கூலிப்படையினரிடம் பறிமுதல் செய்யப்பட்ட மோட்டார் சைக்கிளை போலியான பதிவு எண் பயன்படுத்தி ஓட்டி வந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்


கூலிப்படையினரிடம் பறிமுதல் செய்யப்பட்ட மோட்டார் சைக்கிளை போலியான பதிவு எண் பயன்படுத்தி ஓட்டி வந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்
x
தினத்தந்தி 23 Jan 2019 3:45 AM IST (Updated: 23 Jan 2019 2:10 AM IST)
t-max-icont-min-icon

கூலிப்படையினரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட மோட்டார் சைக்கிளை போலியான பதிவு எண்ணை பயன்படுத்தி ஓட்டி வந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரை இடமாற்றம் செய்து போலீஸ் சூப்பிரண்டு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

ஒரத்தநாடு,

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு போலீஸ் நிலையத்தில் கடந்த 10 ஆண்டுகளாக போலீஸ் சூப்பிரண்டின் தனிப்பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வரும் ஒருவர், குற்றப்பின்னணியில் தொடர்புடைய ஒரு மோட்டார் சைக்கிளை போலியான பதிவு எண்ணை பயன்படுத்தி போலீஸ் ஸ்டிக்கருடன் ஓட்டி வருவதாக உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டின் நேரடி கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் சப்-இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமையிலான போலீசார், ஒரத்தநாடு போலீஸ் நிலையத்திற்கு சென்று தனிப்பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வசமிருந்த மோட்டார் சைக்கிளை கைப்பற்றினர். பின்னர் சம்பந்தப்பட்ட சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரிடம் விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் கிடைத்த தகவல்கள் வருமாறு:-

கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரத்தநாடு அருகே உள்ள வன்னிப்பட்டு கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் தங்கியிருந்து போலீசாரிடம் சிக்கிய கூலிப்படையினரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட மோட்டார் சைக்கிளை போலீஸ் ஸ்டிக்கர் ஒட்டி அதில் தனது மகளின் பெயரையும் எழுதி போலியான பதிவு எண்ணை பயன்படுத்தி தான் ஓட்டி வந்ததை அந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஓப்புக்கொண்டுள்ளார். இதனை தொடர்ந்து அந்த மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்த தனிப்பிரிவு போலீசார், விசாரணை அறிக்கையை போலீஸ் சூப்பிரண்டிடம் சமர்ப்பித்தனர்.

இதனையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரன், சம்மந்தப்பட்ட சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரை சேதுபாவாசத்திரம் போலீஸ் நிலையத்திற்கு பணியிட மாற்றம் செய்து உள்ளார்.

இந்த நிலையில் கூலிப்படையினரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட மோட்டார் சைக்கிளை தனிப்பிரிவு சிறப்பு-சப்-இன்ஸ்பெக்டர் போலியான பதிவு எண்ணை பயன்படுத்தி சிக்கிய சம்பவம் இணையதளங்களிலும், வாட்ஸ்-அப்பிலும் வைரலாக பரவி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story