புயல் பாதித்த பகுதிகளில் மறு சாகுபடி தொடங்கும் வகையில் புதிய தென்னங்கன்றுகள் நடப்படும் கலெக்டர் தகவல்


புயல் பாதித்த பகுதிகளில் மறு சாகுபடி தொடங்கும் வகையில் புதிய தென்னங்கன்றுகள் நடப்படும் கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 28 Jan 2019 4:15 AM IST (Updated: 28 Jan 2019 1:45 AM IST)
t-max-icont-min-icon

புயல் பாதித்த பகுதிகளில் மறு சாகுபடி தொடங்கும் வகையில் 100 நாள் வேலை திட்ட பணியாளர்களை கொண்டு புதிய தென்னங்கன்றுகள் நடப்படும் என கலெக்டர் கணேஷ் தெரிவித்து உள்ளார்.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த நவம்பர் மாதம் 16-ம் தேதி வீசிய கஜா புயலால் தென்னை, நெல், மக்காச்சோளம், பயறு வகைகள், கரும்பு, மா, முந்திரி, புளி, சவுக்கு உள்ளிட்ட ஏராளமான பயிர்கள் மற்றும் மரங்கள் சேதமடைந்தன. குறிப்பாக தென்னை மரங்கள் அதிகளவில் சேதமடைந்து உள்ளன. இதையடுத்து வேரோடு சாய்ந்த மற்றும் கொண்டை முறிந்த தென்னை மரங்களின் விபரங்கள் வேளாண்மை துறை அலுவலர்கள் வாயிலாக கணக்கெடுக்கப்பட்டு உள்ளன. புயல் பாதித்த பகுதிகளில் உள்ள தென்னை விவசாயிகள் மறு சாகுபடி தொடங்கும் வகையில் வேளாண்மைத்துறை சார்பில், 100 நாள் வேலை திட்ட பணியாளர்களை கொண்டு புதிய தென்னங் கன்றுகள் நடப்பட உள்ளது.

புயலால் பாதிக்கப்பட்ட தென்னை விவசாயிகள் குறித்த கணக்கெடுப்பு விபரங்கள் சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டு, 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் மூலம் தென்னங்கன்றுகள் நடுவதற்கான குழி தோண்டும் பணிகள் மற்றும் கன்றுகள் நடும் பணி மேற்கொள்ளப்பட உள்ளன. இதற்காக புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் ஒரு குடும்பத்திற்கு வழங்கப்படும் வேலை நாட்கள் 100-ல் இருந்து 150 நாட்களாக உயர்த்தப்பட்டு உள்ளது. மறு சாகுபடிக்கு தேவையான தென்னங்கன்றுகள் வேளாண்மை துறை வாயிலாக வழங்கப் படும்.

100 நாள் திட்டத்தின் கீழ் தனிநபர் நிலங்களில் தென்னங்கன்றுகள் நடுவதற்கு தேர்வு செய்யப்பட்ட பணிகள் கிராம சபையில் வைத்து ஒப்புதல் பெறப்பட்டு தேசிய ஊரக வேலை உறுதி திட்ட இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். சிறு, குறு விவசாயிகள், தாழ்த்தப்பட்டவர்கள், பழங்குடியினர், சீர் மரபினர், வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள், பெண் தலைமையிலான குடும்பங்கள், மாற்றுத்திறனாளி தலைமையிலான குடும்பங்கள், வனக்குடியிருப்போர், நாடோடி பழங்குடியினர் மற்றும் நிலசீர்திருத்த விவசாயிகள் ஆகியோர் இந்த 100 நாள் திட்ட பணியினை மேற்கொள்ள தகுதியுடைய பணியாளர்களாக தேர்வு செய்யப்படுவார்கள்.

இந்த பணிகளுக்கு வருகை பதிவேடு மற்றும் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள ஒவ்வொரு பணிக்கும் ஒரு பணித்தள பொறுப்பாளர் நியமிக்கப்படுவார். நிலத்திற்குரிய விவசாயி வேலை அட்டை வைத்திருந்து 8-ம் வகுப்பு படித்திருந்தால் அவரே இவ்வேலை முடியும் வரை பணித்தள பொறுப்பாளராக பணியாற்றலாம். எனவே, புதுக்கோட்டை மாவட்டத்தில் புயல் பாதிப்புக்குள்ளான தென்னை சாகுபடி விவசாயிகள் அந்தந்த பகுதி வட்டார வளர்ச்சி அலுவலர் அல்லது வேளாண்மை துறை அலுவலரை தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார். 

Next Story