போலீசாரின் தடுப்பையும் மீறி 3 இடங்களில் சாலை மறியல் ராட்சத குழாயில் தண்ணீர் எடுக்க எதிர்ப்பு


போலீசாரின் தடுப்பையும் மீறி 3 இடங்களில் சாலை மறியல் ராட்சத குழாயில் தண்ணீர் எடுக்க எதிர்ப்பு
x
தினத்தந்தி 23 Jan 2019 11:00 PM GMT (Updated: 23 Jan 2019 8:46 PM GMT)

டி.என்.பாளையம் அருகே ராட்சத குழாயில் தண்ணீர் எடுக்க எதிர்ப்பு தெரிவித்து போலீசாரின் தடுப்பையும் மீறி பொதுமக்கள் 3 இடங்களில் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.

டி.என்.பாளையம்,

கோபி அடுத்துள்ள டி.என்.பாளையம் அருகே குண்டேரிபள்ளம் அணை உள்ளது. தற்போது அணையில் தண்ணீர் நிரம்பி இருப்பதால் அதை ஒட்டிய பகுதிகளில் உள்ள கிணறுகளில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இந்த நிலையில் கொங்கர்பாளையத்தை சேர்ந்த தனி நபர் ஒருவர் குண்டேரிபள்ளம் அணைப்பகுதியை ஒட்டியுள்ள தன்னுடைய பட்டா நிலத்தில் ஆழ்குழாய் கிணறு வெட்டி, ராட்சத குழாய்கள் மூலம் 15 ஏக்கர் நிலத்திற்கு தண்ணீர் கொண்டு செல்ல முயன்றார். இதற்காக கடந்த 6 மாதத்துக்கு முன் பொக்லைன் எந்திரம் மூலம் குழி தோண்டி குழாய் பதிக்க முயன்றார்.

இதற்கு அப்பகுதியில் உள்ள வினோபா நகர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதில் உடன்பாடு ஏற்பட்டு குழாய் பதிக்கும் பணி நிறுத்தப்பட்டது. போராட்டமும் கைவிடப்பட்டது.

அதைத்தொடர்ந்து நிலத்தின் உரிமையாளர் நீதிமன்றத்தை அணுகி உத்தரவு பெற்று போலீஸ் பாதுகாப்போடு மீண்டும் குழாய் பதிக்கும் பணியில் ஈடுபட முயன்றார். இதுபற்றிய தகவலறிந்த வினோபா நகர் பொதுமக்கள், பள்ளி மாணவ-மாணவிகள் மீண்டும் குழாய் பதிக்கும் இடத்துக்கு சென்று போராட்டம் நடத்தினார்கள்.

அதன்பின்பு கோபி தாசில்தார் வெங்கடேஸ்வரன், பங்களாப்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நெப்போலியன் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். தற்போதைக்கு குழாய் பதிக்கும் பணி நிறுத்தப்படும் என்று கூறியதால் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

இதற்கிடையே சம்பந்தப்பட்ட தனிநபர் தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறி கொங்கர்பாளையத்தை சேர்ந்த சிலர் மீது பங்களாப்புதூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி 11 பேர் மீது வழக்கு பதிவு செய்தார்கள்.

இதை அறிந்த வினோபாநகர், கோவிலூர் பொதுமக்கள் 500-க்கும் மேற்பட்டோர் நேற்று காலை 10 மணி அளவில் அத்தாணி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். இதுபற்றிய தகவல் கிடைத்ததும் சத்தியமங்கலம் துணை போலீஸ் சூப்பிரண்டு சுப்பையா, கோபி துணை போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணசாமி, கோபி ஆர்.டி.ஓ. அசோகன், தாசில்தார் வெங்கடேஷ்வரன், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் நெப்போலியன் (பங்களாப்புதூர்), சிவக்குமார் (சத்தியமங்கலம்), கதிர்வேல் (கடத்தூர்) ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.

அதன்பிறகு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் காலை 10 மணி முதல் 11.30 மணி வரை அத்தாணி சாலையிலும், பின்னர் மீண்டும் அங்கிருந்து 2 கி.மீ தூரம் நடந்து சென்று 2 இடங்களிலும் சாலை மறியல் செய்தனர். உடனே அந்த இடங்களில் அதிவிரைவுப் படை போலீசார் குவிக்கப்பட்டனர். அவர்கள் போராட்டக்காரர்களை கயிறு கட்டி சாலை மறியல் செய்ய விடாமல் தடுத்தனர்.

ஆனாலும் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் போலீசாரின் தடுப்புகளையும் மீறி ஒரே ஓட்டமாக ரோட்டுக்கு சென்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.

இதைத்தொடர்ந்து அதிகாரிகள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது போராட்டக்காரர்கள், ‘பங்காளாப்புதூர் போலீசார் 11 பேர் மீது வழக்கு போட்டுள்ளனர். அதை திரும்ப பெறவேண்டும். தனியார் ராட்சத குழாய் பதிக்கும் பணியை நிறுத்த வேண்டும்‘ என்று கோரிக்கை விடுத்தனர்.

அதற்கு அதிகாரிகள் 3 நாட்களில் பிரச்சினையை தீர்ப்பதாக உறுதி அளித்தார்கள். அதை ஏற்றுக்கொண்டு பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டார்கள். இந்த மறியல் போராட்டங்களால் சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story