இரவு நேரத்தில் பொதுமக்களை தாக்கி வழிப்பறி: தஞ்சையை கலக்கிய முகமூடி கொள்ளையர்கள் 5 பேர் கைது


இரவு நேரத்தில் பொதுமக்களை தாக்கி வழிப்பறி: தஞ்சையை கலக்கிய முகமூடி கொள்ளையர்கள் 5 பேர் கைது
x
தினத்தந்தி 22 Jan 2019 11:15 PM GMT (Updated: 22 Jan 2019 8:51 PM GMT)

தஞ்சையில் இரவு நேரங்களில் பொதுமக்களை தாக்கி வழிப்பறியில் ஈடுபட்ட 5 முகமூடி கொள்ளையர்களை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 5 செல்போன்கள், 2 மோட்டார்சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தஞ்சாவூர்,

தஞ்சை மாநகரில் வழிப்பறி, கொள்ளை சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வந்தன. அதிலும் குறிப்பாக இரவு நேரத்தில் தான் இந்த சம்பவங்கள் நடந்து வந்தன. இரவு நேரங்களில் தனியாக செல்லும் பொதுமக்களை அடித்து உதைப்பதோடு, அவர்களிடம் இருந்து பணம் மற்றும் செல்போனை பறித்துச்செல்வது அடிக்கடி நடைபெற்று வந்தன.

இது தவிர இருசக்கர வாகனங்களில் தனியாக செல்வோரையும் முகமூடி அணிந்த கொள்ளையர்கள் தாக்கி வாகனங்களை பறித்துச்செல்லும் சம்பவங்கள் அதிகரித்து வந்தன. தஞ்சை கல்லணைக்கால்வாய் சாலை, எம்.கே.மூப்பனார் சாலை, மானம்புச்சாவடி, மேரீஸ்கார்னர், வண்டிக்காரத்தெரு, புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் இந்த சம்பவங்கள் அடிக்கடி அரங்கேறி வந்தன. இரவு நேரங்களில் மக்கள் நடமாட்டம் குறைவாக இருப்பதை அறிந்து மர்ம நபர்கள் இந்த செயலில் ஈடுபட்டனர்.

இதனால் பொதுமக்கள் இரவுநேரங்களில் தனியாக நடந்து செல்ல அச்சமடைந்தனர். மேலும் ஆங்காங்கே கண்காணிப்பு கேமரா வைக்கப்பட்டு இருந்தும் கொள்ளை சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் தொடர்ந்து தஞ்சையை கலக்கி வந்தனர். இதுகுறித்து ‘தினத்தந்தி’ நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது.

இதன் எதிரொலியாக போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர். தஞ்சை டி.ஐ.ஜி. லோகநாதன் அறிவுரைப்படி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரன் உத்தரவின் பேரில் தஞ்சை நகர துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன் மேற்பார்வையில் தஞ்சை நகர கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் சுகுமாறன், பார்த்தசாரதி, ஏட்டுகள் மோகன், சிவபாதசேகரன், ராஜேஷ்கண்ணன், மார்ட்டின், ஆயுதப்படை காவலர்கள் கவுதமன், மணிகண்டன் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்த தனிப்படையினர் தஞ்சை மாநகரில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அதன்படி நேற்று அதிகாலை இந்த தனிப்படையினர் பள்ளிஅக்ரகாரம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு அரிவாள், உருட்டுக்கட்டைகள் போன்ற ஆயுதங்களுடன் இருசக்கர வாகனங்களுடன் கொள்ளையடிக்க முகமூடி அணிந்து கொண்டு நின்று கொண்டிருந்த 5 பேரை மடக்கிப்பிடித்தனர்.

அவர்களை விசாரணை செய்ததில் அவர்கள் தஞ்சை ரெயில்வே காலனியை சேர்ந்த முருகையன் மகன் சதீஷ்குமார் (வயது 26), மானோஜிப்பட்டி கன்னியம்மன் நகரை சேர்ந்த முத்து மகன் ஆனந்த் (21), திடீர் காலனி அன்னை சிவகாமிநகரை சேர்ந்த கணேசன் மகன் செல்வமணி (22), செட்டியார் காலனி காமாட்சி நகரை சேர்ந்த சிங்காரவேலன் மகன் விக்ரம் (22), கன்னியம்மன் நகரை சேர்ந்த பழனிசாமி மகன் பாண்டியன் (20) என்பதும் தெரிய வந்தது.

கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 5 செல்போன்கள், 2 மோட்டார்சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்ட 5 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

கைது செய்யப்பட்ட 5 பேரும் தஞ்சை மாநகரில் பல்வேறு இடங்களில் இரவு நேரங்களில் பொதுமக்களை தாக்கி செல்போன், பணம் போன்றவற்றை பறித்தது தெரிய வந்தது. தஞ்சை மாநகரில் வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களிலும் கொள்ளையர்களின் உருவம், மோட்டார்சைக்கிள் எண் பதிவாகி இருந்தது. இதை வைத்து போலீசார், அவர்களை தேடி வந்தனர். இந்த நிலையில் 5 பேரும் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட முயன்ற போது போலீசாரிடம் சிக்கியது குறிப்பிடத்தக்கது.

Next Story