திருப்பூர் மாவட்டத்தில் ஜாக்டோ–ஜியோ அமைப்பினர் வேலை நிறுத்தத்தை தொடங்கினர் ஆசிரியர்கள் வராததால் பள்ளிகளுக்கு முன்பு காத்திருந்த மாணவர்கள்
திருப்பூர் மாவட்டத்தில் ஜாக்டோ–ஜியோ அமைப்பினர் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை நேற்று தொடங்கினார்கள். ஆசிரியர்கள் பள்ளிக்கு வராததால் பூட்டப்பட்ட பள்ளிகளுக்கு முன்பு மாணவ–மாணவிகள் காத்திருந்து விட்டு பின்னர் வீட்டுக்கு திரும்பினார்கள்.
திருப்பூர்,
திருப்பூர் மாவட்டத்தில் ஜாக்டோ–ஜியோ சார்பில் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நேற்று தொடங்கியது. 1–4–2003–க்கு பிறகு பணியில் சேர்ந்தவர்களுக்கு தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் பங்களிப்புடன் கூடிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கப்படாமல் இருப்பதை தவிர்க்க வேண்டும்.
முதுநிலை ஆசிரியர்கள், அனைத்து ஆசிரியர்கள், அரசு பணியாளர்கள், கண்காணிப்பாளர்கள், தலைமை செயலகம் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், களப்பணியாளர்கள், பல்வேறு துறையில் உள்ள தொழில்நுட்ப ஊழியர்கள், ஓட்டுனர்கள் ஆகியோருக்கான ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும் என்பது உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலைநிறுத்தம் நேற்று தொடங்கியது.
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் இந்த வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்றார்கள். இதன் ஒருபகுதியாக வட்ட அளவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருப்பூர் தெற்கு வட்டக்கிளை சார்பில் திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு வட்ட கிளை தலைவர் கிருஷ்ணகுமார் தலைமை தாங்கினார். வட்டார ஒருங்கிணைப்பாளர் காளீஸ்வரி, தமிழக ஆசிரியர் கூட்டணி நிர்வாகி ராஜேஷ், தமிழக தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி நிர்வாகி சத்யசீலன், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி நிர்வாகி சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஜாக்டோ–ஜியோ திருப்பூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாஸ்கரன், அங்கன்வாடி ஊழியர் சங்க மாநில பொருளாளர் பாக்கியம், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் கனகராஜா, வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட செயலாளர் முருகதாஸ் ஆகியோர் கோரிக்கைகள் குறித்து பேசினார்கள். இதில் திரளான ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
இதுபோல் திருப்பூர் வடக்கு வட்டக்கிளை சார்பில் திருப்பூர் ரெயில் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு வட்டக்கிளை ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் தலைமை தாங்கினார். சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் மகேந்திரபூபதி, தமிழக ஆசிரியர் கூட்டணி நிர்வாகி செல்வி, அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள் ரோஸ்மேரி, அம்மாசை, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி நிர்வாகிகள் நவ்சாத், ஜோசப், ஆசிரியர் முன்னேற்ற சங்க நிர்வாகி ஞானாம்பாள், பட்டதாரி, இடைநிலை ஆசிரியர் சங்க மாநில தலைவர் முத்து வன்னியன் ஆகியோர் கோரிக்கைகள் குறித்து பேசினார்கள். இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த வேலைநிறுத்த போராட்டத்தில் அடிப்படை பணியாளர்கள் முதல் தாசில்தார் அந்தஸ்தில் உள்ள அதிகாரிகள் வரை கலந்து கொண்டனர். இதனால் வருவாய்த்துறை, கலெக்டர் அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஊழியர்கள் பெரும்பாலானவர்கள் வராததால் பணிகள் பாதிக்கப்பட்டன. மாவட்டத்தில் 43 சதவீத அரசு ஊழியர்கள் பணிக்கு வரவில்லை. இதுபோல் ஆசிரியர்களில் 68 சதவீதம் பேர் வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்றனர். இதனால் பள்ளிகளின் செயல்பாடு பாதிக்கப்பட்டது.
திருப்பூர் அனுப்பர்பாளையம் சுற்று வட்டாரத்தில் உள்ள பெரும்பாலான பள்ளிகளில் ஆசிரியர்கள் பணிக்கு வரவில்லை. குமார்நகர் வ.உ.சி.நகர் மாநகராட்சி தொடக்கப்பள்ளி மற்றும் அங்கேரிபாளையத்தை அடுத்த அய்யன்காளிபாளையம் தொடக்கப்பள்ளிகளில் தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பணிக்கு வராததால் பள்ளிகள் மூடியே இருந்தன. இதனால் வழக்கம் போல பள்ளிக்கு வந்த மாணவ–மாணவிகள் பள்ளியை திறக்க ஆசிரியர்கள் வருவார்கள் என்ற எதிர்பார்ப்புடன் நீண்ட நேரம் காத்திருந்தனர். ஆனால் கடைசிவரை வராததால் 1 மணி நேரத்திற்கு பிறகு ஏமாற்றத்துடன் அவர்கள் வீடுகளுக்கு திரும்பினார்கள். இதனால் அந்தந்த பகுதிகளில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இன்று(புதன்கிழமை), நாளை(வியாழக்கிழமை) ஆகிய 2 நாட்கள் அந்தந்த வட்ட அளவில் மறியல் போராட்டமும், 25–ந் தேதி திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன்பு மறியல் போராட்டமும் நடைபெற உள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் 867 ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகளும், 223 நடுநிலைப்பள்ளிகளும் உள்ளன. அதேபோல 31 நகராட்சி தொடக்கப்பள்ளிகளும், 32 நடுநிலைப்பள்ளிகளும், 1 அரசு நடுநிலைப்பள்ளியும் உள்ளன. மாவட்டத்தில் உள்ள 1,154 பள்ளிகளில் 90 சதவீத பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் வேலைநிறுத்தத்தில் பங்கேற்றதால் தங்கள் பள்ளிகளை பூட்டி சாவியை வட்டார கல்வி அலுவலகங்களில் ஒப்படைத்தனர். இந்த தகவலை வட்டார கல்வி அலுவலர்கள் உடனடியாக மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி சாந்தியிடம் தெரிவித்தனர்.
முதன்மை கல்வி அதிகாரியின் உத்தரவுபடி உடனடியாக அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டன. பல பள்ளிகளில் மாணவர்களுக்கு பகுதி நேர ஆசிரியர்களும், ஒரு சில பள்ளிகளில் தலைமையாசிரியர்களும் பாடம் நடத்தினார்கள். சில பள்ளிகளில் அனைத்து வகுப்பு மாணவர்களையும் ஒரே வகுப்பறையில் அமர வைக்கப்பட்டு அவர்களுக்கு மாணவிகளே பாடம் நடத்தினார்கள். மாணவர்களுக்கு சமையல் உதவியாளர்கள் மூலம் மதிய உணவு சமைத்து வழங்கப்பட்டது. சில மாணவர்கள் வீட்டிலிருந்தே மதிய உணவை கொண்டு வந்து சாப்பிட்டனர்.
உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 25 சதவீதம் ஆசிரியர்கள் மட்டுமே பணிக்கு வந்திருந்தனர். ஆனால் பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் நியமிக்கப்பட்டுள்ள தற்காலிக ஆசிரியர்களை கொண்டு பாடங்கள் நடத்தப்பட்டதால் இந்த பள்ளிகளில் எந்த வித பாதிப்பும் இல்லை.