2-வது நாளாக ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் வேலைநிறுத்தம் : ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் 8 இடங்களில் சாலைமறியல் மாவட்டத்தில் 1,798 பேர் கைது


2-வது நாளாக ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் வேலைநிறுத்தம் : ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் 8 இடங்களில் சாலைமறியல் மாவட்டத்தில் 1,798 பேர் கைது
x
தினத்தந்தி 24 Jan 2019 4:15 AM IST (Updated: 23 Jan 2019 10:48 PM IST)
t-max-icont-min-icon

நாமக்கல் மாவட்டத்தில் ஜாக்டோ-ஜியோ அமைப்பினரின் வேலைநிறுத்த போராட்டம் நேற்று 2-வது நாளாக நீடித்தது. இதையொட்டி 8 இடங்களில் சாலைமறியலில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் 1,798 பேரை போலீசார் கைது செய்தனர்.

நாமக்கல், 

1.4.2003-க்கு பிறகு பணியில் சேர்ந்தவர்களுக்கு தற்போது நடைமுறையில் உள்ள பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் தமிழகம் முழுவதும் நேற்று முன்தினம் முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்களின் போராட்டம் நேற்று 2-வது நாளாக நீடித்தது.

இந்த போராட்டத்திற்கு நாமக்கல் மாவட்டத்தில் ஆசிரியர்கள் மத்தியில் அதிக அளவில் ஆதரவு இருந்தது. மாவட்டத்தில் உள்ள 7,634 ஆசிரியர்களில் 4,636 பேர் நேற்று போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பணிக்கு செல்லவில்லை. 2,805 ஆசிரியர்கள் மட்டுமே பணியில் இருந்தனர். 193 ஆசிரியர்கள் மருத்துவ விடுப்பு உள்ளிட்ட பல்வேறு விடுப்பில் உள்ளனர். அதே சமயத்தில் அரசு ஊழியர்களை பொறுத்தவரை நாமக்கல் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 13,043 அரசு ஊழியர்களில் 687 பேர் மட்டுமே பணிக்கு வரவில்லை. இதனால் அரசு அலுவலகங்களில் பணிகள் பாதிக்கப்படவில்லை.

ஆசிரியர்களின் போராட்டம் காரணமாக மாவட்டத்தில் எந்த ஒரு பள்ளியும் மூடப்படவில்லை எனவும், பகுதிநேர ஆசிரியர்கள், சிறப்பாசிரியர்கள், பள்ளிகளில் பயிற்சி பெறும் கல்வியியல் கல்லூரி மாணவ, மாணவிகள் மூலம் பள்ளிகள் திறக்கப்பட்டு இருந்ததாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் ஆசிரியர்களின் போராட்டம் காரணமாக பள்ளிகளில் கற்பித்தல் பணி முற்றிலும் பாதிக்கப்பட்டு இருப்பதாக சங்க நிர்வாகிகள் கூறினர்.

இதையொட்டி கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ- ஜியோ அமைப்பு சார்பில் நாமக்கல் பூங்கா சாலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஜாக்டோ-ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜேந்திரபிரசாத் தலைமை தாங்கினார். சிறிது நேரம் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பிய அவர்கள், பின்னர் பிரதான சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதையடுத்து அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் அவர்களை கைது செய்து வாகனங்களில் ஏற்றி, திருமண மண்டபம் ஒன்றில் தங்க வைத்தனர். இதில் மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் ராமு, செல்வராஜ், தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாவட்ட செயலாளர் முருக.செல்வராஜன் உள்பட மொத்தம் 460 பேர் கைது செய்யப்பட்டனர்.

பரமத்தி வேலூரில் நடைபெற்ற சாலைமறியல் போராட்டத்திற்கு தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தை சேர்ந்த கணேசன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க மாவட்ட செயலாளர் சந்திரமோகன் வரவேற்றார். சாலை மறியலில் ஈடுபட்ட 100 பெண்கள் உட்பட 170 பேரை பரமத்தி வேலூர் போலீசார் கைது செய்து, பரமத்தி வேலூரில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர். முன்னதாக பரமத்தி வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.மூர்த்தி போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு ஆதரவு தெரிவித்து பேசினார்.

மோகனூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு மோகனூர் வட்டார ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு சார்பில் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம், தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் மாநில துணைச்செயலாளர் அண்ணாதுரை தலைமையில் நடந்தது. தொடர்ந்து மோகனூர் - பரமத்திவேலூர் சாலையில் அவர்கள் மறியலில் ஈடுபட்டனர். சாலைமறியலில் ஈடுபட்டவர்களை மோகனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகுமார் தலைமையிலான போலீசார் கைது செய்தனர். தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மோகனூர் வட்டார செயலாளர் சரவணன், ஆரம்பபள்ளி ஆசிரியர் கூட்டணியின் மோகனூர் வட்டார செயலாளர் அத்தப்பன் உள்பட மோகனூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆசிரியர்கள், அரசு பணியாளர்கள் 53 ஆண்கள், 75 பெண்கள் என மொத்தம் 128 பேர் கைது செய்யப்பட்டு தனியார் திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டனர்.

சேந்தமங்கலத்தில் நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் முன்பாக தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தினர் மாவட்ட பொருளாளர் குமரேசன் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர் செல்வகுமார், பட்டதாரி ஆசிரியர் கழக ஒருங்கிணைப்பாளர் சந்திரசேகரன், அரசு ஊழியர் சங்க நிர்வாகி மணிகண்டன், சுகாதாரத்துறை நிர்வாகி முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள் சேந்தமங்கலம் வண்டிப்பேட்டை பிரிவு பகுதியில் சாலைமறியலில் ஈடுபட்டனர். அவர்களை சேந்தமங்கலம் போலீசார் கைது செய்தனர். ஆண்கள் 81 பேர், பெண்கள் 25 பேர் என மொத்தம் 106 பேர் கைது செய்யப்பட்டனர்.

கொல்லிமலையில் ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர் இளவேந்தன் தலைமையில் சாலைமறியலில் ஈடுபட்ட ஆண்கள் 74 பேர், பெண்கள் 46 பேர் என மொத்தம் 120 பேர் கைது செய்யப்பட்டனர்.

குமாரபாளையத்தில் தமிழக ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் விஜயகுமார் தலைமையில் சாலைமறியலில் ஈடுபட்ட 125 பெண்கள், 55 ஆண்கள் என மொத்தம் 180 பேர் கைது செய்யப்பட்டனர்.

ராசிபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் நேற்று மறியல் செய்தனர். மறியல் போராட்டத்திற்கு ராசிபுரம் வட்ட தலைவர் பாலமுரளி தலைமை தாங்கினார். இதில் நிர்வாகிகள் லோகநாதன், அத்தியப்பன், எடின்பரோகோமகன், பாரதி உள்பட 211 ஆண்கள் மற்றும் 200 பெண்கள் உள்பட 411 பேரை போலீசார் கைது செய்தனர். கைதானவர்களை போலீசார் தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

இதேபோல திருச்செங்கோடு உள்பட நாமக்கல் மாவட்டத்தில் ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் மொத்தம் 8 இடங்களில் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதில் 1,798 பேர் கைது செய்யப்பட்டனர்.

Next Story