பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு மூலம் ஏழைகளுக்கு மோடி துரோகம் செய்து விட்டார் மு.க.ஸ்டாலின் பேச்சு


பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு மூலம் ஏழைகளுக்கு மோடி துரோகம் செய்து விட்டார் மு.க.ஸ்டாலின் பேச்சு
x
தினத்தந்தி 24 Jan 2019 4:30 AM IST (Updated: 24 Jan 2019 1:37 AM IST)
t-max-icont-min-icon

பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி இருப்பதன் மூலம் பிரதமர் மோடி உண்மையான ஏழைகளுக்கு துரோகம் செய்து விட்டார் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநாட்டில் மு.க. ஸ்டாலின் பேசினார்.

திருச்சி,

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், திருச்சி பொன்மலை ஜி.கார்னர் மைதானத்தில் ‘தேசம் காப்போம் மாநாடு‘ நேற்று மாலை நடந்தது. மாநாட்டிற்கு கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் ரவிக்குமார் முன்னிலை வகித்தார். மாநாட்டில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பொதுச் செயலாளர் சீதாராம்யெச்சூரி, புதுச்சேரி முதல்-மந்திரி நாராயணசாமி, முன்னாள் மத்திய மந்திரி கொடிக்குனில் சுரேஷ், இந்திய கம்யூனிஸ்டு கட்சி பொதுச்செயலாளர் சுதாகர்ரெட்டி, மாநில செயலாளர் முத்தரசன், காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் திருநாவுக்கரசர், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் காதர் மொய்தீன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

பாரதீய ஜனதா ஆட்சிக்கு வந்ததில் இருந்தே எஸ்.சி. எஸ்.டி. மற்றும் ஓ.பி.சி. மக்களுக்கான இட ஒதுக்கீட்டை கொஞ்சம் கொஞ்சமாக சிதைத்து வருகிறது. இட ஒதுக்கீட்டை ரத்து செய்கிறோம் என வெளிப்படையாக கூறாமலேயே அதை முடக்கி வருகிறது. தற்போது இட ஒதுக்கீட்டுக்கு பொருளாதார அளவுகோலை திணிப்பதன் மூலம் சமூக நீதி என்னும் இட ஒதுக்கீட்டின் அடிப்படையையே தகர்க்க முற்பட்டிருக்கிறது. பா.ஜ. அரசு நிறைவேற்றி உள்ள பொருளாதார அடிப் படையிலான 10 சதவீத இட ஒதுக்கீடு சட்டத்தை ரத்த செய்ய வைப்பதற்கு நீதிமன்றத்திலும் மக்கள் மன்றத்திலும் தொடர் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.

1974-ம் ஆண்டு நியமிக்கப்பட்ட நீதிபதி தார்குண்டே தலைமையிலான குழு விகிதாச்சார பிரதிநிதித்துவ முறையில் தேர்தல் நடத்த வேண்டும் என பரிந்துரை செய்து உள்ளது. இந்தியாவில் தலைமை தேர்தல் ஆணையராக இருந்த பலரும் இதனை வலியுறுத்தி உள்ளனர். இந்திய சட்ட ஆணையமும் விகிதாச்சார பிரதிநிதித்துவ முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என பரிந்துரை செய்து 1999-ம் ஆண்டு பிரிவான அறிக்கை ஒன்றை மத்திய அரசிடம் அளித்து உள்ளது. எனவே இவற்றின் அடிப்படையில் 30 சதவீத பிரதிநிதிகளை நேரடி தேர்தல் மூலமாகவும், 70 சதவீத பிரதிநிதிகளை விகிதாச்சார பிரதிநிதித்துவ தேர்தல் முறையிலும் தேர்ந் தெடுக்கும் முறையை இந்தியாவில் நடைமுறைக்கு கொண்டு வரவேண்டும்.

வகுப்பு வாத வன்முறை தடுப்பு சட்டம், ஆணவ கொலைகள் தடுப்பு சட்டம் இயற்றவேண்டும், பாலின சமத்துவத்தை நிலைநாட்டும் வகையில் அனைத்து வயது பெண்களும் சபரிமலையில் வழிபடலாம் என உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை ஆதரிப்பது, மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மீதான ஒடுக்குமுறைகளை கைவிடவேண்டும், சனாதன சன்ஸ்தா என்ற அமைப்பை தடை செய்யவேண்டும், மேகதாதுவில் அணை கட்டுவது தொடர்பாக கர்நாடக மாநில அரசு தாக்கல் செய்து உள்ள அறிக்கையை மத்திய அரசு நிராகரிக்கவேண்டும், அணை பாதுகாப்பு மசோதாவை கைவிடவேண்டும், கல்வியை மீண்டும் மாநில பட்டியலில் சேர்க்கவேண்டும். அந்தரங்கம் என்னும் அடிப்படை உரிமையை பறிக்கும் ஆணையை திரும்ப பெறவேண்டும், மகளிர் இட ஒதுக்கீட்டிற்கு சட்டம் இயற்றவேண்டும்.

