உதவித்தொகை வழங்குவதில் முறைகேடு கலெக்டரிடம் பொதுமக்கள் மனு
உதவித்தொகை வழங்குவதில் முறைகேடு நடப்பதாக கலெக்டரிடம் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைகேட்பு கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன் தலைமை தாங்கி பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்றார். முதியோர் உதவித்தொகை, கல்விக்கடன், வீட்டுமனைப்பட்டா, பசுமை வீடுகள், திருமண உதவித்தொகை, குடும்ப அட்டை, பட்டா மாற்றம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மொத்தம் 368 பேர் மனுக்களை கொடுத்தனர். இந்த மனுக்கள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பிரியா, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் சாந்தி, மாவட்ட வழங்கல் அலுவலர் ராஜேந்திரன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) கருணாநிதி, உதவி ஆணையர் (கலால்) ராமு, ஊராட்சிகளின் உதவி இயக்குனர் ஸ்ரீனிவாசன், முன்னோடி வங்கி மேலாளர் சேதுராமன் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
விழுப்புரம் அருகே ப.வில்லியனூர் மேட்டுக்காலனி பகுதியை சேர்ந்த பொதுமக்கள், மாவட்ட கலெக்டரிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:–
எங்கள் பகுதியில் மாற்றுத்திறனாளி, விதவை, முதியோர்கள் என 500–க்கும் மேற்பட்டோர் அரசின் சார்பில் மாதாந்திர உதவித்தொகையை பெற்று வருகின்றனர். இந்த தொகையை மாதந்தோறும் மோட்சகுளத்தில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் தற்காலிகமாக பணியாற்றி வரும் ப.வில்லியனூரை சேர்ந்த ஒருவர் மூலமாக பெற்று வருகிறோம். ஆனால் அவர், அரசு உதவித்தொகையை(ஆயிரம் ரூபாய்) எங்களுக்கு முழுமையாக கொடுக்காமல் ஒவ்வொருவரிடமும் ரூ.30–ஐ பிடித்துக்கொண்டு மீதமுள்ள ரூ.970–ஐ மட்டுமே கொடுத்து முறைகேட்டில் ஈடுபட்டு வருகிறார். எனவே அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தனர். மனுவை பெற்ற கலெக்டர், இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.
விக்கிரவாண்டி தாலுகா கல்யாணம்பூண்டி கிராம மக்கள், கலெக்டரிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:–
கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக கல்யாணம்பூண்டியில் 100 குடும்பத்தினர் அரசு புறம்போக்கு இடத்தில் வசித்து வருகிறோம். நாங்கள் அன்றாடம் கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வருகிறோம். எங்களுக்கு குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை என அனைத்தும் உள்ளது. ஆனால் இதுவரை வீட்டுமனைப்பட்டா இல்லாமல் வறுமையில் வாழ்ந்து வருகிறோம். எங்களுக்கு வீட்டுமனைப்பட்டா கேட்டு பலமுறை கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தும் இதுநாள் வரையிலும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே தமிழக அரசு அறிவித்த சிறப்பு திட்டத்தின் கீழ் எங்களுக்கு தலா 3 சென்ட் இலவச வீட்டுமனைப்பட்டா வழங்க மாவட்ட கலெக்டர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தனர். மனுவை பெற்ற கலெக்டர், இதுகுறித்து பரிசீலனை செய்து நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.