அரியலூர் மாவட்ட அமைப்பு சாரா தொழிலாளர் நலவாரிய உறுப்பினர் சேர்க்கை சிறப்பு முகாம் இன்று நடக்கிறது


அரியலூர் மாவட்ட அமைப்பு சாரா தொழிலாளர் நலவாரிய உறுப்பினர் சேர்க்கை சிறப்பு முகாம் இன்று நடக்கிறது
x
தினத்தந்தி 23 Jan 2019 4:15 AM IST (Updated: 23 Jan 2019 1:09 AM IST)
t-max-icont-min-icon

அரியலூர் மாவட்ட அமைப்பு சாரா தொழிலாளர் நலவாரிய உறுப்பினர் சேர்க்கை சிறப்பு முகாம் இன்று நடக்கிறது.

அரியலூர்,

தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மற்றும் தொழிலாளர் ஆணையர் ஆகியோர் உத்தரவின்படி, அரியலூர் மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி அறிவுறுத்தலின் பேரில் அமைப்பு சாரா தொழிலாளர்கள் அதிகமாக உள்ள பகுதிகளுக்கு சென்று தொழிலாளர் துறையின் கீழ் இயங்கும் பல்வேறு வாரிய உறுப்பினர் சேர்க்கையை அதிக அளவில் மேற்கொள்ள சிறப்பு முகாம் இன்று (புதன்கிழமை) காலை 10.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை அரியலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கத்தில் நடைபெறவுள்ளது.

இந்த முகாமில் அரியலூர் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள பல்வேறு ஊர்களில் இருந்து அமைப்புசாரா தொழிலாளர் மற்றும் கட்டுமான தொழிலாளர்களிடம் இருந்து பதிவு விண்ணப்பங்கள் மற்றும் புதுப்பித்தல் விண்ணப்பங்கள் மற்றும் நல உதவி கேட்பு மனுக்கள் பெற்றுக் கொள்ளப்படவுள்ளது.

எனவே கடைகள், நிறுவனங்களில் வேலை செய்பவர்கள், தெருசுமை வியாபாரிகள், தையல் கலைஞர்கள், நெசவுத் தொழில், ஆட்டோ மற்றும் டாக்சி ஓட்டுனர்கள் உள்பட 60 வகையான தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களும், கட்டுமானம் சம்பந்தப்பட்ட கொத்தனார், சித்தாள், கம்பி கட்டுனர், பிளம்பர், பெயிண்டர் உள்பட 53 வகையான தொழில்களில் ஈடுபட்டுள்ளவர்களும் உறுப்பினர்களாக சேரலாம். இந்த வகையில் வீட்டு வேலை செய்பவர்களும் தமிழ்நாடு வீட்டுப் பணியாளர்கள் நல வாரியத்தில் உறுப்பினர்களாக சேரலாம்.

18 வயது முடிந்தவர்களும் 60 வயது பூர்த்தியடையாதவர்களும் உறுப்பினர்களாக சேர தகுதியுடையவர்கள். பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் சான்றொப்பமிடப்பட்ட குடும்ப அடையாள அட்டை, ஆதார் அட்டை, வயதுச் சான்று (வாக்காளர் அடையாள அட்டை அல்லது ஓட்டுனர் உரிமம்) மூன்று புகைப்படம், செய்யும் வேலைக்கான உரிய பதிவு விண்ணப்பத்தில் பெறப்பட்ட தேதியுடன் கிராம நிர்வாக அதிகாரியின் கையொப்பம், வங்கி கணக்குப் புத்தகத்தின் நகல் ஆகியவற்றுடன் மேற்படி முகாமில் பங்கேற்று உறுப்பினர்களாக பதிவு செய்து கொள்ளலாம்.

பதிவு பெற்ற உறுப்பினர்களுக்கு வாரிசுகளுக்கான கல்வி உதவித்தொகை (10-ம் வகுப்பு முதல் கல்லூரி படிப்பு வரை) திருமண உதவித்தொகை, பெண் உறுப்பினர்களுக்கு மகப்பேறு உதவித்தொகை, 60 வயது முடிந்தவர்களுக்கு ஓய்வூதியம், இயற்கை மரணம் மற்றும் விபத்து மரண உதவித் தொகை, விபத்து ஊன உதவித் தொகை போன்ற உதவித் தொகைகள் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த தகவலை அரியலூர் மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார். 

Next Story