கரூர் கலெக்டர் அலுவலகம் முன்பு அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் மறியல் 1,325 பேர் கைது


கரூர் கலெக்டர் அலுவலகம் முன்பு அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் மறியல் 1,325 பேர் கைது
x
தினத்தந்தி 29 Jan 2019 4:30 AM IST (Updated: 29 Jan 2019 2:21 AM IST)
t-max-icont-min-icon

கரூர் கலெக்டர் அலுவலகம் முன்பு மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 1,325 பேரை போலீசார் கைது செய்தனர்.

கரூர்,

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், 3,500 தொடக்க பள்ளிகளை உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளுடன் இணைப்பதை கைவிட வேண்டும், சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கரூரில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் குழு (ஜாக்டோ-ஜியோ) சார்பில் கடந்த 22-ந்தேதி முதல் வேலை நிறுத்த போராட்டம் நடந்து வருகிறது. இதனால் கரூர் மாவட்டத்தில் உள்ள 450-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் வகுப்புகள் நடத்த முடியாத சூழல் உள்ளது. மேலும் அரசு அலுவலகங்களில் பணிகள் பாதிக்கப்பட்டன. இந்த நிலையில் ஜனவரி 28-ந்தேதி (திங்கட்கிழமை) பணிக்கு வராத ஆசிரியர்களின் பணியிடம் காலியாக அறிவிக்கப்படும் என அரசு அறிவித்திருந்தது. எனினும் ஜாக்டோ-ஜியோ சார்பில் வேலைநிறுத்த போராட்டம் தொடரும் என அறிவித்தனர்.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டத்தையொட்டி, நேற்று காலை கரூர் கலெக்டர் அலுவலகம் முன்பு போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். தாந்தோன்றிமலை மெயின்ரோட்டிலுள்ள டீக்கடைகள் உள்ளிட்டவற்றில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஆகியோர் கூடி நின்றனர். பின்னர் அனைவரும் ஒன்று சேர்ந்து கோஷம் எழுப்பியபடியே வந்து கலெக்டர் அலுவலகம் முன்பு மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மறியலில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த துணை போலீஸ் சூப்பிரண்டு கும்மராஜா உள்பட போலீசார், மறியலில் ஈடுபட்டதாக ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் மகாவிஷ்ணன், இருதயசாமி, சக்திவேல் உள்பட 1,325 பேரை கைது செய்து போலீஸ் வேன், பஸ் உள்ளிட்ட வாகனங்களில் ஏற்றினர். கைது செய்யப்பட்டவர்கள் தாந்தோன்றிமலை பகுதியிலுள்ள 4 மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். 

Next Story