தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் போலீசார், அதிகாரிகளுக்கு உள்ள தொடர்பு குறித்து விசாரணை மதுரை ஐகோர்ட்டில் சி.பி.ஐ. பதில்
தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் போலீசார், அதிகாரிகளுக்கு தொடர்பு உள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக மதுரை ஐகோர்ட்டில் சி.பி.ஐ. போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.
மதுரை
தூத்துக்குடியைச் சேர்ந்த அர்ச்சுனன் உள்பட 7 பேர், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருந்ததாவது:–
தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடவும், துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்கு காரணமான காவல் துறையினர் மற்றும் அதிகாரிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்யவும் மதுரை ஐகோர்ட்டில் ஏராளமான வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. இதை விசாரித்த ஐகோர்ட்டு, தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்றியும், இந்த விவகாரத்தில் போலீசார் மற்றும் அதிகாரிகள் மீது அளிக்கப்பட்டுள்ள புகார்கள் தொடர்பாகவும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தவும் உத்தரவிட்டனர்.
ஆனால் எனது புகாரின்பேரில் காவல் துறையினர், அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்படவில்லை. துப்பாக்கிச்சூடு தொடர்பாக சிப்காட் போலீசார் பதிவு செய்திருந்த வழக்கில் 8.10.2018 அன்று மீண்டும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தனர்.
காவல்துறையினர் மற்றும் அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி நாங்கள் அளித்த புகாரின் பேரில் சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்யாதது கோர்ட்டு உத்தரவை அவமதிப்பு செய்வதாகும். இதனால் சி.பி.ஐ. இணை இயக்குனர் பிரவீன் சின்ஹா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுக்களில் கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதிகள் கே.கே.சசிதரன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, சி.பி.ஐ. போலீஸ் சூப்பிரண்டு சரவணன் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘தூத்துக்குடியில் கடந்த ஆண்டு மே மாதம் 22, 23–ந்தேதிகளில் ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது தொடர்பாக ஐகோர்ட்டு உத்தரவின்படி சிப்காட் போலீசார் பதிவு செய்த வழக்கின் அடிப்படையில் 20 அமைப்புகளை சேர்ந்தவர்கள் மீது சி.பி.ஐ. மீண்டும் வழக்கு பதிவு செய்தது.
மனுதாரரின் புகாரின் பேரில் அடையாளம் தெரியாத காவல்துறை, வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு எதிராக சி.பி.ஐ. வழக்குபதிவு செய்துள்ளது.
இந்த வழக்கின் விசாரணைக்காக எஸ்.பி. தலைமையில் பிற மாநில சி.பி.ஐ. கிளைகளில் பணிபுரியும் அதிகாரிகளை கொண்டு சிறப்பு படை அமைக்கப்பட்டுள்ளது. துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக முழு உண்மையை கண்டுபிடிப்பதற்காக தூத்துக்குடி மில்லர்புரத்தில் முகாம் அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் தனிநபர்கள், அரசு ஊழியர்களுக்கு தொடர்பு இருப்பது, உடந்தையாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். மனுதாரர் தனது புகாரில் தெரிவித்துள்ள நபர்களின் தொடர்பு குறித்தும் விசாரித்து வருகிறோம்‘ என கூறப்பட்டிருந்தது.
இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், மனுதாரரின் புகாரையும் முதல் தகவல் அறிக்கையில் சேர்க்க சி.பி.ஐ.க்கு உத்தரவிட்டு, இந்த வழக்கை முடித்து வைத்தனர்.