திருவண்ணாமலையில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சாலை மறியல் 1,250 பேர் கைது
திருவண்ணாமலையில் சாலை மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 1,250 பேரை போலீசார் கைது செய்யப்பட்டனர்.
திருவண்ணாமலை,
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ – ஜியோ கடந்த 22–ந் தேதி முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
போராட்டத்தின் 3–வது நாளான நேற்று திருவண்ணாமலை அண்ணாசிலை அருகே அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து ஊர்வலமாக புறப்பட்டு, திருவண்ணாமலை தாலுகா அலுவலகம் பகுதியில் உள்ள பெரியார் சிலை அருகே வந்தபோது அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
இதனையடுத்து அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தடுப்புகளை தூக்கி எறிந்துவட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அப்போது மாவட்ட ஒருங்கிணைப்பாளர் லட்சுமணன், ஜோதிகுமார், அண்ணாதுரை, முருகன் மற்றும் பலர் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதனையடுத்து துணை போலீஸ் சூப்பிரண்டுகள் அண்ணாதுரை, ஸ்ரீதரன், செல்வி மற்றும் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர்.
பின்னர் அவர்களை திருவண்ணாமலையில் உள்ள தனியார் திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டனர். இதில் 794 பெண்கள் உள்பட 1,250 பேர் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
ஆசிரியர்கள் போராட்டத்தினால் வாணாபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் உள்ள அனைத்து அரசு தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளிகள் பூட்டி வைக்கப்பட்டு இருந்தன.