நெல்லை மாவட்டத்தில், 7 இடங்களில் அரசு ஊழியர்- ஆசிரியர்கள் சாலை மறியல்
பல்வேறு கோரிக்கைகளை நெல்லை மாவட்டத்தில் 7 இடங்களில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக பெண்கள் உள்பட 2,690 பேரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை,
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், 21 மாத ஊதிய மாற்ற நிலுவை தொகையை வழங்க வேண்டும், இளைஞர்களின் வேலை வாய்ப்பை பறிக்கும் அரசாணை 56-ஐ ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் நேற்று முன்தினம் முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கினர். 2-வது நாளான நேற்று நெல்லை மாவட்டத்தில் உள்ள வருவாய்த்துறை அலுவலர்கள் பெரும்பாலானவர்கள் பணிக்கு வரவில்லை. இதனால் தாலுகா அலுவலகங்கள் மூடப்பட்டதால், வருவாய்த்துறை பணிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டன.
இதேபோல் ஊரக வளர்ச்சித்துறையிலும் ஊழியர்கள் பெரும்பாலானோர் பணிக்கு வராததால் யூனியன் அலுவலகங்களில் பணிகள் பாதிக்கப்பட்டன.
ஆசிரியர்கள் வேலைநிறுத்தத்தையொட்டி நெல்லை மாநகர பகுதியில் உள்ள அரசு, மாநகராட்சி ஆரம்ப, நடுநிலைப்பள்ளிக்கூடங்களில் பணியாற்றக்கூடிய ஆசிரியர்கள் 90 சதவீதத்திற்கு மேற்பட்டவர்கள் வராததால் பல பள்ளிக்கூடங்கள் செயல்படவில்லை.
நெல்லை மாவட்ட ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் நெல்லை தாலுகா அலுவலக வளாகத்தில் நேற்று காலையில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். நெல்லை, மானூர், பாளையங்கோட்டை வட்ட ஒருங்கிணைப்பாளர்கள் அருள்மரியஜான், பால்துரை, முருகானந்தம், பாக்கியராஜ், மனோகரன், மோசஸ், ஸ்டான்லி, தங்கராஜ், கற்பகம் ஆகியோர் தலைமை தாங்கினர். மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பால்ராஜ், பார்த்தசாரதி, பாபுசெல்வன், மாரிராஜா, ஆசீர்சார்லஸ்நீல ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட உயர்மட்டகுழு உறுப்பினர் சுப்பு வரவேற்று பேசினார். மாநில உயர்நிலைக்குழு உறுப்பினர்கள் குமாரவேல், நாகராஜன், மணிமேகலை, அருள்ராஜ் ஜார்ஜ் பீட்டர், எட்வர்ட் ஜெபசீலன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு, கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள்.
இதைத்தொடர்ந்து தர்ணாவில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து வெளியே வந்து தாலுகா அலுவலகம் முன்பு உள்ள சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டதை தொடர்ந்து, சாலை மறியலில் ஈடுபட்ட 320 பெண்கள் உள்பட 580 பேரை போலீசார் கைது செய்து, அங்குள்ள ஒரு திருமண மண்டபத்தில் அடைத்தனர்.
போராட்டத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர். போலீசார் கைது செய்கிறார்கள் என்றவுடனே பல பெண் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் தாலுகா அலுவலகத்தின் கிழக்கு பகுதியில் உள்ள வருவாய் ஆய்வாளர் அலுவலகம் வழியாக வெளியே சென்றுவிட்டனர். வெளியே சென்றவர்களை நிர்வாகிகள் அழைத்தார்கள். அதையும் அவர்கள் கேட்காமலே சென்றுவிட்டனர்.
சங்கரன்கோவிலில் கோரிக்கைகளை வலியுறுத்தி, ராஜபாளையம் சாலை பயணியர் விடுதி முன்பு ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தொடர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். மறியல் போராட்டத்திற்க்கு ஜாக்டோ- ஜியோ நிர்வாகிகள் மைதீன்பட்டாணி, பால்ராஜ், திருமலைமுருகன், லூக்காஸ், சிவகுமார், ராமராஜ் ஆகியோர் தலைமை தாங்கினர். ஓய்வு பெற்ற ஊழியர் சங்க மாவட்ட தலைவர் பாலுச்சாமி, ஜாக்டோ-ஜியோ அமைப்பை சேர்ந்த நிர்வாகிகள் மணிமேகலை, நாராயணன், கருப்பசாமி, ராமசாமி, ராசைய்யா உள்பட பலர் பேசினர். கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. வட்ட செயலாளர் வேல்ராஜன் நன்றி கூறினார். சாலை மறியலில் ஈடுபட்ட 443 பேரை சங்கரன்கோவில் டவுன் போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.
அம்பை தாலுகா அலுவலகம் முன்பு நடந்த சாலை மறியல் போராட்டத்திற்கு ஒருங்கிணைப்பாளர் கணேசன், ரத்தினவேல் ஆகியோர் தலைமை தாங்கினர். மூட்டா சங்கத்தை சேர்ந்த ராஜசேகரன், நகரப்பஞ்சாயத்து ஊழியர் சங்கத்தை சேர்ந்த அல்லாபிச்சை, சத்துணவு ஊழியர் சங்கத்தை சேர்ந்த பிச்சுமணி உள்பட 160 பேரை அம்பை போலீசார் கைது செய்தனர்.
சிவகிரியில் நடந்த மறியல் போராட்டத்திற்கு வட்டார ஒருங்கிணைப்பாளர் ராமர், ஈஸ்வரன் ஆகியோர் தலைமை தாங்கினார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செய்யது இப்ராகிம் மூசா முன்னிலை வகித்தார். வருவாய்த்துறை குருவையா, பட்டதாரி ஆசிரியர் குமரகுருபரன், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வட்டார தலைவர் ஜேம்ஸ் ஆரோக்கியராஜ், ஆறுமுகவேல் உள்பட 305 பேர் கலந்து கொண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை சிவகிரி போலீசார் கைது செய்தனர்.
ஆலங்குளம் யூனியன் அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்ட ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் 232 பேரை ஆலங்குளம் போலீசார் கைது செய்து, திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.
தென்காசி யூனியன் அலுவலகம் முன்பு நடந்த சாலை மறியல் போராட்டத்திற்கு உயர்மட்ட குழு தலைவர் துரைசிங், மேல்நிலை முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக தலைவர் முருகன் ஆகியோர் தலைமை தாங்கினர். சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் கோவில்பிச்சை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட செயலாளர் கிருபா சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போராட்டத்தை ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க மாநில துணை தலைவர் சண்முகசுந்தரம் தொடங்கி வைத்தார். போராட்டத்தில் கலந்து கொண்ட 760 பேரை தென்காசி போலீசார் கைது செய்தனர். இதேபோல் நாங்குநேரியில் 210 பேரை போலீசார் கைது செய்தனர்.
Related Tags :
Next Story