பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்தக்கோரி போராட்டத்தில் ஈடுபட்ட 2,755 ஆசிரியர்கள்– அரசு ஊழியர்கள் கைது
பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்தக்கோரி போராட்டத்தில் ஈடுபட்ட 2 ஆயிரத்து 755 ஆசிரியர்கள் –அரசு ஊழியர்களை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு,
தமிழ்நாட்டில் கடந்த 2003–ம் ஆண்டுக்கு பின்னர் அரசு பணியில் சேர்ந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் ரத்து செய்யப்பட்டு, புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுவான ஜாக்டோ–ஜியோ அமைப்பு காலவரையற்ற வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்தது.
அதன்படி கடந்த 22–ந் தேதி தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினார்கள். வருவாய்த்துறையில் தாசில்தார் முதல் அலுவலக உதவியாளர்கள் வரையிலும், உள்ளாட்சித்துறையில் வட்டார வளர்ச்சி அலுவலர் முதல் அனைத்து பிரிவினரும், கருவூலத்துறை, பள்ளிக்கல்வித்துறை என அனைத்து அரசு துறைகளிலும் பணியாற்றும் ஊழியர்கள், பணியாளர்கள், ஆசிரிய–ஆசிரியைகளும் போராட்டத்தில் குதித்தனர். ஈரோடு மாவட்டத்திலும் 90 சதவீதம் பேர் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர். 22–ந் தேதி முதல் தொடர்ந்து பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன. கடந்த 25–ந் தேதி ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மாவட்ட அளவிலான மறியல் போராட்டத்தை நடத்தினார்கள். அதைத்தொடர்ந்து அன்று இரவே முக்கிய சங்கங்களின் நிர்வாகிகளை வீடு தேடிச்சென்று போலீசார் கைது செய்தனர். ஈரோடு மாவட்டத்தில் 30 ஆசிரியர்கள் உள்பட 52 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
அதைத்தொடர்ந்து 30 ஆசிரியர்களையும் பணியிடை நீக்கம் செய்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். இந்தநிலையில் வேலை நிறுத்த போராட்டம் தொடரும் என்றும், அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் மறியல் போராட்டம் நடைபெறும் என்றும் ஜாக்டோ–ஜியோ நிர்வாகிகள் அறிவித்தனர். அதன்படி ஈரோடு தாலுகா அலுவலகம் முன்பு சாலை மறியல் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஏற்கனவே ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் கைது மற்றும் பணியிடை நீக்கம் போன்ற நடவடிக்கைகள் இருந்ததால் நேற்றைய போராட்டம் பெரிய அளவில் இருக்காது என்று கருதப்பட்டது. குறிப்பாக போராட்டத்துக்கு வரும் அனைவரையும் ஒன்று சேர விடாமல் ஆங்காங்கே கைது செய்ய போலீசார் திட்டமிட்டு இருந்தனர்.
கோபி, பவானி, பெருந்துறை என்று பல பகுதிகளிலும் போராட்டத்துக்கு வரும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் கண்காணிக்கப்பட்டு அங்கேயே கைது நடவடிக்கை நடந்தது. அதையும் மீறி ஈரோட்டில் மறியல் போராட்டம் அறிவிக்கப்பட்டு இருந்த தாலுகா அலுவலகத்துக்கு காலையில் இருந்தே அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் வரத்தொடங்கினார்கள். காலை 10 மணி அளவில் தாலுகா அலுவலக வளாகத்தில் கூடி இருந்த 100–க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர். மேலும், ஈரோடு டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு ராதாகிருஷ்ணன், பவானி துணை போலீஸ் சூப்பிரண்டு சார்லஸ் ஆகியோர் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் விஜயன், சின்னத்தங்கம், வினோதினி மற்றும் போலீசார் தொடர் கைது நடவடிக்கையில் ஈடுபட்டனர். பன்னீர்செல்வம் பூங்கா பகுதியில் தடுப்பு வேலிகள் போடப்பட்டு இருந்தது. தாலுகா அலுவலகம் நோக்கி செல்லும் அனைவரையும் போலீசார் விசாரித்த பின்னரே உள்ளே செல்ல விட்டனர். ஆசிரியர்கள் அல்லது அரசு ஊழியர்கள் என்பது தெரிந்தால் உடனடியாக கைது செய்து வேனில் ஏற்றினார்கள்.
இதனால் தாலுகா அலுவலகம் பகுதிக்கு போராட்டத்துக்கு செல்ல முடியாமல் அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் ஆங்காங்கே நின்று கொண்டிருந்தனர். காலை 10.30 மணி அளவில் சி.எஸ்.ஐ. பிரப் ஆலய வளாகம், பெரிய மாரியம்மன் கோவில்பகுதி, மாநகராட்சி வளாகத்தில் ஆசிரிய–ஆசிரியைகள், அரசு ஊழியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் கூடத்தொடங்கினார்கள். 10.50 மணி அளவில் மாநகராட்சி அலுவலகம் அருகில் 100–க்கும் மேற்பட்டவர்கள் கூடி இருந்தார்கள். இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் அவர்களை கைது செய்யும் நோக்கத்தில் சம்பவ இடத்துக்கு வந்தனர். போலீசார் வந்து அனைவரையும் கைது செய்வதாக அறிவித்து வேனில் ஏறும்படி கூறினார்கள். அப்போது திடீர் என்று அவர்கள் சாலையில் உட்கார்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனடியாக இன்ஸ்பெக்டர் விஜயன் சம்பவ இடத்துக்கு வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். போராட்டக்குழுவினரும் சாலையில் இருந்து எழுந்து ஓரமாக நின்று கொண்டிருந்தனர்.
