குடியரசு தினத்தன்று 450 கிராம பஞ்சாயத்துக்களிலும் கிராம சபை கூட்டங்களை முறையாக நடத்த வேண்டும் கலெக்டரிடம் மக்கள் நீதி மய்யம் மனு


குடியரசு தினத்தன்று 450 கிராம பஞ்சாயத்துக்களிலும் கிராம சபை கூட்டங்களை முறையாக நடத்த வேண்டும் கலெக்டரிடம் மக்கள் நீதி மய்யம் மனு
x
தினத்தந்தி 22 Jan 2019 3:45 AM IST (Updated: 22 Jan 2019 3:23 AM IST)
t-max-icont-min-icon

வருகிற குடியரசு தினத்தன்று மாவட்டம் முழுவதும் உள்ள 450 கிராம பஞ்சாயத்துக்களிலும் கிராம சபை கூட்டங்களை முறையாக நடத்த நடவடிக்கை எடுக்க கோரி மக்கள் நீதிமய்யம் சார்பில் கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது.

விருதுநகர்,

மக்கள் நீதி மய்யம் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் காளிதாஸ், கலெக்டரிடம் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:–

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 450 கிராம பஞ்சாயத்துக்களிலும், கிராம சபை கூட்டம் வருகிற 26–ந்தேதி குடியரசு தினத்தன்று நடைபெற உள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட பஞ்சாயத்து தலைவர்கள் இல்லாத நிலையில் பஞ்சாயத்து செயலர்களே கிராமசபை கூட்டத்தை நடத்துகின்றனர். கிராம சபை கூட்டம் நடைபெறுவது தொடர்பாக கிராம மக்களுக்கு கூட்டம் நடைபெறும் இடம் மற்றும் நேரம் குறித்து முன்கூட்டியே அறிவிக்க வேண்டும். ஆனால் இது குறித்து முறையாக அறிவிக்கப்படுவது இல்லை.

கடந்த அக்டோபர் 2–ந்தேதி காந்தி ஜெயந்தி அன்று நடந்த கிராம சபை கூட்டங்களின் போது பல கிராம பஞ்சாயத்துக்களில் பள்ளி குழந்தைகளையும், 100 நாள் வேலை திட்ட பணியாளர்களையும் மட்டும் வைத்து கூட்டத்தை நடத்தி முடித்துவிட்டு பதிவேட்டில் மட்டும் அதிக பேர் கலந்து கொண்டதாக கையெழுத்து பெறப்பட்டுள்ளது.

மேலும் இக்கூட்டத்தில் வரவு–செலவு கணக்குகள் முறையாக சமர்ப்பிக்கப்படுவதில்லை. எந்த நோக்கத்திற்காக கிராமசபை கூட்டம் நடத்தப்படுகிறதோ அந்த நோக்கம் நிறைவேறாத வகையில் கண் துடைப்புக்காக கிராமசபை கூட்டம் நடத்தப்படும் நிலை உள்ளது.

எனவே வருகிற 26–ந்தேதி அன்று குடியரசு தினத்தையொட்டி அனைத்து கிராம பஞ்சாயத்துக்களிலும் கிராமசபை கூட்டங்கள் முறையாக நடத்தப்பட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம். இக்கிராம சபை கூட்டங்களில் வரவு–செலவு அறிக்கையை படித்து ஒப்புதல் பெறவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கிராம சபை கூட்டங்களை கண்காணிக்க அலுவலர்களை நியமிப்பதோடு, நிகழ்வுகளை வீடியோ பதிவு செய்யவும் ஏற்பாடு செய்ய வேண்டுகிறோம்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.


Next Story