சிவக்குமார சுவாமி மறைவு: பிரதமர் மோடி- தலைவர்கள் இரங்கல் ஏழைகளின் மேம்பாட்டிற்காக பாடுபட்டவர் என புகழஞ்சலி


சிவக்குமார சுவாமி மறைவு: பிரதமர் மோடி- தலைவர்கள் இரங்கல் ஏழைகளின் மேம்பாட்டிற்காக பாடுபட்டவர் என புகழஞ்சலி
x
தினத்தந்தி 22 Jan 2019 3:51 AM IST (Updated: 22 Jan 2019 3:51 AM IST)
t-max-icont-min-icon

சிவக்குமார சுவாமி மறைவுக்கு பிரதமர் மோடி உள்பட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். அவர் ஏழைகளின் மேம்பாட்டிற்காக பாடுபட்டவர் என புகழஞ்சலி செய்தனர்.

பெங்ளூரு,

துமகூரு சித்தகங்கா மடாதிபதி சிவக்குமார சுவாமி நேற்று மரணமடைந்தார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

பிரதமர் மோடி வெளியிட்டுள்ள தனது இரங்கல் செய்தியில், “ஏழை மக்களின் மேம்பாட்டிற்காக சிவக்குமார சுவாமி பாடுபட்டார். வறுமை, பசியை, சமூக அநீதியை போக்க அவர் அரும்பாடுபட்டார்” என்று குறிப்பிட்டுள்ளார்.

பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா வெளியிட்டுள்ள அறிக்கையில், “மனித குலத்திற்கு சிவக்குமார சுவாமியின் வாழ்க்கை ஒரு பாடம். அவர் இந்த சமுதாயத்தில் ஏழை மக்களின் மேம்பாட்டிற்காக சேைவயாற்றினார். அவரது பாதையில் நாம் தொடர்ந்து நடைபோட அவர் நமக்கு ஆசி வழங்குவார். இந்த சோகமான நேரத்தில் அவரது பக்தர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் மூத்த தலைவி சோனியா காந்தி வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில், “ஏழை மக்களின் மேம்பாட்டிற்காக சிவக்குமார சுவாமி தனது வாழ்க்கை முழுவதும் பாடுபட்டுள்ளார். அவர் நம்மிடையே 111 ஆண்டுகள் வாழ்ந்தது நமக்கு கிடைத்த பாக்கியம் ஆகும். அவரது மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறேன்” என்றார்.

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில், “சிவக்குமார சுவாமியின் மறைவு செய்தி கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன். அனைத்து மதங்களை சேர்ந்த லட்சக்கணக்கான இந்தியர்கள் அவர் மீது மரியாதை வைத்திருந்தனர். அவரது மறைவால் ஆன்மிக உலகில் மிகப்பெரிய வெற்றிடம் ஏற்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே டெல்லியில் நிருபா்களிடம் கூறுகையில், “சிவக்குமார சுவாமியின் மரணம் எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் ஆயிரக்கணக்கான ஏழை குழந்தைகளுக்கு இலவசமாக கல்வி வழங்கி வந்தார். அவர்களுக்கு உணவு, உறைவிடம் உள்ளிட்ட வசதிகளையும் ஏற்படுத்தி கொடுத்துள்ளார். அவருக்கு மத்திய அரசு, பாரத ரத்னா விருது வழங்க வேண்டும். சிவக்குமார சுவாமிக்கு மாநில அரசு நினைவு மண்டபம் அமைக்க வேண்டும்” என்றார்.

Next Story