கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தீரன் சின்னமலை பெயர் ஈ.ஆர்.ஈஸ்வரன் வலியுறுத்தல்


கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தீரன் சின்னமலை பெயர் ஈ.ஆர்.ஈஸ்வரன் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 27 Jan 2019 4:15 AM IST (Updated: 27 Jan 2019 2:41 AM IST)
t-max-icont-min-icon

கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தீரன் சின்னமலை பெயரை சூட்ட வேண்டும் என கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மாநில பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் வலியுறுத்தினார்.

கரூர்,

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கரூர் கிழக்கு மாவட்ட பொதுக்குழு மற்றும் கலாசார பாதுகாப்பு கூட்டம் கரூரில் நடந்தது. கூட்டத்திற்கு, மாநில வர்த்தக அணி செயலாளர் விசா.ம.சண்முகம் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் மூர்த்தி வரவேற்று பேசினார். இதில் சிறப்பு விருந்தினராக மாநில பொது செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில், போக்குவரத்து நெருக்கடியை தவிர்க்கும் விதமாக கரூர் பஸ் நிலையத்தை புறநகருக்கு மாற்றும் திட்டத்தை உடனே நிறைவேற்ற வேண்டும். கரூர் நகரில் குடிநீர் திட்ட பணிகளுக்காக தோண்டப்பட்ட சாலைகளை சீரமைக்க வேண்டும். கரூர் வாங்கல் சாலையிலுள்ள குப்பை கிடங்கில் போடப்படும் இறைச்சி கழிவுகளை முறையாக அகற்றிட வேண்டும். மேலும் குப்பை கிடங்கில் அடிக்கடி தீ விபத்து ஏற்படுவதை தடுக்க வேண்டும்.

கரூரில் உள்ள காவிரி மற்றும் அமராவதி ஆறுகளின் குறுக்கே 5 கிலோ மீட்டருக்கு ஒரு தடுப்பணை கட்ட வேண்டும். மரவள்ளி கிழங்குக்கு ஒரு டன்னுக்கு ரூ.10 ஆயிரமும், கரும்பு ஒரு டன்னுக்கு ரூ.5 ஆயிரமும் என அரசு விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் மாநில பொருளாளர் அம்மையப்பன், மாநில இளைஞரணி செயலாளர் சூரியமூர்த்தி, நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மாநில பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தின் பல்வேறு இடங்களிலுள்ள அரசு மருத்துவமனைகளுக்கு தலைவர்கள் பெயரை சூட்டுகிறார்கள். அந்த வகையில் கரூரில் விரைவில் தொடங்கப்பட உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு தீரன் சின்னமலை பெயரை சூட்ட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மருத்துவமனையின் முன்பு தீரன்சின்னமலை சிலையை நிறுவ வேண்டும். பிப்ரவரி 3-ந்தேதி நாமக்கல்லில் உலக கொங்கு தமிழர் மாநாடு நடக்கிறது. இதில் 26 நாடுகளில் இருந்து பலர் கலந்து கொள்கின்றனர். இதற்கு பிறகு தேர்தல் கூட்டணி குறித்து நாங்கள் அறிவிப்போம். கரூர் நகரில் ஆக்கிரமிப்பு அகற்றம் என்கிற பெயரில் வீடு உள்ளிட்டவற்றை கையகப்படுத்துவது கண்டிக்கத்தக்கது. இதனால் பாதிக்கப்பட்ட மக்களை காப்பாற்ற கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி போராட்டங்களை முன்னெடுத்து செல்லும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story