வேலூர் மாவட்ட கருவூல கணக்குத்துறையின் மென்பொருள் பயன்பாடு - கலெக்டர் ராமன் தொடங்கி வைத்தார்


வேலூர் மாவட்ட கருவூல கணக்குத்துறையின் மென்பொருள் பயன்பாடு - கலெக்டர் ராமன் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 21 Jan 2019 11:36 PM GMT (Updated: 2019-01-22T05:06:36+05:30)

வேலூர் மாவட்ட கருவூல கணக்குத்துறையில் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை திட்டத்தின் மென்பொருள் பயன்பாட்டினை கலெக்டர் ராமன் தொடங்கி வைத்தார்.

வேலூர்,

கருவூல கணக்குத்துறையின் மூலம் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை திட்டத்தின் மென்பொருள் பயன்பாட்டினை சென்னை தலைமை செயலகத்தில் கடந்த 10-ந் தேதி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

முதல் கட்டமாக அன்று 14 மாவட்டங்கள் மற்றும் 4 சம்பள கணக்கு அலுவலகங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டது. இரண்டாவது கட்டமாக நேற்று 17 மாவட்டங்கள் மற்றும் 5 சம்பள கணக்கு அலுவலகங்களில் நடைமுறை படுத்தப்பட்டது.

அதன்படி வேலூர் மாவட்ட கருவூலத்தில் மென்பொருள் பயன்பாட்டினை கலெக்டர் ராமன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். மேலும் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கு ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை திட்டத்தின் மென்பொருள் பயன்பாட்டு குறியீடு மற்றும் கடவுச்சொல் ஆகியவற்றையும் வழங்கினார்.

இந்த திட்டத்தின் மூலம் அரசு ஊழியர்களின் பணிப்பதிவேடுகள் பராமரிப்பு, பட்டியல் தயாரிப்பு மற்றும் ஒப்படைக்கும் பணி உள்ளிட்டவை எளிமையான முறையிலும், காலவிரயத்தை தவிர்க்கும் வகையிலும் இணையதளம் மூலம் செயல்படுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது.

நேற்று நடந்த நிகழ்ச்சியில் கருவூல கணக்குத்துறையின் வேலூர் மண்டல இணை இயக்குனர் புவனேஸ்வரி, கருவூல அலுவலர் புஷ்பா மற்றும் பணியாளர்கள், அரசு அலுவலர்கள். ஊழியர்கள் கலந்துகொண்டனர்.


Next Story