வங்கி சுவரில் துளைபோட்டு 4 கிலோ தங்கம்-பல லட்சம் ரூபாய் கொள்ளை வாடிக்கையாளர்கள் திரண்டதால் பரபரப்பு


வங்கி சுவரில் துளைபோட்டு 4 கிலோ தங்கம்-பல லட்சம் ரூபாய் கொள்ளை வாடிக்கையாளர்கள் திரண்டதால் பரபரப்பு
x
தினத்தந்தி 29 Jan 2019 4:45 AM IST (Updated: 29 Jan 2019 12:20 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி அருகே வங்கி சுவரில் துளைபோட்டு 4 கிலோ தங்கம் மற்றும் பல லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டது. தகவல் அறிந்த வாடிக்கையாளர்கள் வங்கி முன்பு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்சி,

திருச்சி-சமயபுரம் சாலையில் நெ.1 டோல்கேட்டில் பஞ்சாப் நேஷனல் வங்கி உள்ளது. இந்த வங்கியில் விவசாயிகளும், வாடிக்கையாளர்கள் பலரும் நகைகளை அடகு வைத்துள்ளனர். வங்கியில் 500-க்கும் மேற்பட்ட தனிநபர் பாதுகாப்பு பெட்டக வசதியும் உள்ளது. தொழிலதிபர்கள், முக்கிய பிரமுகர்கள் பலர் வங்கியில் பாதுகாப்பு பெட்டக வசதியை பெற்று இருந்தனர்.

அந்த வாடிக்கையாளர்கள் தங்களது நகைகள், சொத்து பத்திரங்கள், விலை உயர்ந்த ஆபரணங்கள், முக்கிய ஆவணங்கள் போன்றவற்றை அந்த பெட்டகத்தில் வைத்து பூட்டி ஒரு சாவியை வங்கியிடமும், மற்றொரு சாவியை தாங்களும் வைத்து இருந்தனர்.

இந்த நிலையில் கடந்த 26-ந் தேதி சனிக்கிழமை குடியரசு தின விடுமுறை என்பதாலும், அதனை தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை என்பதாலும் 25-ந் தேதி வெள்ளிக்கிழமை மாலையில் வங்கியை ஊழியர்கள் பூட்டி விட்டு சென்றனர். 2 நாட்கள் விடுமுறை முடிந்து நேற்று காலை வழக்கம்போல் வங்கியை திறந்து ஊழியர்கள் உள்ளே வந்தனர். அவரவர் இருக்கையில் அமர்ந்து பணியை தொடங்கினர்.

சிறிது நேரத்தில் வாடிக்கையாளர் ஒருவர் வந்து மேலாளரிடம் தனது பாதுகாப்பு பெட்டகத்தில் உள்ள ஒரு பொருளை எடுக்க வேண்டும் என்று கூறினார். இதையடுத்து ஊழியர் ஒருவர் பாதுகாப்பு பெட்டகம் உள்ள அறையின் சாவியை எடுத்து கொண்டு வாடிக்கையாளருடன் அறையின் கதவை திறந்து உள்ளே சென்றனர்.

அங்கு அறையில் இருந்த 5 பாதுகாப்பு பெட்டகம்(இரும்பு லாக்கர்கள்) உடைக்கப்பட்டு இருந்தன. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த ஊழியர் மேலாளரிடம் இது பற்றி கூறினார். உடனே மேலாளர் உள்பட மற்ற ஊழியர்கள் அந்த அறைக்கு சென்று பார்த்தனர். அங்கு 5 பெட்டகங்கள் உடைக்கப்பட்டு திறந்து கிடந்தன.

அதில் பொருட்கள் ஏதும் இன்றி வெறுமையாக கிடந்தது. மேலும், அறையின் பின்பக்க சுவரில் ஒரு ஆள் நுழையும் அளவுக்கு துளையிடப்பட்டு இருந்தது. அப்போது தான் மர்ம நபர்கள் வங்கி சுவரில் துளையிட்டு பெட்டகத்தை உடைத்து கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது.

