9 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் போராட்டம்


9 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் போராட்டம்
x
தினத்தந்தி 23 Jan 2019 4:30 AM IST (Updated: 22 Jan 2019 10:48 PM IST)
t-max-icont-min-icon

9 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.

திருவள்ளூர்,

திருவள்ளூரில் உள்ள தாசில்தார் அலுவலக வளாகத்தில் நேற்று ஜாக்டோ- ஜியோ அமைப்பு சார்பில் 9 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி போராட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு ஜாக்டோ- ஜியோ அை-மைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் தாஸ் தலைமை தாங்கினார். தமிழ்நாடு அரசு ஊழியர், ஆசிரியர்கள் நல கூட்டமைப்பின் மாநில தலைவர் அருணன், அரசு ஊழியர் சங்கத்தின் மாநில பொருளாளர் தங்கராஜ், தலைமை ஆசிரியர்கள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஞானசேகர், அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட பொருளாளர் பாண்டுரங்கன், மாவட்ட துணை செயலாளர் மெல்கிராஜாசிங், ருக்மாங்கதன், பாண்டியன், கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் 500-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டு உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளியுடன் தொடக்க பள்ளியை இணைத்து தமிழகம் முழுவதும் உள்ள 3,500 பள்ளிகளை மூடும் திட்டத்தை தமிழக அரசு உடனடியாக கைவிட வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டுவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்,காலமுறை ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்பட 9 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.

காஞ்சீபுரம் காவலான் கேட் அருகே நடந்த போராட்டத்திற்கு, ஜாக்டோ அமைப்பின் நிர்வாகி ஜெபநேசன் தலைமை வகித்தார். இதில், தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாவட்ட செயலாளர் தி.சேகர், ஜியோ விக்டர் சுரேஷ்குமார், தாமோதரன், பாஸ்கரன், திருமலைவாசன், விநாயகம், கமலக்கண்ணன் உள்பட பல்வேறு சங்கங்களின் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

ஊத்துக்கோட்டை தாலுகா அலுவலக வளாகத்தில் நடைபெற்ற போராடத்துக்கு ஜாக்டோ- ஜியோ திருவள்ளூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் இளங்கோவன் தலைமை தாங்கினார். வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட இணைச் செயலாளர் ரவி வரவேற்றார். தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு மாவட்ட துணைச் செயலாளர் செங்குட்டுவன் சிறப்பு பார்வையாராக கலந்து கொண்டார். வட்டாரத் தலைவர் பாரதிதாசன் நன்றி கூறினார். இதில் 500-க்கும் மேற்பட்ட ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் கலந்து கொண்டனர்.

கும்மிடிப்பூண்டி தாசில்தார் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் வட்ட செயலாளர் சிவகுமார் தலைமை தாங்கினார். ஆர்்பாட்டத்திற்கு நிர்வாகிகள் வள்ளிமுத்து, ஜெயகுருநாதன், முரளி, ரவி மற்றும் சேகர் முன்னிலை வகித்தனர்.

பொன்னேரி ஆர்.டி.ஓ. அலுவலக வளாகத்தில் ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் பட்டதாரி ஆசிரியர் சங்க மாநில தலைவர் காத்தவராயன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட தலைவர் உதயகுமார், தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் சங்க மாவட்ட செயலாளர் அருள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வட்டார செயலாளர் தங்கவேல், தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட பொருளாளர் ரவி ஆகியோர் அனைவரையும் வரவேற்றனர்.

Next Story