ஜல்லிக்கட்டில் வீரர்களை பந்தாடிய காளைகள் போதிய பாதுகாப்பு இல்லாததால் பாதியில் நிறுத்தம்


ஜல்லிக்கட்டில் வீரர்களை பந்தாடிய காளைகள் போதிய பாதுகாப்பு இல்லாததால் பாதியில் நிறுத்தம்
x
தினத்தந்தி 28 Jan 2019 4:15 AM IST (Updated: 28 Jan 2019 1:42 AM IST)
t-max-icont-min-icon

ஜல்லிக்கட்டில் வீரர்களை காளைகள் பந்தாடியதில் 7 பேர் காயம் அடைந்தனர். போதிய பாதுகாப்பு இல்லாததால் ஜல்லிக்கட்டு பாதியில் நிறுத்தப்பட்டது.

திண்டுக்கல், 

திண்டுக்கல் மாவட்டம் அய்யம்பாளையத்தில் ஜல்லிக்கட்டு நேற்று நடந்தது. முதலில் கோவில் காளை அவிழ்த்து விடப்பட்டது. அதை தொடர்ந்து மதுரை, தேனி, திருச்சி, விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த 150 காளைகள் சீறிப்பாய்ந்தன.

சீறிப்பாய்ந்த காளைகளை அடக்க வீரர்கள் போட்டி போட்டனர். சில காளைகள் மாடுபிடி வீரர்களை பந்தாடின. இதில் 7 பேர் காயம் அடைந்தனர். காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் சைக்கிள், குளிர்சாதன பெட்டி, பீரோ, கட்டில், டி.வி. மற்றும் தங்கம், வெள்ளி நாணயங்கள் பரிசுகளாக வழங்கப்பட்டன.

சில காளைகள் உரிமையாளர்களின் கையில் சிக்காமல் தெருக்களில் ஓடியது. இதனால் பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். மாட்டின் உரிமையாளர்கள் காளைகளை தேடி சென்று பிடித்து வாகனங்களில் ஏற்றினர்.

ஜல்லிக்கட்டு நடந்து கொண்டிருந்தபோது போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை நிர்வாகிகள் செய்யவில்லை என கூறி பகல் 12.30 மணியளவில் போட்டியை ஆர்.டி.ஓ. திடீரென தடுத்து நிறுத்தினார். இதனால் பாதியில் ஜல்லிக்கட்டு நிறுத்தப்பட்டது.

முன்னதாகவே போட்டி நிறுத்தப்பட்டதால் மாடுகளை பிடிக்க வந்த வீரர்களும், பல்வேறு மாவட்டங்களில் இருந்து காளைகளை கொண்டு வந்த உரிமையாளர்களும் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

Next Story