உடனே இது குறித்து கொள்ளிடம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து வங்கிக்கு போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். தகவல் அறிந்த திருச்சி சரக டி.ஐ.ஜி.லலிதா லட்சுமி, போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல்ஹக் ஆகியோர் நேரில் வந்து பார்வையிட்டனர். முதற்கட்ட விசாரணையில் 4 கிலோ தங்கம் மற்றும் பல லட்சம் ரூபாய் கொள்ளை போய் இருந்தது தெரிய வந்தது. வங்கியின் பின்புறம் கொள்ளையர்கள் சுவரில் துளையிட்ட இடத்துக்கு போலீசார் சென்று பார்த்தனர்.

அங்கு கியாஸ் சிலிண்டர், வெல்டிங் எந்திரம், கடப்பாரை, சுத்தியல் உள்ளிட்டவை கிடந்தன. இதன் மூலம் கியாஸ் வெல்டிங் எந்திரத்தை பயன்படுத்தி வங்கி பெட்டகத்தை உடைத்து கொள்ளையடித்து சென்றுள்ளனர். சம்பவ இடத்துக்கு விரல்ரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கொள்ளையர்கள் விட்டு சென்ற தடயங்களை சேகரித்தனர். மோப்பநாயும் வரவழைக்கப்பட்டது.

கொள்ளையர்கள் வங்கியில் புகுந்து கொள்ளையடித்த சம்பவம் அங்கு பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகி இருக்கும் என போலீசார் சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை பார்வையிட முயன்றனர். ஆனால் கொள்ளையர்கள் சி.சி.டி.வி. கேமராவில் காட்சிகள் பதிவாகி இருந்த ஹார்டு டிஸ்க்கையும் கழற்றி எடுத்து சென்று இருந்தது தெரிய வந்தது.

மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள நெ.1 டோல்கேட்டில் உள்ள வங்கியில் கொள்ளையர்கள் துணிச்சலாக புகுந்து கொள்ளையடித்து சென்றுள்ள சம்பவம் வாடிக்கையாளர்கள் உள்பட அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. குறிப்பாக 5 பெட்டகங்களை மட்டும் உடைத்து பணம்-நகைகளை அள்ளி சென்றுள்ளனர்.

இதனால் அந்த பெட்டகங்களில் கிலோ கணக்கில் தங்கம் மற்றும் பல லட்சம் ரூபாய் இருந்ததை ஏற்கனவே கொள்ளையர்கள் அறிந்து இருந்தார்களா? என்ற சந்தேகமும் போலீசாருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும், இந்த கொள்ளை சம்பவத்தை அரங்கேற்ற பல நாட்களுக்கு முன்பே திட்டமிட்டு விடுமுறை நாட்களுக்காக எதிர்பார்த்து அரங்கேற்றி இருக்கலாம் என தெரிகிறது. சி.சி.டி.வி. கேமரா காட்சிகளும் இல்லாததால் கொள்ளையர்களை கண்டறிவதில் போலீசாருக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் கொள்ளையர்களை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இதற்கிடையே வங்கியில் கொள்ளை சம்பவம் பற்றி அறிந்த வாடிக்கையாளர்கள் பலர் வங்கியின் முன்பு திரண்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. வாடிக்கையாளர்கள் வங்கிக்குள் செல்ல முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். கொள்ளை சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், வாடிக்கையாளர்களை உள்ளே அனுமதிக்க முடியாது என்றும் கூறிவிட்டனர். பின்னர் வங்கியின் முன்பு கேட்டில் வங்கி விடுமுறை என்ற வாசகம் அடங்கிய பதாகையை தொங்கவிட்டு போலீசார் வங்கியை பூட்டிவிட்டு விசாரணை நடத்தினர்.

Next Story