மேற்கண்டவை உள்பட 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாநாட்டில் ஸ்டாலின் பேசியதாவது:-

வர இருக்கிற நாடாளுமன்ற தேர்தல் சனாதனத்துக்கும், ஜனநாயகத்துக்கும் இடையே நடைபெறும் யுத்தமாகும். பாகிஸ்தான் நாட்டினாலோ, சீனாவாலோ நமது நாட்டுக்கு ஆபத்து இல்லை. தேசத்தை யார் ஆளுகிறார்களோ அவர்களால் தான் நாட்டுக்கு ஆபத்து வந்து இருக்கிறது. அதனால் தான் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தேசம் காப்போம் மாநாடு நடத்தப்பட்டு உள்ளது. 4 நாட்களுக்கு முன் கொல்கத்தா நகரில் நடைபெற்ற மாநாட்டில் பல மாநில முதல்வர்கள், தலைவர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் என 22 கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் பங்கேற்றனர். இந்தியாவே அந்த மேடையில் திரண்டு இருந்ததை காண முடிந்தது.

அந்த மாநாட்டிலே கலந்து கொள்ளும் வாய்ப்பை பெற்ற நான் பிரதமர் நரேந்திர மோடியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும், நடைபெற உள்ள தேர்தல் இந்தியாவின் இரண்டாவது சுதந்திர போராக அமைய போகிறது என்றேன். மேடையில் பேசிய டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரி வால் உள்ளிட்ட தலைவர்கள் எல்லாம் பாரதீய ஜனதாவால், மோடியால் ஏற்பட்டுள்ள ஆபத்து பற்றி விரிவாக எடுத்துக்கூறினார்கள்.

பாரதீய ஜனதா ஆட்சியை எதிர்ப்பவர்கள் மீது தேச துரோகிகள் என்ற முத்திரை குத்தப்படுகிறது. ஆங்கில நாளிதழில் ரபேல் போர் விமானத்தை 41 சதவீதம் அதிக விலை கொடுத்து மோடி வாங்கியதை வெளியிட்டதற்காக அந்த நாளிதழின் ஆசிரியர் தேச துரோகி என குற்றம்சாட்டப்பட்டு உள்ளது. ஊழல் பேர்வழிகளால் தேச துரோகிகள் என குற்றம்சாட்டப்படுவதை கண்டு நாம் பயப்பட தேவை இல்லை. ஒரு அரசாங்கம் என்பது நீதியுடனும், நேர்மையுடனும் இருக்கவேண்டும் என்று அம்பேத்கர் கூறி இருக்கிறார். ஆனால் மோடிக்கும் நீதிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

இதற்கு உதாரணம் தான் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு ஆகும். இந்த சட்டத்தின் மூலம் மோடி சமூக நீதிக்கான இடஒதுக்கீட்டில் கை வைத்து விட்டார். உண்மையான ஏழைகளுக்கு மோடி துரோகம் செய்து விட்டார். தன்னை ஏழைத்தாயின் மகன் என்று சொல்லிக்கொள்ளும் மோடி இப்படி செய்யலாமா? இட ஒதுக்கீட்டை பொறுத்தவரை தமிழகத்தில் அதற்கென்று 1920-ம் ஆண்டில் இருந்தே தனி வரலாறு இருக்கிறது.

மத்தியில் உள்ள மோடி அரசு நீதிக்கான அரசு அல்ல. அநீதியான அரசு. மற்ற மாநிலங்களில் உள்ள எதிர்க்கட்சிகளுக்கு மோடி அரசை எதிர்ப்பது மட்டும் தான் வேலை. ஆனால் தமிழகத்தில் இங்கே இருக்கிற எடப்பாடி பழனிசாமி அரசையும் வீட்டுக்கு அனுப்பும் வேலை என இரண்டு வேலைகள் உள்ளன. இதற்கான தொடக்கமாக இந்த மாநாடு அமைந்து உள்ளது.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.

மாநாட்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வணிகர் அணி மாநில துணை செயலாளர் ராஜா, தொழிலாளர் விடுதலை முன்னணி மாநில துணை செயலாளர் பிரபாகரன், அச்சு ஊடக மைய மாநில செயலாளர் எஸ்.ஆர்.கே.ரமேஷ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story