திடீரென்று பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெண்கள் எதிர்பாராத வகையில் மீண்டும் சாலையில் உட்கார்ந்தனர். அதைத்தொடர்ந்து ஆங்காங்கே நின்று கொண்டிருந்த ஆயிரக்கணக்கான ஆசிரியைகளும், அரசு ஊழியர்களும் பிற சங்கங்களை சேர்ந்த அனைவரும் வந்து சாலையில் உட்கார்ந்தனர். அங்கு உட்கார்ந்து ஓய்வூதியம் கேட்டும், கோரிக்கைகளை வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பினார்கள். அவர்களிடம், போராட்டத்தை கைவிட்டு கைது செய்ய ஒத்துழைக்கும்படி போலீசார் வேண்டுகோள் விடுத்தும் போராட்டம் கைவிடப்படவில்லை. சுமார் 30 நிமிடங்கள் இந்த போராட்டம் தொடர்ந்தது.
இதனால் பிரப் ரோட்டில் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. உடனடியாக போலீசார் அதிக அளவில் சம்பவ இடத்துக்கு வந்து போக்குவரத்தை சீரமைத்தனர். பின்னர் பெண் போலீசாரை வரவழைத்து பெண்களை ஒவ்வொருவராக அழைத்துச்சென்று வேனில் ஏற்றினார்கள். போலீசாரின் வேண்டுகோளை ஏற்று ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் கைதாகினார்கள். ஆனால் அங்கு கூடி இருந்தவர்களை உடனடியாக ஏற்றிச்செல்ல வாகனங்கள் இல்லை. பின்னர் கொண்டுவரப்பட்ட வேன்கள், மினி பஸ்கள், தனியார் பள்ளிக்கூட பஸ்களில் அவர்களை ஏற்றினார்கள். பகல் 11.30 மணி அளவில் தொடங்கிய கைது நடவடிக்கை மதியம் 1.30 மணிவரை நடந்தது. அதுவரை பிரப் ரோட்டில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு இருந்தது.
கைது செய்யப்பட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் ஈரோடு மாநகராட்சி திருமணமண்டபம், என்.ஆர்.திருமணமண்டபம், ஜனனி திருமண மண்டபம், அகிலா சிவராமன் திருமண மண்டபம், சங்கர்மகால், பாலசுந்தரா மண்டபம் என 6 மண்டபங்களுக்கு கொண்டு சென்று அடைத்து வைக்கப்பட்டனர். போராட்டத்துக்கு தாமதமாக வந்த ஆசிரியர்கள் பலரும் ஈரோடு மாநகராட்சி திருமண மண்டபம் முன்பு வந்து தங்களையும் கைதானவர்களுடன் இருக்க அனுமதிக்கும்படி கேட்டனர். ஆனால், போலீசார் உள்ளே விடவில்லை. அவர்களை வீட்டுக்கு செல்லும்படி கூறினார்கள். அதைத்தொடர்ந்து அங்கு வந்த 50–க்கும் மேற்பட்ட ஆசிரியைகள் தங்களையும் கைது செய்யக்கோரி நாச்சியப்பா வீதியில் சாலையில் உட்கார்ந்து திடீர் மறியலில் ஈடுபட்டனர். உடனடியாக அவர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டு மினி பஸ்சில் ஏற்றிச்செல்லப்பட்டார்கள்.
ஈரோடு மாவட்டத்தில் நேற்று காலையில் இருந்தே கைது செய்யப்பட்டவர்கள் ஈரோடு, பெருந்துறை, பவானி, கவுந்தப்பாடியில் உள்ள 15 திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டு இருந்தனர். மொத்தம் 853 ஆண்கள், 1,902 பெண்கள் என மொத்தம் 2 ஆயிரத்து 755 ஆசிரிய–ஆசிரியைகள், அரசு ஊழியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், உள்ளாட்சி பணியாளர்கள், கல்லூரி பேராசிரிய–பேராசிரியைகள் கைது செய்யப்பட்டனர்.
இதற்கிடையே பெருந்துறையில் ஒரு திருமண மண்டபத்தில் 26 பெண்களை மட்டும் அடைத்து வைத்திருந்தனர். அவர்கள் தங்களை மற்ற ஆசிரிய–ஆசிரியைகள், அரசு ஊழியர்களுடன் சேர்ந்து வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். ஆனால், போலீசார் கண்டுகொள்ளவில்லை. இதுபோல் ஈரோட்டில் ஒரு தனியார் திருமண மண்டபத்தில் 272 ஆண்கள் மட்டும் அடைக்கப்பட்டு இருந்தனர். இவர்களில் 125 பேரை சிறையில் அடைக்க இருப்பதாகவும், அந்த 125 பேர் தானாக முன்வந்து தங்கள் பெயரை கொடுத்தால் மற்றவர்களை விட்டு விடுவதாகவும் போலீசார் கூறினார்கள். ஆனால், சிறையில் அடைப்பதாக இருந்தால் அனைவரையும் அடையுங்கள் என்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டம், கைது சம்பவங்களால் ஈரோட்டில் நேற்று பரபரப்பாக இருந்தது.