அறுவடை பணிகள் தீவிரம்: டெல்டா பாசனத்துக்காக திறக்கப்பட்ட மேட்டூர் அணை 28-ந் தேதி மூடல்? 72 அடிக்கும் கீழே தண்ணீர் குறைந்தது


அறுவடை பணிகள் தீவிரம்: டெல்டா பாசனத்துக்காக திறக்கப்பட்ட மேட்டூர் அணை 28-ந் தேதி மூடல்? 72 அடிக்கும் கீழே தண்ணீர் குறைந்தது
x
தினத்தந்தி 25 Jan 2019 4:30 AM IST (Updated: 25 Jan 2019 12:18 AM IST)
t-max-icont-min-icon

காவிரி டெல்டா பாசனத்துக்காக திறக்கப்பட்ட மேட்டூர் அணை வருகிற 28-ந்தேதி முதல் மூடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது மேட்டூர் அணையின் நீர் மட்டம் 72 அடிக்கும் கீழே குறைந்தது.

தஞ்சாவூர்,

தமிழகத்தின் நெற்களஞ்சியமாக ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம்(தஞ்சை, நாகை, திருவாரூர்) விளங்கி வருகிறது. இங்கு குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி நடைபெறும். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக குறுவை அல்லது சம்பா என ஒரு போகம் தான் சாகுபடி நடைபெற்று வருகின்றன.

பருவமழை பொய்த்தது, மேட்டூர் அணையில் தண்ணீர் இல்லாதது போன்ற காரணங்களால் ஒருபோகம் மட்டுமே சாகுபடி நடைபெற்று வருகின்றன. அதுவும் 2 ஆண்டுகள் சம்பா சாகுபடியும் கேள்விக்குறியானது. டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12-ந் தேதி அணை திறக்கப் படுவது வழக்கம்.

இவ்வாறு திறக்கப்படும் தண்ணீர் கரூர் மாயனூர், திருச்சி முக்கொம்பு வழியாக கல்லணையை வந்தடையும். அங்கிருந்து காவிரி, வெண்ணாறு, கொள்ளிடம், கல்லணைக்கால்வாய் ஆகிய ஆறுகளில் பிரித்து விடப்படும். இந்த அணையின் மூலம் தமிழகத்தில் 20 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெரும்.

சேலம் மாவட்டத்தில் 4.66 லட்சம் ஏக்கரும், திருச்சி மாவட்டத்தில் 2.74 லட்சம் ஏக்கரும், தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டத்தில் 12½ லட்சம் ஏக்கரும், புதுக்கோட்டை, கடலூர் மாவட்டங்களில் 2.70 லட்சம் ஏக்கரும் பாசன வசதி பெறும் .

வழக்கம் போல ஜூன் 12-ந்தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டால் குறுவை சாகுபடி பரப்பளவு அதிகரிக்கும். ஆனால் தாமதமாக திறந்தால் குறுவை சாகுபடி பரப்பளவு குறைந்து சம்பா சாகுபடி பரப்பளவு அதிகரிக்கும். ஆனால் கடந்த ஆண்டு மேட்டூர் அணையில் போதிய அளவு தண்ணீர் இல்லாததால் மேட்டூர் அணை ஜூன் 12-ந்தேதி திறக்கப்படவில்லை.

இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தில் பலத்த மழை பெய்து அங்கிருந்து தண்ணீர் வரத்து அதிகரித்ததை தொடர்ந்து மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்கு ஜூலை மாதம் 19-ந் தேதி திறக்கப்பட்டது. அப்போது மேட்டூர் அணையின் நீர் மட்டம் 109 அடியாக இருந்தது. மேலும் தண்ணீர் வரத்து அதிகரித்ததை தொடர்ந்து மேட்டூர் அணை நிரம்பியது.

இதையடுத்து டெல்டா மாவட்டங்களில் 4½ லட்சம் எக்டேர் சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு சாகுபடி செய்யப்பட்டது. தற்போது டெல்டா மாவட்டங் களில் அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்ட பின்னர் மேட்டூர் அணை ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் 28-ந் தேதி மூடப் படுவது வழக்கம். ஒரு சில ஆண்டுகளில் பாசனத்துக்கு தண்ணீர் தேவையை பொறுத்து தாமதமாக மூடப்பட்டுள்ளது.

டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் தேவை என்றால் வேளாண்மைத்துறை அதிகாரிகள், பொதுப்பணித்துறை அதிகாரிகள் கலந்து பேசி கருத்துக்களை தெரிவிப்பார்கள். அதன் அடிப்படை மேட்டூர் அணை மூடப்படுவது குறித்து முடிவெடுக்கப்படும். ஆனால் தற்போது தண்ணீர் தேவை குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் தகவல் எதுவும் தெரிவிக்கவில்லை.

தண்ணீர் தேவை என்றோ, வேண்டாம் என்றோ எந்த தகவலும் தெரிவிக்கவில்லை. தற்போது மேட்டூர் அணையில் தண்ணீர் 72 அடிக்கும் கீழே குறைந்து விட்டது.

இதனால் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவும் கடந்த சில நாட்களாக 1,000 அடியாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த ஆண்டும் மேட்டூர் அணை வருகிற 28-ந் தேதி மூடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து கீழ்காவிரி வடிநில வட்ட கண்காணிப்பு பொறியாளர் ரேவதியிடம் கேட்டபோது அவர் கூறுகையில், “பாசனத்துக்கு தண்ணீர் தேவை என்றோ? வேண்டாம் என்றோ நாங்கள் எந்த தகவலும் தெரிவிக்கவில்லை.”என்றார்.

மூத்த வேளாண் வல்லுனர் கலைவாணனிடம் கேட்டபோது, “டெல்டா பகுதியில் சம்பா, தாளடி பாசனத்துக்கு இனி தண்ணீர் தேவை இருக்காது. தஞ்சை மாவட்டத்தில் கடைமடை பகுதியான பேராவூரணி, சேதுபாவாசத்திரம் பகுதிகளில் வேண்டுமானால் நெற்பயிர்களுக்கு தண்ணீர் தேவை இருக்கலாம். தற்போது 1,000 கன அடி தண்ணீர் திறக்கப்படுவதால் அந்த தண்ணீர் கல்லணைக்கால்வாயில் திறந்து விட்டால் அந்த பயிர்களுக்கு போதுமானது. மற்ற ஆறுகளில் தண்ணீர் தேவை இல்லை. தற்போது உள்ள 72 அடி தண்ணீரைக்கொண்டு குறுவைக்கு தண்ணீர் திறப்பதும் சாத்தியமில்லை. உச்சநீதிமன்ற தீர்ப்புரீ;படி காவிரியில் இருந்து மேட்டூர் அணைக்கு உரிய தண்ணீர் தமிழகத்திற்கு வந்தால் ஜூன் 12-ந் தேதி தண்ணீர் திறக்கும் வாய்ப்பு உருவாகும்”என்றார்.

மேட்டூர் அணை கட்டப்பட்டு டெல்டா பாசனத்துக்காக 1934-ம் ஆண்டு ஜூன் 12-ந் தேதி திறக்கப்பட்டது. அதன் பின்னர் ஜூன் 12-ந்தேதியே பெரும்பாலான நாட்களில் திறக்கப்பட்டுள்ளது. கடந்த 84 ஆண்டுகளில் ஜூன் 12-ந் தேதி அல்லது அதற்கு முன்பு என 25 முறை திறக்கப்பட்டுள்ளது. 59 முறை தாமதமாக திறக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஜனவரி 28-ந் தேதி 29 முறை முடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story