உள்ளாட்சி தேர்தல் நடத்தினால் தி.மு.க. வெற்றி பெறும் என்பதால்தான் தள்ளிப்போடுகிறார்கள் ஊராட்சி சபை கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு


உள்ளாட்சி தேர்தல் நடத்தினால் தி.மு.க. வெற்றி பெறும் என்பதால்தான் தள்ளிப்போடுகிறார்கள் ஊராட்சி சபை கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு
x
தினத்தந்தி 29 Jan 2019 4:45 AM IST (Updated: 28 Jan 2019 10:59 PM IST)
t-max-icont-min-icon

உள்ளாட்சி தேர்தல் நடத்தினால் தி.மு.க. வெற்றி பெறும் என்பதால்தான் தள்ளிப்போடுகிறார்கள் என்று சீவூர் ஊராட்சியில் நடந்த ஊராட்சி சபை கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் கூறினார்.

குடியாத்தம், 

வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஒன்றியம் சீவூர் ஊராட்சியில் தி.மு.க. சார்பில் ஊராட்சி சபை கூட்டம் நடைபெற்றது. இதில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

தி.மு.க. சார்பில் ‘மக்களிடம் செல்வோம், மக்களிடம் சொல்வோம், மக்களின் மனங்களை வெல்வோம்’ என்ற முழக்கத்தை முன்வைத்து ஊராட்சி சபை கூட்டம் நடத்தி மக்களை சந்திக்க வந்திருக்கிறேன். கிராமங்கள்தான் கோவில். நான் பக்தனாக இங்கு வந்திருக்கிறேன். நாங்கள் உங்களின் குறைகள் மற்றும் பிரச்சினைகளை கேட்டு அதனை விரைவில் தீர்த்து வைக்க உறுதியோடு வந்திருக்கிறோம்.

நான் எனது கொளத்தூர் தொகுதிக்கு வாரம் ஒருமுறை சென்று மக்களை சந்தித்து வருகிறேன். சீவூர் ஊராட்சியில் உள்ள இந்த குடியாத்தம் தொகுதி, எம்.எல்.ஏ. இல்லாத அனாதை தொகுதியாக உள்ளது. அ.தி.மு.க.வின் பங்காளி சண்டையால் எம்.எல்.ஏ. இல்லாத தொகுதியாக உள்ளது. இந்த தொகுதியை பற்றி பேச 1 வருடமாக எம்.எல்.ஏ. இல்லை.

விரைவில் நாடாளுமன்ற தேர்தல் வர உள்ளது. வருகிற ஏப்ரல், மே மாதம் நிச்சயம் வந்துவிடும். நாடாளுமன்ற தேர்தலுடன் 21 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நிச்சயமாக வர வாய்ப்பு உள்ளது. நாடாளுமன்ற தேர்தலுடன் ஒட்டுமொத்த சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தலும் வருமோ என்ற சந்தேகம் எங்களுக்கு வந்துள்ளது. அதைத்தான் நீங்களும் எதிர்பார்க்கிறீர்கள். அப்போதுதான் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும்.

உள்ளாட்சி தேர்தல் நடத்தினால் அதில் தி.மு.க. வெற்றி பெறும் என்பதால்தான் தள்ளி போட்டு வருகிறார்கள். இந்த ஆட்சி இன்றோ, நாளையோ என்ற நிலையில்தான் உள்ளது. ஜெயலலிதா மறைந்த பின்னர் இ.பி.எஸ்., ஓ.பி.எஸ். இணைந்து கூட்டு கொள்ளை அடித்து வருகின்றனர். அவர்களுக்கு மத்திய அரசு முட்டு கொடுக்கிறது.

சட்டசபையில் மெஜாரிட்டிக்கு 117 இடம் வேண்டும். தற்போது அ.தி.மு.க.வின் பலம் 113 ஆக மைனாரிட்டியாக உள்ளது. 10 நாளில் 11 எம்.எல்.ஏ.க்களின் தீர்ப்பு வர உள்ளது. அவர்கள் எம்.எல்.ஏ.க்களுக்கு கோடிக்கணக்கில் லஞ்சம் கொடுத்து தக்க வைத்து கொண்டிருக்கிறார்கள். இவர்கள் ஜெயலலிதாவின் பேரை சொல்லி ஆட்சி நடத்தி கொண்டிருக்கிறார்கள்.

