வெவ்வேறு இடங்களில் இருந்து கேரளாவுக்கு கடத்த முயன்ற 3 டன் ரே‌ஷன் அரிசி பறிமுதல்


வெவ்வேறு இடங்களில் இருந்து கேரளாவுக்கு கடத்த முயன்ற  3 டன் ரே‌ஷன் அரிசி பறிமுதல்
x
தினத்தந்தி 22 Jan 2019 11:00 PM GMT (Updated: 22 Jan 2019 2:42 PM GMT)

குமரி மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் இருந்து கேரளாவுக்கு கடத்த முயன்ற 3 டன் ரே‌ஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

அழகியமண்டபம்,

குமரி மாவட்ட பறக்கும் படை தனி தாசில்தார் ராஜசேகர் தலைமையில், துணை தாசில்தார் முருகன், வருவாய் ஆய்வாளர் ராஜ்குமார் ஆகியோர் படந்தாலுமூடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக சென்ற காரை நிறுத்துமாறு சைகை காட்டினர்.

அதிகாரிகளை கண்டதும் டிரைவர் காரை நிறுத்திவிட்டு தப்பி ஓடினார். தொடர்ந்து காரை சோதனை செய்தபோது அதில் 1500 கிலோ ரே‌ஷன் அரிசி இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து அரிசியையும், காரையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

அதைத்தொடர்ந்து அதிகாரிகள் அழகியமண்டபம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக சென்ற இன்னொரு காரை நிறுத்துமாறு கை காட்டினர். ஆனால், டிரைவர் காரை நிறுத்தாமல் வேகமாக ஓட்டி சென்றார். இதனால், அதிகாரிகள் தங்களது ஜீப்பில் துரத்தி சென்றனர்.

சுமார் 12 கிலோ மீட்டர் தூரம் தூரத்திசென்று மார்த்தாண்டம் மேம்பாலம் முடிவில், நெடுஞ்சாலை ரோந்து போலீசாரின் உதவியுடன் காரை மடக்கி பிடித்தனர். உடனே, டிரைவர் இறங்கி தப்பி  ஓட முயன்றார். அவரை மடக்கிப்பிடித்தனர். காரை சோதனை செய்த போது அதில் சிறு, சிறு மூடைகளில் சுமார் 1500 கிலோ ரே‌ஷன் அரிசி இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து அரிசி மூடைகளை வாகனத்துடன் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 

இதுபோல், கொல்லங்கோடு பகுதியில் மோட்டார் சைக்கிளில் கடத்திய 100 கிலோ ரே‌ஷன் அரிசியையும், மோட்டார் சைக்கிளையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

3 இடங்களில் பறிமுதல் செய்யப்பட்ட 3,100 கிலோ ரே‌ஷன் அரிசியை காப்புக்காடு அரசு குடோனிலும், வாகனங்களை கல்குளம் தாலுகா அலுவலத்திலும் ஒப்படைத்தனர். இதுதொடர்பாக அதிகாரிகள் நடத்திய முதற்கட்ட விசாரணையில் அரிசியை கேரளாவுக்கு கடத்தி செல்ல முயன்றது தெரிய வந்தது. இதையடுத்து இந்த கடத்தலில் தொடர்புடையவர்கள் யார்–யார்? என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story