வெவ்வேறு விபத்துகளில் லாரி டிரைவர் உள்பட 2 பேர் பலி


வெவ்வேறு விபத்துகளில் லாரி டிரைவர் உள்பட 2 பேர் பலி
x
தினத்தந்தி 21 Jan 2019 11:01 PM GMT (Updated: 21 Jan 2019 11:01 PM GMT)

திண்டுக்கலில் வெவ்வேறு விபத்துகளில் லாரி டிரைவர் உள்பட 2 பேர் பலியாகினர்.

கொடைரோடு, 

கொடைரோடு அருகே உள்ள ராமன்செட்டிபட்டியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 34). லாரி டிரைவர். நேற்று முன்தினம் இரவு ரமேஷ் மோட்டார் சைக்கிளில் மதுரை மாவட்டம் வாடிப்பட்டிக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பி வந்துகொண்டிருந்தார். பள்ளப்பட்டி அருகே வந்தபோது, அந்த வழியாக வத்தலக்குண்டுவில் இருந்து மதுரை நோக்கி சென்ற வேன் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த ரமேஷ், மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் பரிதாபமாக இறந்தார்.

அம்மையநாயக்கனூரை சேர்ந்தவர் மரியதாஸ் (75). இவருடைய தம்பி பவுல்சின்னையா (70). நேற்று இருவரும் மோட்டார் சைக்கிளில் அம்மையநாயக்கனூர் கடை வீதிக்கு வந்து விட்டு, வீட்டுக்கு திரும்பி வந்துகொண்டிருந்தனர். மதுரை-திண்டுக்கல் சாலையில் சென்ற போது, அந்த வழியாக மதுரையில் இருந்து ஒட்டன்சத்திரம் நோக்கி சென்ற மற்றொரு மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் படுகாயமடைந்த மரியதாசும், பவுல்சின்னையாவும் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். பின்னர் மரியதாஸ் மட்டும் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த ரமேஷ் காயமின்றி தப்பினார்.

கொடைரோடு அருகே உள்ள சந்தோஷபுரத்தை சேர்ந்தவர் மருதுபாண்டியன் (75). நேற்று முன்தினம் இவர் மோட்டார் சைக்கிளில் பள்ளப்பட்டிக்கு வந்தார். பின்னர் சந்தோஷபுரத்துக்கு திரும்பி வந்துகொண்டிருந்தார். பள்ளப்பட்டி பிரிவு அருகே சென்ற போது, அந்த வழியாக திண்டுக்கல்லில் இருந்து மதுரை நோக்கி சென்ற வேன் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் படுகாயமடைந்த மருதுபாண்டியன் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவர், தி.மு.க. முன்னாள் நிலக்கோட்டை ஒன்றிய செயலாளர் ஆவார்.

Next Story