இளம்பெண் கொலை: “ஆசைக்கு இணங்க மறுத்ததால் மனைவியை மிதித்து கொன்றேன்” கைதான தொழிலாளி வாக்குமூலம்


இளம்பெண் கொலை: “ஆசைக்கு இணங்க மறுத்ததால் மனைவியை மிதித்து கொன்றேன்” கைதான தொழிலாளி வாக்குமூலம்
x
தினத்தந்தி 25 Jan 2019 4:45 AM IST (Updated: 25 Jan 2019 2:52 AM IST)
t-max-icont-min-icon

சேலம் அருகே, ஆசைக்கு இணங்க மறுத்ததால் மனைவியை மிதித்து கொன்றேன் என்று இளம்பெண் கொலை வழக்கில் கைதான தொழிலாளி போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

சூரமங்கலம்,

சேலம் அருகே வீராணம் பள்ளிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் மாதேஷ் (வயது 27). கம்பி கட்டும் தொழிலாளி. இவருடைய மனைவி சசிகலா (22). இவர்களுக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. கடந்த ஆண்டு கர்ப்பமான சசிகலா, 7-வது மாதத்தில் பிரசவத்திற்காக இரும்பாலை அருகே தளவாய்பட்டியில் உள்ள தனது தாயார் வீட்டுக்கு வந்தார். பின்னர் அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் அழகான ஆண் குழந்தை பிறந்தது. இதனால் பூரண குணம் அடையும் வரை சசிகலா தனது கணவர் வீட்டுக்கு செல்லாமல் தொடர்ந்து பெற்றோர் வீட்டிலேயே வசித்து வந்தார்.

இந்தநிலையில், நேற்று முன்தினம் மாலை தளவாய்ப்பட்டியில் உள்ள மாமனார் வீட்டுக்கு வந்த மாதேஷ் திடீரென கதவை பூட்டிக்கொண்டு மனைவி சசிகலாவை காலால் மிதித்து கொலை செய்தார். இந்த சம்பவம் தொடர்பாக இரும்பாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து மாதேசை கைது செய்தனர்.

போலீசாரிடம் மாதேஷ் அளித்துள்ள வாக்குமூலத்தின் விவரம் வருமாறு:-

நான் எனது குழந்தையை பார்க்க மாமனார் வீட்டுக்கு வர இருப்பதாக நேற்று முன்தினம் மனைவி சசிகலாவிடம் தெரிவித்தேன். இதனால் எனக்கு விருந்து அளிக்கும் வகையில் மனைவியின் குடும்பத்தினர் இறைச்சி எடுத்து சமைத்து வைத்திருந்தனர். அங்கு சென்ற நான், பிறந்த எனது குழந்தை எங்கே இருக்கிறது? என்று கேட்டேன். அதற்கு அவர்கள் குழந்தை வீட்டிற்குள் தூங்கி கொண்டிருக்கிறது என்று கூறினர். இதையடுத்து சிறிது நேரம் கழித்தவுடன் மனைவியிடம் சாப்பாடு போடுமாறு கேட்டேன்.

அதற்கு சரி என்று அவர் சொல்லிவிட்டு சாப்பாடு எடுப்பதற்காக சமையலறைக்கு போனார். அப்போது மனைவியின் பின்னால் சென்றேன். மேலும் எனது மாமியார் பச்சியம்மாள் மற்றும் உறவினர்கள், நீண்ட நாட்கள் கழித்து நான் வந்திருந்ததால், வீட்டின் வெளியே அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். நானும், எனது மனைவியும் வீட்டுக்குள் உணவு சாப்பிட்டு கொண்டிருப்பதாக அவர்கள் நினைத்து கொண்டிருந்தனர்.

ஆனால் சசிகலாவின் பின்னால் சென்ற நான், திடீரென கதவை உள்பக்கமாக தாழ்ப்பாள் போட்டு கதவை பூட்டினேன். பின்னர் மனைவியை படுக்கை அறைக்குள் தள்ளி ஆசைக்கு இணங்குமாறு வற்புறுத்தினேன். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்தார். அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்றுள்ளதாகவும், அதனால் உடல்நிலை குணமடையும் வரை சில நாட்கள் பொறுத்துக்கொள்ளுமாறு கூறினார். இதனால் எனக்கு ஆத்திரம் ஏற்பட்டு அவரை கீழே தள்ளி அவரது கழுத்தில் காலை வைத்து மிதித்தேன்.

அந்த சமயத்தில் வீட்டிற்குள் இருந்து ரொம்ப நேரமாக சத்தம் எதுவும் வராததால் சந்தேகம் அடைந்த மாமியார் பச்சியம்மாள் ஜன்னல் வழியாக எட்டி பார்த்தார். அப்போது, மனைவியின் கழுத்தில் காலை வைத்து மிதித்து கொண்டிருப்பதை பார்த்துவிட்டார். அவர் எனது மகளை விட்டு விடு..! என்று கெஞ்சினார். இருப்பினும் அதை பொருட்படுத்தாமல் சசிகலாவின் கழுத்தை காலால் மிதித்து கொலை செய்தேன்.

இவ்வாறு அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

சசிகலாவுக்கு திருமணம் ஆகி 3 ஆண்டுகளே ஆவதால் இந்த கொலை தொடர்பாக சேலம் உதவி கலெக்டர் செழியனும் விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story