பட்டுள்ளது.

நகர் புறங்களில் உள்ள பள்ளிகளில் இதுவரை கட்டணம் செலுத்திபடித்தவர்கள் இனி தங்கள் கிராமங்களில் உள்ள பள்ளிகளில் கட்டணமின்றி படிக்கலாம். அத்துடன் அவர்கள் தொடர்ந்து 8–ம் வகுப்பு வரை ஒரே இடத்தில் தரமான கல்வியை படிக்கவும் வழி செய்யப்பட்டுள்ளது.

நமது கிராமம் உள்பட பல கிராமங்களில் மக்கள் கல்வியில் பின்தங்கியுள்ளனர். நமக்கு படிப்பு முக்கியம், நம்முடைய வருங்கால சந்ததியினர் நன்றாக இருக்க வேண்டும் என்றால் அவர்களை படிக்க வைக்க வேண்டும். இந்த பகுதியில் குடிநீர் பிரச்சினை உள்ளதாக தெரிவித்தனர். இங்கு ரூ.2 லட்சம் மதிப்பில் குடிநீர் வசதி செய்யப்படவுள்ளது. மேலும் சிவகங்கையில் இருந்து தமராக்கி வரை 2 வழிச்சாலை அமைக்கப்படவுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில் முதன்மை கல்வி அதிகாரி பாலுமுத்து மாவட்டக்கல்வி அதிகாரி ராஜேந்திரன் சிவகங்கை தாசில்தார் ராஜா, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் ரவி, அய்யனார், கூட்டுறவு சங்க இயக்குனர்கள் சசிகுமார், பலராமன், பாண்டி, காசி அம்பலம், சிவசுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story