கன்னியாகுமரியில் 27-ந் தேதி கும்பாபிஷேகம்: வெங்கடாசலபதி கோவிலில் சாமி சிலைகள் இன்று பிரதிஷ்டை


கன்னியாகுமரியில் 27-ந் தேதி கும்பாபிஷேகம்: வெங்கடாசலபதி கோவிலில் சாமி சிலைகள் இன்று பிரதிஷ்டை
x
தினத்தந்தி 24 Jan 2019 10:45 PM GMT (Updated: 24 Jan 2019 8:55 PM GMT)

கன்னியாகுமரி வெங்கடாசலபதி கோவிலில் 27-ந் தேதி கும்பாபிஷேகம் நடைபெற இருப்பதையொட்டி சாமி சிலைகள் இன்று பிரதிஷ்டை செய்யப்படுகின்றன.

கன்னியாகுமரி,

கன்னியாகுமரி விவேகானந்த கேந்திர வளாகத்தில் ரூ.22½ கோடி செலவில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் வெங்கடாசலபதி கோவில் கட்டப்பட்டுள்ளது. இந்த கோவிலில் வருகிற 27-ந் தேதி காலை 7.30 மணிக்கு மேல் 9 மணிக்குள் கும்பாபிஷேகம் நடக்கிறது. இதையொட்டி யாகசாலை பூஜைகள் கடந்த 22-ந் தேதி தொடங்கியது. 16 யாக குண்டங்கள் மூலம் இந்த பூஜைகள் நடந்து வருகிறது. திருப்பதி கோவில் தலைமை அர்ச்சகர் சேஷாத்திரி தலைமையில் அர்ச்சகர்கள் யாகசாலை பூஜைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

நேற்று முன்தினம், யாகசாலை பூஜையும், காப்பு கட்டும் நிகழ்ச்சியும் நடந்தது. நேற்று 3-வது நாளாக யாகசாலை பூஜைகள் நடந்தன. கேசிராதிவசம் என்ற சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. கொடிமரத்துக்கு செம்பு தகடு பொருத்தும் பணியும், மாலையில் ஹோமம், பூர்ணாகுதி பூஜை உள்ளிட்டவையும் நடந்தன.

இன்று (வெள்ளிக்கிழமை) மதியம் 12 மணி முதல் 2 மணிக்குள் மூலஸ்தான கருவறையில் 7½ அடி உயர திருப்பதி வெங்கடாசலபதி சிலை பிரதிஷ்டை செய்யப்படுகிறது. தொடர்ந்து கோவிலில் 3 அடி உயர பத்மாவதி தாயார் சிலையும், 3 அடி உயர ஆண்டாள் சிலையும், 3 அடி உயர கருடபகவான் சிலையும் பிரதிஷ்டை செய்யப்படுகிறது.

சாமி சிலைகள் பிரதிஷ்டை செய்வதற்கான பணிகள் நேற்று மும்முரமாக நடந்தது. இந்த பணிகளை திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் சென்னையில் உள்ள உள்ளூர் தகவல் மற்றும் ஆலோசனை மைய உறுப்பினர்கள் மோகன்ராவ், ரவிபாபு, விவேகானந்தா கேந்திர துணை தலைவர் பாலகிருஷ்ணன், செயலாளர் மற்றும் பொருளாளர் அனுமந்தராவ் ஆகியோர் பார்வையிட்டனர்.

கும்பாபிஷேகத்தையொட்டி கோவிலை சுற்றிலும் மின் விளக்கு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. இரவில் கோவில் மின்னொளியில் ஜொலிக்கிறது. கும்பாபிஷேக விழாவையொட்டி கோவிலில் பக்தர்கள் குவிய தொடங்கி உள்ளனர்.

27-ந் தேதி கும்பாபிஷேகத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க தேவஸ்தான நிர்வாகம் சார்பில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

கும்பாபிஷேகத்தையொட்டி வருகிற 27-ந் தேதி அதிகாலை 5 மணி முதல் மாலை வரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து அரசு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

கடற்கரையையொட்டி கோவில் இருப்பதால் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு உள்ளது. நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி. கபில்குமார் சரத்கார், போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் ஆகியோர் கோவிலை பார்வையிட்டு போலீஸ் பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளனர்.

Next Story