கூட்டுறவுத்துறையில் அடிப்படை மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ள வேண்டும் கவர்னர் வலியுறுத்தல்


கூட்டுறவுத்துறையில் அடிப்படை மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ள வேண்டும் கவர்னர் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 23 Jan 2019 12:15 AM GMT (Updated: 23 Jan 2019 12:12 AM GMT)

கூட்டுறவுத்துறையில் அடிப்படை மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ளுமாறு கவர்னர் கிரண்பெடி அறிவுறுத்தினார்.

புதுச்சேரி,

புதுவை அரசுத்துறைகளில் நாள்தோறும் ஆய்வு நடத்தி வரும் கவர்னர் கிரண்பெடி நேற்று கூட்டுறவுத்துறையில் ஆய்வு மேற்கொண்டார். அவருக்கு துறையின் செயல்பாடுகள் குறித்து கூட்டுறவு பதிவாளர் சுமிதா எடுத்துக்கூறினார்.

புதுவையில் 500 கூட்டுறவு சங்கங்கள் இருப்பதாகவும், இதற்கான பட்ஜெட்டாக ஆண்டுதோறும் ரூ.27 கோடி ஒதுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது. கூட்டுறவு தத்துவம் சுய ஆளுமையை வலியுறுத்தியபோதும் தற்போது தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் இல்லாத சங்கங்களை அரசு அதிகாரிகள் நிர்வகித்து வருகிறார்கள் என்றும் கவர்னரிடம் தெரிவிக்கப்பட்டது.

ஆய்வு நடத்திய கவர்னர் கிரண்பெடி, துறையின் இணையதளம் செயல்படாமல் முடங்கி கிடப்பதை சுட்டிக்காட்டினார். அதிலுள்ள விவரங்களை உடனடியாக தற்போதைய நிலைக்கு உயர்த்துமாறு அறிவுறுத்தினார். துறை குறித்த விவரங்கள் இணையதளத்தில் எளிதாக கிடைக்குமாறு ஏற்பாடு செய்யுமாறும் கேட்டுக்கொண்டார்.

துறையின் செயல்பாடுகளை டிஜிட்டல் மயமாக்குமாறும், அனைத்து செயல்பாடுகளையும் கணினி மயமாக்குமாறும் கூறினார். கூட்டுறவு பதிவாளர் ஒவ்வொரு பிரிவிலும் ஆய்வு செய்து அடிப்படையிலேயே மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.


Next Story