திருப்பரங்குன்றம் அருகே நோய் தாக்குதலால் கருகும் நெற்பயிர்கள் - விவசாயிகள் வேதனை
திருப்பரங்குன்றம் அருகே தென்பழஞ்சியில் செவட்டை நோய் தாக்குதலால் பால்பிடிக்கும் பருவத்தில் வளர்ந்த நெற்பயிர்கள் பலவும் கருகி வருகின்றன. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
திருப்பரங்குன்றம்,
திருப்பரங்குன்றம் அருகே தென்பழஞ்சியில் பல ஏக்கர் பரப்பளவில் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் நெற்பயிர்களை சாகுபடி செய்துள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக பருவமழை பொய்த்ததால் இப்பகுதியில் விவசாயம் நடைபெறவில்லை. கடந்த ஆண்டு ஓரளவு பருவமழை கைக்கொடுத்ததால் கிணறுகளில் தண்ணீர் ஊறியது. இதனையடுத்து கிணற்று பாசனத்தை நம்பி விவசாயிகள் நெற்பயிர்களை கடந்த மாதம் சாகுபடி செய்தனர். தற்போது அந்த நெற்பயிர்கள் வளர்ந்து பால்பிடிக்கும் தருணத்தில் உள்ளன. இதற்கிடையே கிணறுகளில் தண்ணீர் கணிசமாக குறைந்து வருகிறது. இதனால் விவசாயிகள் பலரும் விலைக்கு தண்ணீர் வாங்கி நெற்பயிர்களுக்கு பாய்ச்சி வருகின்றனர்.
இந்தநிலையில் நெற்பயிரில் செவட்டை நோய் தாக்கி வருகிறது. இந்த நோய் தாக்குதலால் பல ஏக்கரில் பயிர்கள் கருகி வருகின்றன. இதனால் விவசாயிகள் செய்வது அறியாது திகைத்து வருகின்றன. அருகில் உள்ள வயலுக்கும் நோய் பரவாமல் தடுப்பு நடவடிக்கையிலும் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். ஆனாலும் ஒருசில நிலங்களில் செவட்டை நோய் தாக்கம் குறைந்தபாடில்லை. இதன்காரணமாக விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
இதுகுறித்து விவசாயி பசீர் என்பவர் கூறியதாவது:- தென்பழஞ்சி பகுதியில் பருவமழை கைக்கொடுத்தால் மட்டுமே விவசாயம் செய்ய முடியும். பருவமழை பொய்த்துவிட்டதால் கடந்த 5 ஆண்டுகளாக இப்பகுதியில் சரிவர விவசாயம் நடைபெறவில்லை. இந்தநிலையில் கடந்த ஆண்டு மழை கைக்கொடுத்ததால் நெற்பயிர்களை சாகுபடி செய்தோம். வைகை பாசனம் சார்ந்த கண்மாய்கள் நிரம்பின. இதனால் தென்பழஞ்சி பகுதியில் உள்ள கிணறுகளில் நீர்மட்டம் உயர்ந்தது. இதற்கிடையே தற்போது கிணறுகளில் தண்ணீர் குறைந்து வரும் நிலையில், நெற்பயிர்களில் செவட்டை நோய் தாக்குதல் ஏற்பட்டு பயிர்கள் பால் பிடிக்கும் பருவத்தில் கருகி வருகின்றன. மருந்து அடித்த போதிலும் செவட்டை நோயில் இருந்து பயிரை காப்பாற்ற முடியவில்லை. எனவே சம்பந்தப்பட்ட வேளாண்மை அதிகாரிகள் நோயை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டும். பயிர் கருகி பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டு தொகை வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story