ஆழ்கடல் மீன்பிடிப்பிற்கு செல்ல மீனவர்களுக்கு தயார் நிலையில் 4 படகுகள்


ஆழ்கடல் மீன்பிடிப்பிற்கு செல்ல மீனவர்களுக்கு தயார் நிலையில் 4 படகுகள்
x
தினத்தந்தி 23 Jan 2019 4:15 AM IST (Updated: 23 Jan 2019 3:21 AM IST)
t-max-icont-min-icon

ஆழ்கடல் மீன்பிடிப்பிற்கு செல்வதற்காக மீனவர்களுக்கு தயார் நிலையில் 4 படகுகள் உள்ளன.

ராமநாதபுரம்,

தமிழக மீனவர்கள் மீன்பிடிக்க செல்லும் போது எல்லை தாண்டினால் இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவதும், படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும், துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்படுவதும் தொடர்கதையாகி வருகிறது. அதைத்தொடர்ந்து மீனவர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் வகையிலும் அவர்களுக்கு உறுதியான மீன்பிடிப்பை ஏற்படுத்தி கொடுக்கும் வகையிலும் மத்திய–மாநில அரசுகள் முடிவு செய்து அதற்காக ஆழ்கடல் மீன்பிடிப்பு திட்டத்தை செயல்படுத்தி உள்ளது.

இந்த திட்டத்தின்கீழ் தமிழக மீனவர்கள் குறிப்பாக ராமநாதபுரம், புதுக்கோட்டை பகுதி மீனவர்களுக்கு ஆழ்கடல் மீன்பிடிப்பிற்கு வசதியாக ரூ.80 லட்சம் செலவில் ஆழ்கடல் மீன்பிடி படகுகளை மானிய விலையில் வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான உத்தரவை ராமேசுவரத்தில் உள்ள அப்துல்கலாம் மணிமண்டபத்தினை திறந்து வைக்க வந்த பிரதமர் வழங்கினார்.

இந்த திட்டத்தின் கீழ் கேரளா மாநிலம் கொச்சியில் உள்ள மத்திய அரசின் நிறுவனத்தில் படகுகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. உயர் தொழில்நுட்பத்தில் மீனவர்கள் கடலில் 20 நாட்கள் வரை தங்கி மீன்பிடிக்கும் வசதியும், மீன்களை பதப்படுத்தி கொண்டு வரவும் இதில் சிறப்பு வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. இந்த படகில் 8 முதல் 11 மீனவர்கள் தங்கி மீன்பிடிக்க வசதியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

முதல்கட்டமாக ஆழ்கடல் மீன்பிடிப்பிற்கு செல்ல விருப்பம் தெரிவித்து 12 பேர் படகுகள் வாங்க விண்ணப்பித்துள்ளனர். கடந்த ஆண்டு ஜனவரி மாதம் படகு தயாரிப்பு பணி நடந்து, தற்போது முதல்கட்டமாக 4 படகுகள் தயார் நிலையில் உள்ளன. இந்த படகுகள் தற்போது கொச்சியில் சோதனை ஓட்டத்தில் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் தேவைப்படும் சிறுசிறு மாற்றங்களை செய்த பின்னர் ஓரிரு நாளில் இந்த படகுகள் ராமநாதபுரம் மாவட்ட மீனவர்களுக்கு வழங்கப்பட உள்ளது. அடுத்தடுத்த 2 மாதங்களில் தலா 4 படகுகள் வீதம் படிப்படியாக வழங்கப்பட உள்ளது.

ஆழ்கடலில் மீன்பிடிக்க செல்ல மாவட்ட மீனவர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. மேலும் கடலுக்கு செல்லும்போது கன்னியாகுமரி மாவட்ட மீனவர்களை உதவிக்காக அழைத்து செல்லவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த மாத இறுதியில் அல்லது பிப்ரவரி முதல் வாரத்தில் இந்த 4 படகுகள் முழு தகுதியுடன் மீனவர்களுக்கு வழங்கப்படும். இவர்கள் சந்தையில் அதிக விலை கிடைக்கும் தூனா என்றும் டுனா என்றும் அழைக்கப்படும் உயர்ரக மீன்களை பிடிக்க செல்ல உள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story