2-வது நாளாக போராட்டம் பொள்ளாச்சியில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சாலை மறியல்


2-வது நாளாக போராட்டம் பொள்ளாச்சியில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 24 Jan 2019 4:30 AM IST (Updated: 24 Jan 2019 12:54 AM IST)
t-max-icont-min-icon

பொள்ளாச்சியில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 2-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையொட்டி சாலை மறியலில் ஈடுபட்ட 368 பெண்கள் உள்பட 538 பேரை போலீசார் கைது செய்தனர்.

பொள்ளாச்சி,

பள்ளிகள் இணைப்பு திட்டத்தை கைவிட வேண்டும். அங்கன்வாடி மையங்களில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளுக்கு இடைநிலை ஆசிரியர்களை நியமனம் செய்வதை தவிர்த்து, மாண்டிச்சோரி முறை கல்வி பயிற்சி பெற்றவர்களை நியமனம் செய்ய வேண்டும். பழைய ஓய்வூதியத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.

ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முன்தினம் முதல் தமிழகம் முழுவதும் ஜாக்டோ-ஜியோ சார்பில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

பொள்ளாச்சியில் நேற்று 2-வது நாளாக காந்தி சிலை பகுதியில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஜாக்டோ-ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தங்கபாசு தலைமை தாங்கினார். அரசு ஊழியர்கள் சங்க வட்ட கிளை தலைவர் மாடசாமி முன்னிலை வகித்தார். அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்க மாவட்ட தலைவர் சீதாராமன், சி.ஐ.டி.யு. போக்குவரத்து தொழிலாளர் சங்கம் பழனிசாமி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள்.

முன்னதாக அரசு ஊழியர் சங்க வட்ட கிளை செயலாளர் சின்ன மாரிமுத்து வரவேற்று பேசினார். ஆர்ப்பாட்டத்தின் போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினார்கள். காலை 11 மணிக்கு தொடங்கிய ஆர்ப்பாட்டம் 12 மணி வரை நடைபெற்றது.

அதன்பிறகு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் திடீரென்று பொள்ளாச்சி-கோவை சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களை போலீசார் வலுக்கட்டாயமாக தூக்கி அப்புறப்படுத்த முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் மறியலில் ஈடுபட்ட 368 பெண்கள் உள்பட 538 பேரை போலீசார் கைது செய்தனர். ஆண்களை சூளேஸ்வரன்பட்டியில் உள்ள ஒரு திருமண மண்டபத்திற்கும், பெண்களை மகாலிங்கபுரத்தில் உள்ள திருமண மண்டபத்திற்கும் போலீசார் அழைத்து சென்றனர்.

இதையொட்டி பொள்ளாச்சி போலீஸ் துணை சூப்பிரண்டு ஜெயராமன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் நடேசன், ஜெயக்குமார், சண்முக சுந்தரம், அம்சவேணி மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக கோவை ரோடு, நியூஸ்கீம் ரோடு, உடுமலை ரோட்டில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

காந்தி சிலை பகுதியில் போராட்டம் நடைபெற்றதால் போலீசார் பஸ், கார் போன்ற வாகனங்களை வெங்கடேசா காலனி வழியாக திருப்பி விட்டனர். இதனால் பஸ் நிலைய பகுதியில் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமப்பட்டனர்.

வால்பாறையில் ஜாக்டோ-ஜியோ அமைப்பை சேர்ந்த ஆசிரியர்கள் நேற்று 2-வது நாளாக வால்பாறை ஸ்டேன்மோர் சந்திப்பு பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் திடீரென வால்பாறை-பொள்ளாச்சி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் சாலை மறியலில் ஈடுபட்ட 80 பேரை வால்பாறை போலீசார் கைது செய்தனர்.

ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் கோரிக்கைகளை வலியுறுத்தி 2-வது நாளாக நேற்று கிணத்துக்கடவு பஸ்நிலையம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் கிணத்துக்கடவு வட்டார செயலாளர் ஜெயசந்திரன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள் அய்யாசாமி, பாலசுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நாகராஜன் வரவேற்று பேசினார். இதில் கோரிக்கைகள் குறித்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி கலந்து கொண்டு பேசினார். பின்னர் ஆசிரிய -ஆசிரியைகள், வருவாய்துறை, ஊரகவளர்ச்சித்துறை, நெடுஞ்சாலைத்துறை, சத்துணவு அமைப்பாளர்கள் உள்பட பலர் கிணத்துக்கடவு பஸ்நிலையம் முன்பு கோவை-பொள்ளாச்சி சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த கிணத்துக்கடவு போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளி தலைமையிலான போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட 165 பேரை கைது செய்தனர். அவர்களை கிணத்துக்கடவில் உள்ள தனியார் திருமணமண்டபத்தில் தங்க வைத்தனர்.

Next Story