ரூ.1 கோடி நகை கொள்ளை வழக்கு, என்ஜினீயரிங் பட்டதாரிகள் உள்பட 14 பேர் கைது


ரூ.1 கோடி நகை கொள்ளை வழக்கு, என்ஜினீயரிங் பட்டதாரிகள் உள்பட 14 பேர் கைது
x
தினத்தந்தி 23 Jan 2019 4:45 AM IST (Updated: 22 Jan 2019 11:21 PM IST)
t-max-icont-min-icon

கோவை அருகே நடைபெற்ற ரூ.1 கோடி நகை கொள்ளையில் தொடர்புடைய என்ஜினீயரிங் பட்டதாரிகள் உள்பட 14 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 2½ கிலோ நகைகள் மீட்கப்பட்டன.

கோவை,

கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள கல்யாண் ஜுவல்லர்ஸ் கடையில் இருந்து கோவைக்கு கடந்த 7-ந் தேதி காரில் கொண்டு வந்த ரூ.1 கோடி மதிப்புள்ள தங்க நகைகளை நவக்கரை அருகே வழிமறித்து ஒரு கும்பல் கொள்ளையடித்து சென்றது. அவர்களை பிடிக்க மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. பெரியய்யா, டி.ஐ.ஜி. கார்த்திகேயன் உத்தரவின்பேரில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜன் மேற்பார்வையில் கூடுதல் சூப்பிரண்டுகள் முத்தரசு, அனிதா, துணை சூப்பிரண்டுகள் வேல்முருகன், பால முருகன், கார்த்திகேயன், விஜயகுமார் ஆகியோர் அடங்கிய தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

அவர்கள், தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது வேலூரை சேர்ந்த ஜெயபிரகாஷ், தமிழ்செல்வன் ஆகிய 2 பேர் சென்னை ஜார்ஜ் டவுன் கோர்ட்டில் சரண் அடைந்தனர். அவர்களை காவலில் எடுத்து விசாரித்தபோது கொள்ளை கும்பல் பற்றிய முழு தகவலும் தெரிய வந்தது.

அதைத்தொடர்ந்து, திருச்சூரை சேர்ந்த ரெனூப் (வயது 34), கண்ணன் (38), எர்ணாகுளத்தை சேர்ந்த ஹபீப் (41), பத்தினம்திட்டாவை சேர்ந்த விபின்சங்கீத் (28) இடுக்கியை சேர்ந்த ரின்ஷாத் சித்திக் (24) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களில் ரின்ஷாத் சித்திக், விபின் சங்கீத் ஆகிய 2 பேரும் என்ஜினீயரிங் பட்டதாரிகள் ஆவர்.

கைதான ரெனூப் திருச்சூரில் உள்ள நகைக் கடையில் டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். அவரது நடவடிக்கைகள் சரியில்லாததால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வேலையை விட்டு நிறுத்தி விட்டனர்.

இவருக்கு கடையில் இருந்து நகைகள் வெளியே கொண்டு செல்லும் அனைத்து தகவல்களும் தெரியும். வேலை பறிபோன ஆத்திரத்தில் அவர் தனது நண்பர்களான கண்ணன், ஹபீப் ஆகியோரிடம் நகைகளை கொள்ளையடிக்கும் திட்டத்தை கூறி உள்ளார்.

ஹபீப் தனது நண்பரான ஸ்ரீபெரும்புதூரை சேர்ந்த பைரோஸ்(27) என்பவரை தொடர்பு கொண்டு இந்த கொள்ளைக்கு உதவுமாறு கூறியுள்ளார்.

அவர் சென்னை பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்த சாதிக் உசேன்(25), வேலூரை சேர்ந்த ரிஸ்வான் செரிப்(27), ஸ்ரீபெரும்புதூர் ராஜசேகரன் (33), சென்னை புளியந்தோப்பு அத்திக் பாஷா(25), பெங்களூருவை சேர்ந்த மெகபூப்பாஷா (26), சென்னையை சேர்ந்த அப்துல் ரஹிம்(26) சையது நயிம்(24), மற்றொரு பைரோஸ் (23) மற்றும் சிலருடன் சேர்ந்து இந்த கொள்ளை திட்டத்தை அரங்கேற்றியது கண்டுபிடிக்கப்பட்டது.

கொள்ளை நடத்துவதற்கு முன்பு, நகைக்கடையில் இருந்து நகைகள் வரும் காரை பின்தொடர்ந்து கொள்ளையடிப்பது தொடர்பான முன்னோட்டமும் பார்த்து இருப்பதாக போலீசில் கொள்ளையர்கள் தெரிவித்தனர். இந்த கொள்ளையில் 2 பேர் சரண் அடைந்ததை தவிர போலீஸ் தேடுதல் வேட்டை நடத்தி மொத்தம் 14 பேரை கைது செய்தனர். அவர்கள் அனைவரும் நேற்று கோவை கோர்ட்டில் ஆஜர்படுத்தப் பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

கைதான பைரோசுக்கு செம்மரக்கட்டை கடத்தல் கும்பலுடன் தொடர்பு உள்ளது. கொள்ளையடித்த நகைகளில் பெரும்பகுதியை இவர் தனது அண்ணன் அகமது சலீம், தாய் ஷமா ஆகியோரிடம் கொடுத்துள்ளார். அந்த நகைகளுடன் திருப்பதியில் சுற்றித்திரிந்த அகமது சலீம், ஷமா ஆகியோர் போலீசாரிடம் சிக்கினர்.

3 கிலோ 107 கிராம் தங்க நகைகளும், 251 கிராம் வைர நகைகளும், 243 கிராம் வெள்ளி நகைகளும் கொள்ளையடிக்கப்பட்டன. கொள்ளையர்களிடம் இருந்து 2 கிலோ 488 கிராம் தங்கம் மற்றும் வைர நகைகளும், 243 கிராம் வெள்ளி நகைகளும் மீட்கப்பட்டன.

ஹவாலா பணம் மற்றும் கணக்கில் வராத தங்கத்தை கொள்ளையடித்தால் பறிபோனவர்கள் புகார் செய்ய மாட்டார்கள் என்ற நோக்கத்தில் கொள்ளையடித்ததாகவும், ஆனால் கொள்ளையடித்த பின்னர் தான் கல்யாண் ஜுவல்லர்ஸ் நகை என்றும் முறையாக பில் இருப்பதால் எப்படியும் சிக்கிக்கொள்வோம் என்று கருதித்தான் சிலரை கோர்ட்டில் சரண் அடைய செய்ததாகவும் கைதான கொள்ளையர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

இந்த கொள்ளையில் தொடர்புடைய மேலும் ஒருவரை தேடி வருவதுடன் தற்போது ஆந்திர மாநில சிறையில் இருக்கும் சலீம், அவருடைய தாய் ஷமா ஆகியோரை காவலில் எடுத்து விசாரிக்கவும், அவர்களிடம் இருந்து மீதம் உள்ள நகைகளை மீட்கவும் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story