விபத்து வழக்குகளில் இழப்பீடு வழங்காததால் 8 அரசு பஸ்கள் ஜப்தி தர்மபுரியில் பரபரப்பு


விபத்து வழக்குகளில் இழப்பீடு வழங்காததால் 8 அரசு பஸ்கள் ஜப்தி தர்மபுரியில் பரபரப்பு
x
தினத்தந்தி 21 Jan 2019 11:00 PM GMT (Updated: 21 Jan 2019 9:35 PM GMT)

விபத்து வழக்குகளில் இழப்பீடு வழங்காததால் தர்மபுரியில் 8 அரசு பஸ்களை கோர்ட்டு ஊழியர்கள் ஜப்தி செய்தனர்.

தர்மபுரி,

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள நல்லாம்பட்டியை சேர்ந்தவர் கன்னியப்பன். இவர் கடந்த 2014-ம் ஆண்டு சர்க்கரை ஆலை அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அரசு பஸ் மோதி அவர் உயிரிழந்தார். இதையடுத்து கன்னியப்பனின் குடும்பத்தினர் விபத்து இழப்பீடு கோரி தர்மபுரி மாவட்ட கூடுதல் அமர்வு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

வழக்கு விசாரணையின் முடிவில் கன்னியப்பன் குடும்பத்தினருக்கு ரூ.8 லட்சத்து 73 ஆயிரத்து 500 இழப்பீடு வழங்க அரசு போக்குவரத்து கழகத்திற்கு கோர்ட்டு உத்தரவிட்டது. ஆனால் இழப்பீடு வழங்காததால் நிறைவேற்றல் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து வட்டியுடன் சேர்த்து ரூ.11 லட்சத்து 3 ஆயிரத்து 688 இழப்பீடு வழங்க கோர்ட்டு உத்தரவிட்டது. இதன்படி இழப்பீடு வழங்காததால் அரசு பஸ்களை ஜப்தி செய்ய கோர்ட்டு உத்தரவிட்டது.

இதேபோன்று கடந்த 2014-ம் ஆண்டு தர்மபுரியில் இருந்து சேலம் சென்ற அரசு பஸ் தொப்பூர் அருகே பூங்கொடி என்பவர் மீது மோதியது. இந்த விபத்தில் அவர் உயிரிழந்தார். இதுதொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் பூங்கொடியின் குடும்பத்தினருக்கு ரூ.9 லட்சத்து 36 ஆயிரத்து 960 இழப்பீடு வழங்க கோர்ட்டு உத்தரவிடப்பட்டது. இதன்படி இழப்பீடு வழங்காததால் அரசு பஸ்சை ஜப்தி செய்ய கோர்ட்டு உத்தரவிட்டது.

இதேபோல் பாலக்கோடு அருகே உள்ள அண்ணாமலை அள்ளியில் 2016-ம் ஆண்டு அரசு டவுன் பஸ்சில் இருந்து மாதம்மாள் இறங்க முயன்றார். அப்போது அவர் பஸ் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தார். இதுதொடர்பான வழக்கில் மாதம்மாள் குடும்பத்தினருக்கு ரூ.4 லட்சத்து 17 ஆயிரத்து 849 இழப்பீடு வழங்க கோர்ட்டு உத்தரவிட்டது. இதன்படி இழப்பீடு வழங்காததால் அரசு பஸ்களை ஜப்தி செய்ய கோர்ட்டு உத்தரவிட்டது.

தர்மபுரி அருகே உள்ள எம்.ஒட்டப்பட்டியை சேர்ந்த தொழிலாளிகளான நாகராஜ், முருகன் ஆகியோர் கடந்த 2014-ம் ஆண்டு செம்மனஅள்ளி அருகே மோட்டார் சைக்கிளில் சென்றனர். அப்போது அந்த வழியாக வந்த அரசு பஸ் மோதிய விபத்தில் அவர்கள் 2 பேரும் படுகாயமடைந்து உயிரிழந்தனர். இதுதொடர்பாக மாவட்ட கூடுதல் அமர்வு கோர்ட்டில் நடைபெற்ற வழக்கில் நாகராஜ் குடும்பத்திற்கு வட்டியுடன் சேர்த்து ரூ.11 லட்சத்து 35 ஆயிரத்து 418-ம், முருகனின் குடும்பத்தினருக்கு வட்டியுடன் சேர்த்து ரூ.10 லட்சத்து 61 ஆயிரத்து 719-ம் இழப்பீடாக வழங்க கோர்ட்டு உத்தரவிட்டது.

இதன்படி இழப்பீடு வழங்கப்படாததால் அரசு பஸ்களை ஜப்தி செய்ய கோர்ட்டு உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து தர்மபுரி பஸ்நிலையத்திற்கு நேற்று கோர்ட்டு அமீனாக்கள் வந்தனர். அவர்கள் விபத்து வழக்குகளில் இழப்பீடு வழங்காதது தொடர்பாக மொத்தம் 8 அரசு பஸ்களை ஜப்தி செய்தனர். இதனால் பஸ் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story