தமிழ் வழக்கு வாத போட்டி: செங்கல்பட்டு அரசு சட்ட கல்லூரி முதலிடம்


தமிழ் வழக்கு வாத போட்டி: செங்கல்பட்டு அரசு சட்ட கல்லூரி முதலிடம்
x
தினத்தந்தி 28 Jan 2019 4:30 AM IST (Updated: 28 Jan 2019 4:30 AM IST)
t-max-icont-min-icon

புதுவை அரசு சட்ட கல்லூரியில் நடந்த தேசிய தமிழ் வழக்கு வாத போட்டியில் செங்கல்பட்டு அரசு சட்ட கல்லூரி அணி முதலிடம் பிடித்தது.

புதுச்சேரி,

புதுவை காலாப்பட்டு டாக்டர் அம்பேத்கர் அரசு சட்ட கல்லூரி மற்றும் பெங்களூரு ராகவேதா அறக்கட்டளை சார்பில் நதி நீர் பங்கீடு தொடர்பான சேச அய்யங்கார் ராமசாமி நினைவு 3-வது தேசிய தமிழ் வழக்கு வாத போட்டி கடந்த 25-ந் தேதி தொடங்கியது. இதில் நதி நீர் பங்கீடு தொடர்பாக சர்வதேச சட்ட பிரச்சினையை மையமாக கொண்டு வழக்கு தொடரப்பட்டு மாணவர்களின் வாதத்திற்கு கொடுக்கப்பட்டது.

இதில் புதுச்சேரி, சென்னை, செங்கல்பட்டு, மதுரை, தஞ்சாவூர், சேலம் உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 30 சட்ட கல்லூரி அணிகள் பங்கேற்று வாத திறமைகளை வெளிப்படுத்தினர். சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் கிருஷ்ணகுமார், சுரேஷ்குமார் ஆகியோர் நடுவர்களாக இருந்தனர்.

இதன் பரிசளிப்பு விழா நேற்று நடந்தது. இதில் செங்கல்பட்டு அரசு சட்ட கல்லூரி அணி முதல் இடத்தை பிடித்தது. 2-வது இடத்தை மதுரை அரசு சட்ட கல்லூரி அணி பிடித்தது. வெற்றி பெற்ற அணிகளுக்கு சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் கிருஷ்ணகுமார், சுரேஷ்குமார் ஆகியோர் ரொக்கப்பரிசு மற்றும் கோப்பைகள் வழங்கி பாராட்டினார்கள்.

விழாவில் புதுச்சேரி சட்டத்துறை செயலர் ஜூலியட் புஷ்பா, புதுச்சேரி அரசு சட்ட கல்லுாரி முதல்வர் வின்சென்ட் அற்புதம், மூத்த வக்கீல்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story