கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் 5 இடங்களில் மறியல் 1,562 பேர் கைது


கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் 5 இடங்களில் மறியல் 1,562 பேர் கைது
x
தினத்தந்தி 24 Jan 2019 4:30 AM IST (Updated: 24 Jan 2019 1:46 AM IST)
t-max-icont-min-icon

கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் நேற்று 5 இடங்களில் மறியலில் ஈடுபட்டனர். இதில் 1,562 பேரை போலீசார் கைது செய்தனர்.

கரூர்,

தமிழக அரசு ஊழியர் களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியர் களுக்கும், உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். சிறப்பு காலமுறை ஊதியம் பெற்று வரும் அரசு பணியாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும். இளைஞர்களின் வேலை வாய்ப்பை பறிக்கிற வகையில் அமைக்கப்பட்டுள்ள பணியாளர்கள் பகுப்பாய்வு குழுவினை தமிழக அரசு ரத்து செய்திட வேண்டும் என்பன உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான மாவட்ட ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் நேற்று முன்தினம் கரூர் தாலுகா அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதைத்தொடர்ந்து நேற்றும் கரூர் தாலுகா அலுவலகம் முன்பு அமர்ந்து அந்த அமைப்பினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இந்த மறியலுக்கு அரசு ஊழியர்கள் சங்க செயலாளர் மகாவிஷ்ணன் தலைமை தாங்கினார். சங்க ஒருங்கிணைப்பாளர்கள் முன்னிலை வகித்தினர். இதையடுத்து மறியலில் கலந்து கொண்ட 513 பேரையும் போலீசார் கைது செய்து, ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

இதேபோல குளித்தலை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஜாக்டோ-ஜியோ அமைப்பு ஒருங்கிணைப்பாளர் முத்துகிருஷ்ணன் தலைமையில் நேற்று சாலை மறியல் நடந்தது. இதையடுத்து மறியலில் ஈடுபட்ட 273 பேரையும் குளித்தலை போலீசார் கைது செய்து, காவிரி நகரில் உள்ள அறிஞர் அண்ணா சமுதாய மன்றத்தில் தங்க வைத்தனர்.

இதேபோல கிருஷ்ணராய புரம் வட்டாரத்தில் பணி புரியும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் நேற்று முன்தினம் காலை கிருஷ்ணராயபுரம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து நேற்று காலை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு திரண்ட போராட்டக்காரர்கள் திருச்சி-கரூர் தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த கிருஷ்ணராயபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமச்சந்திரன் தலைமையிலான மாயனூர் போலீசார், மறியலில் ஈடுபட்ட 225 பேரையும் கைது, செய்து ஒரு திருமணமண்டபத்தில் அடைத்து வைத்தனர்.

கரூர் மாவட்டத்தில் கரூர், குளித்தலை, கிருஷ்ணராய புரம், அரவக்குறிச்சி, தரகம்பட்டி ஆகிய 5 தாலுகா அலுவலகங்கள் முன்பு நேற்று மறியலில் ஈடுபட்ட ஜாக்டோ- ஜியோ அமைப்பை சேர்ந்த அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் என மொத்தம் 1,562 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 2-வது நாளாக நடந்த இந்த மறியல் போராட்டத்தால் அரசு அலுவலகங்கள், பள்ளிகள் பெரும்பாலானவை இயங்கவில்லை. இதனால் அரசு அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டது. 

Next Story