வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் வழங்க வலியுறுத்தல்


வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் வழங்க வலியுறுத்தல்
x
தினத்தந்தி 23 Jan 2019 11:00 PM GMT (Updated: 23 Jan 2019 8:58 PM GMT)

விருதுநகர் மாவட்டத்தில் மக்காச்சோளம் உள்ளிட்ட அனைத்து பயிர்களையும் சாகுபடி செய்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி தமிழக விவசாயிகள் சங்கம் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தியது.

விருதுநகர், 

இந்த ஆண்டு பருவ மழை 61 சதவீதம் குறைவாக பெய்துள்ளதாலும், வறட்சி மற்றும் அமெரிக்கன் படைப்புழு தாக்குதலாலும் பாதிப்படைந்த விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும். காவிரி-குண்டாறு இணைப்பு திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.

வன நிலத்திலும், புறம்போக்கு நிலத்திலும் 5 ஆண்டுகளுக்கும் மேலாக விவசாயம் செய்து வரும் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். காட்டுப்பன்றிகள், மான்கள் பயிர்களை சேதப்படுத்துவதால் அவற்றை சுடுவதற்கு விவசாயிகளுக்கு துப்பாக்கி கொடுக்க அனுமதி வழங்க வேண்டும். புறம்போக்கு நிலத்தில் குடியிருப்போருக்கு பட்டா வழங்க வேண்டும்.

60 வயதான விவசாயிகள் அனைவருக்கும் மாதம் ரூ.5 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும். 100 நாள் வேலை திட்டத்தை விவசாயத்திற்கு மட்டும் பயன்படுத்த வேண்டும். தென் மாவட்டங்களில் அனைத்து கண்மாய் மற்றும் ஓடைகளை தூர்வார வேண்டும். விவசாயம் பாதிப்படைந்த அனைத்து மாவட்டங்களையும் வறட்சி மாவட்டமாக அறிவித்து நிவாரணம் வழங்க வேண்டும்.

மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாய சங்க மாநில தலைவர் ராமகவுண்டர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தின் போது தென் மாநில தலைவர் ரெங்குதாஸ், தென் மாநில நிர்வாகிகள் குணசேகரன், பாண்டியராஜன் உள்ளிட்ட பலரும், மாவட்ட நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

Next Story