அம்பை அருகே துணிகரம்: போலீஸ் அதிகாரி வீட்டில் நகை, பணம் கொள்ளை மேலும் 3 வீடுகளில் மர்மநபர்கள் கைவரிசை


அம்பை அருகே துணிகரம்: போலீஸ் அதிகாரி வீட்டில் நகை, பணம் கொள்ளை மேலும் 3 வீடுகளில் மர்மநபர்கள் கைவரிசை
x
தினத்தந்தி 25 Jan 2019 4:30 AM IST (Updated: 25 Jan 2019 12:23 AM IST)
t-max-icont-min-icon

அம்பை அருகே போலீஸ் அதிகாரி வீட்டின் கதவை உடைத்து நகை, பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர். மேலும் 3 வீடுகளில் கைவரிசை காட்டிய அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

அம்பை, 

நெல்லை மாவட்டம் அம்பை அருகே உள்ள கல்லிடைக்குறிச்சி பொன்மாநகரை சேர்ந்தவர் மாடசாமி (வயது 56). இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் உள்ள 7-வது சிறப்பு காவல் படையில் துணை கமாண்டராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி முத்துக்குட்டி. இவர் நேற்று முன்தினம் சேரன்மாதேவியில் உள்ள தனது மகள் வீட்டிற்கு சென்று இருந்தார்.

இந்த நிலையில் மர்மநபர்கள் இரவில் மாடசாமியின் வீட்டு கதவை கடப்பாரையால் உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் பீரோவை உடைத்து அதில் இருந்த 10 பவுன் நகை மற்றும் ரூ.15 ஆயிரத்தை கொள்ளையடித்தனர்.

அதே பகுதியில் ஆவடி ஆயுதப்படை போலீசில் போலீஸ்காரராக பணியாற்றி வரும் மைக்கேல்ராஜ் என்பவரது வீடு உள்ளது. அவரது வீட்டின் கதவையும் மர்மநபர்கள் உடைத்து உள்ளே புகுந்தனர். அங்கு பீரோவில் நகை, பணம் எதுவும் இல்லாததால் மின்மோட்டாரை மட்டும் திருடினர்.

அதே பகுதியில் உள்ள மலர் என்பவரது வீட்டிலும் மர்மநபர்கள் புகுந்து ரூ.3 ஆயிரத்தை கொள்ளையடித்தனர். மேலும் சாக்ரடீஸ் என்பவரது வீட்டிலும் புகுந்தனர். அங்கு பணம், நகை எதுவும் சிக்காததால் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

இந்த துணிகர கொள்ளை சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் அம்பை துணை போலீஸ் சூப்பிரண்டு ஜாகிர் உசேன், போலீஸ் இன்ஸ்பெக்டர் கவுரி மனோகரி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அடுத்தடுத்த வீடுகளில் கொள்ளை நடந்து இருப்பதால் ஒரே கும்பலை சேர்ந்தவர்கள் கைவரிசை காட்டி இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

மோப்பநாய் ‘டைகர்’ வரவழைக்கப்பட்டது. அது சம்பவ இடத்தில் மோப்பம் பிடித்து விட்டு சிறிது தூரம் வரை ஓடியது. ஆனால் யாரையும் கவ்விப் பிடிக்கவில்லை. தடயவியல் நிபுணர் அகஸ்டா தலைமையில் கைரேகை நிபுணர்கள் வந்து தடயங்களை சேகரித்தனர்.

இந்த கொள்ளை குறித்து கல்லிடைக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

ஒரே நாள் இரவில் அடுத்தடுத்த வீடுகளில் மர்மநபர்கள் நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story