கல்லூரி மாணவி வீட்டு முன் தீக்குளித்த டிரைவர் சாவு போலீசார் விசாரணை


கல்லூரி மாணவி வீட்டு முன் தீக்குளித்த டிரைவர் சாவு போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 25 Jan 2019 4:45 AM IST (Updated: 25 Jan 2019 2:29 AM IST)
t-max-icont-min-icon

தக்கலை அருகே கல்லூரி மாணவி வீட்டு முன் தீக்குளித்த டிரைவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

பத்மநாபபுரம்,

இரணியல்அருகே திங்கள்நகர் ஆற்றங்கரை பகுதியை சேர்ந்தவர் பிரதீப் (வயது 29), மினி பஸ் டிரைவர். காதல் திருமணம் செய்த இவருக்கு சுனிபிரியா (25) என்ற மனைவியும், ஒரு குழந்தையும் உள்ளனர். இவர் டிரைவராக வேலை செய்யும் மினி பஸ்சில் மாணவி ஒருவர் தினமும் கல்லூரிக்கு சென்று வருவது வழக்கம். அப்போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.

இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இருவரும் பல இடங்களில் சந்தித்து காதலை வளர்த்து வந்தனர். இதற்கிடையே பிரதீப்புக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு குழந்தை இருப்பது அந்த மாணவிக்கு தெரியவந்தது. உடனே அந்த மாணவி பிரதீப்பை விட்டு விலக ஆரம்பித்தார். இதுதொடர்பாக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

இருப்பினும் பிரதீப், அந்த மாணவியை சந்தித்து தன்னை காதலிக்கும்படி தொடர்ந்து வற்புறுத்தி வந்தார். மேலும் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படியும் கூறி வந்ததாக தெரிகிறது. இதனை ஏற்க மறுத்த மாணவியை பிரதீப் தாக்கினார். இதுகுறித்து அந்த மாணவி கொடுத்த புகாரின் பேரில் குளச்சல் போலீசார் டிரைவரை அழைத்து விசாரணை நடத்தினர். பின்னர் மாணவிக்கு எந்த தொந்தரவும் கொடுக்க கூடாது என்று போலீசார் கண்டித்து அனுப்பினர்.

ஆனாலும் பிரதீப் அந்த மாணவியை மறக்க முடியாமல் இருந்து வந்ததாக தெரிகிறது. தினமும் அந்த மாணவியை பின்தொடர்ந்தும் வந்துள்ளார்.

சம்பவத்தன்று பிரதீப், தக்கலை அருகே உள்ள அந்த மாணவி வீட்டுக்கு சென்றார். தனது காதலை ஏற்றுக்கொள்ளும்படி மாணவியிடம் பேச முயன்றார். ஆனால் மாணவி, வீட்டை விட்டு வெளியே வரவில்லை. இதில் மனமுடைந்த பிரதீப், மாணவியின் வீட்டு முன் தனது உடலில் பெட்ரோலை ஊற்றி தீக்குளித்தார்.

இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் பிரதீப்பை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்படி இருந்தும் சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று காலையில் பிரதீப் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் தக்கலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

காதல் திருமணம் செய்த டிரைவர், மீண்டும் கல்லூரி மாணவியுடன் ஏற்பட்ட காதலில் மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்டது தக்கலை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story