ஜெயலலிதாவின் இறப்பு மர்மமாக உள்ளது. இதனை விசாரணை கமிஷன் விசாரித்து வருகிறது. இறப்பு குறித்து சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என அ.தி.மு.க.வின் சட்டத்துறை அமைச்சரே கேட்கிறார். கோடநாடு கொலை சம்பவத்தில் முதல் - அமைச்சருக்கு தொடர்பு உள்ளது என வாக்குமூலம் கொடுக்கிறார்கள். இந்த ஆட்சி லஞ்ச ஆட்சி மட்டுமல்ல, கொள்ளையடிக்கும் ஆட்சி மட்டுமல்ல, கொலைகார ஆட்சியாகவும் நடக்கிறது.

2006-ல் கருணாநிதி தேர்தல் வாக்குறுதியில் கூட்டுறவு கடன் தள்ளுபடி என கூறினார். அதேபோல் விவசாயிகளுக்கு கூட்டுறவு கடன் தள்ளுபடி செய்தார். மகளிர் திட்டத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தார். மகளிர் சுயஉதவி குழுக்கள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டது. ஆனால் தற்போது மகளிர் குழுக்களுக்கு வங்கி கடன் இல்லை, சுழல்நிதி இல்லை.

சீவூர் ஊராட்சியில் பொதுமக்கள் தெரிவித்த பிரச்சினைகள் சின்ன, சின்ன பிரச்சினைகள்தான். உள்ளாட்சி தேர்தலை நடத்தி உள்ளாட்சி பிரதிநிதிகள் இருந்திருந்தால் இந்த பிரச்சினைகளை தீர்த்திருக்கலாம். இந்த சின்ன, சின்ன பிரச்சினைகளை கூட செய்து கொடுக்க முடியாத நிலையில்தான் இந்த ஆட்சி உள்ளது.

தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சிக்கு வரும் என எங்களைவிட பொதுமக்களான உங்களுக்குத்தான் அதிக நம்பிக்கை வந்துள்ளது. தமிழக அரசுக்கு முட்டு கொடுக்கும் அரசாக மோடி அரசு உள்ளது. தேர்தலுக்காக தமிழகத்திற்கு மோடி வந்து செல்கிறார். தேர்தல் வாக்குறுதியில் ரூ.15 லட்சம் வங்கி கணக்கில் செலுத்துவோம் என கூறியவர்கள் 15 ரூபாய் கூட வழங்கவில்லை. வருகிற நாடாளுமன்ற தேர்தலை நல்ல வாய்ப்பாக பொதுமக்கள் பயன்படுத்திட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக சீவூர் கிராமத்தை சேர்ந்த பெண்கள் பேசுகையில், சீவூர் ஊராட்சியில் சரியாக சாலை வசதி இல்லை, கழிவுநீர் கால்வாய் வசதி இல்லை, அடிப்படை சுகாதார வசதி இல்லை, முறையான குடிநீர் வசதி இல்லை, காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தில் குடிநீர் வேண்டும்’ என்றனர்.

அதைத் தொடர்ந்து குடியாத்தம் சட்டமன்ற தொகுதி வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் உள்ளி கூட்ரோடு பகுதியில் நடைபெற்றது. இதில் தி.மு.க தலைவரும், சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு வாக்குச்சாவடி முகவர்களுடன் கலந்துரையாடினார்.

நிகழ்ச்சியில் கட்சியின் பொருளாளர் துரைமுருகன், மாவட்ட செயலாளர்கள் ஆர்.காந்தி எம்.எல்.ஏ., ஏ.பி.நந்தகுமார் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.பி. முகமதுசகி, கார்த்திகேயன் எம்.எல்.ஏ., கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரி தலைவர் கதிர் ஆனந்த், வடக்கு ஒன்றிய செயலாளர் கள்ளூர் ரவி, தெற்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, நகர பொறுப்பாளர் சவுந்தர்ராஜன், பொதுக்குழு உறுப்பினர் பிரேமா கோபாலகிருஷ்ணன், ஒன்றிய துணை செயலாளர் என்.இ.சத்யானந்தம், முன்னாள் நகரமன்ற தலைவர்கள் காத்தவராயன், ஜூபேர் அகமது, மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ராஜமார்த்தாண்டன், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் நத்தம் பிரதீஷ், நெசவாளர் அணி மாவட்ட அமைப்பாளர் ஜி. எஸ்.அரசு, மாவட்ட மருத்துவ அணி அமைப்பாளர் டாக்டர்.முகமது சயி, வக்கீல் டி.சுந்தர், மாவட்ட பிரதிநிதி பிரபாத்குமார், சேத்துண்டை ஊராட்சி கழக செயலாளர் எஸ்.ராஜா உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

Next Story