மதுரை ரெயில் நிலையத்தில் ரூ.9½ லட்சம் செலவில் பிரமாண்ட தேசிய கொடி குடியரசு தினத்தன்று பறக்க விடப்படுகிறது


மதுரை ரெயில் நிலையத்தில் ரூ.9½ லட்சம் செலவில் பிரமாண்ட தேசிய கொடி குடியரசு தினத்தன்று பறக்க விடப்படுகிறது
x
தினத்தந்தி 21 Jan 2019 10:45 PM GMT (Updated: 21 Jan 2019 10:16 PM GMT)

மதுரை ரெயில் நிலையத்தில் ரூ.9½ லட்சம் செலவில் பிரமாண்ட தேசிய கொடிக்காக 100 அடி உயர பில்லர் அமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளது.

மதுரை,

மத்திய அரசின் தனியார்மயமாக்கல் கொள்கையின் படி, மதுரை ரெயில் நிலையத்தை தனியார்மயமாக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இதில் தற்போது, மத்திய சுற்றுலா மேம்பாட்டு திட்டத்தின் கீழ், மதுரை மற்றும் ராமேசுவரம் ரெயில் நிலையத்தை அழகுபடுத்தும் பணிகள் நடந்து வருகின்றன. இதற்காக ரெயில் நிலையத்தின் கிழக்கு நுழைவுவாயில் பகுதியில் உள்ள பூங்கா அகற்றப்பட்டு, பேவர் பிளாக் கற்கள் பதிக்கப்பட்டு வருகின்றன. ரெயில் நிலையத்தில், மணிக்கணக்கு அடிப்படையிலான இருசக்கர வாகனம் மற்றும் கார் பார்க்கிங் வசதிகள் செய்யப்படுகின்றன. இந்த பணிகள் அனைத்தும் வருகிற பிப்ரவரி மாதம் 15–ந் தேதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அத்துடன், அழகுபடுத்தும் பணிகளில் மிக உயரமான கம்பத்தில் பெரிய அளவிலான தேசிய கொடி பறக்க விடப்பட உள்ளது. இதற்காக நாடு முழுவதும் ஏ–1 என்று சொல்லப்படும் 72 ரெயில் நிலையங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இதில், நாட்டில் முதல்முறையாக தென் மேற்கு மண்டல ரெயில்வேயில், பெங்களூரு ரெயில் நிலையத்தில் மிக பிரமாண்ட தேசிய கொடி பறக்க விடப்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து தென்னக ரெயில்வே மண்டலத்தில் மதுரை ரெயில்நிலையத்தில் தேசிய கொடி பறக்க விடப்பட உள்ளது. இதற்கான கம்பம் நடும் பணிகள் நேற்று முழு வீச்சில் தொடங்கின. இந்த பணிகள் இன்று(செவ்வாய்க்கிழமை) முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக ரெயில்நிலையத்தின் கிழக்கு நுழைவுவாயில் பகுதியில், பூமிக்கு அடியில் சுமார் 7 அடி ஆழத்தில் கான்கிரீட் பில்லர் அமைக்கப்பட்டுள்ளது. அதன் மீது கொடிக்கம்பம் பொருத்தப்பட உள்ளது. இந்த கொடிக்கம்பம் 100 அடி உயரம் கொண்டது. 2 டன் எடை கொண்டது. இதில் பறக்க விடப்படும் தேசிய கொடியானது வினைல் பாலிஸ்டர் துணியால் செய்யப்பட்டுள்ளது.

அதன் நீளம் 30 அடியும், உயரம் 20 அடியும் உள்ளது. கொடியை ஏற்றி, இறக்க தனியாக மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. இந்த கொடியானது, வருகிற 26–ந் தேதி குடியரசு தினத்தன்று ஏற்றப்பட உள்ளது. கொடிக்கம்பத்தை சுற்றிலும் சிறிய அளவிலான பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இந்த கொடிக்கம்பம் ரூ.9½ லட்சம் செலவில் அமைக்கப்படுகிறது. மதுரையை தொடர்ந்து, சென்னை எழும்பூர், சென்னை சென்டிரல், கோவை, திருவனந்தபுரம், திருச்சூர், எர்ணாகுளம், கோழிக்கோடு ஆகிய ரெயில்நிலையங்களில் கொடிக்கம்பம் அமைக்கப்பட உள்ளது. தேசியக்கொடியை பராமரிக்கும் பொறுப்பு ரெயில்வே பாதுகாப்பு படை போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.


Next Story