8–வது நாளாக ஜாக்டோ–ஜியோ போராட்டம்: சாலைமறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் 350 பேர் கைது


8–வது நாளாக ஜாக்டோ–ஜியோ போராட்டம்: சாலைமறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் 350 பேர் கைது
x
தினத்தந்தி 30 Jan 2019 4:00 AM IST (Updated: 29 Jan 2019 8:15 PM IST)
t-max-icont-min-icon

8–வது நாளாக நேற்று ஜாக்டோ–ஜியோ நிர்வாகிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சாலைமறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் 350 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு,

இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ–ஜியோ கூட்டமைப்பினர் கடந்த 22–ந்தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த போராட்டம் நேற்று 8–வது நாளாக நீடித்தது. கோபி பஸ் நிலையம் அருகே ஜாக்டோ–ஜியோ கூட்டமைப்பினர் கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷங்கள் எழுப்பினார்கள்.

மேலும் அவர்கள் அனைவரும் திடீரென சாலைமறியல் ஈடுபட்டனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட கோபி போலீசார், 200–க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்களை கைது செய்தனர்.

சத்தியமங்கலம் தாலுகா அலுவலகம் அருகே நேற்று பகல் 11 மணி அளவில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு வட்டார தலைவர் அருண்குமார் தலைமை தாங்கினார். அரசு ஊழியர் சங்க செயலாளர் ராக்கி முன்னிலை வகித்து கோரிக்கைகள் குறித்து பேசினார்.

மேலும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட ஜாக்டோ–ஜியோ அமைப்பினர் திடீரென சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த சத்தியமங்கலம் துணை போலீஸ் சூப்பிரண்டு சுப்பையா மற்றும் போலீசார், சாலைமறியலில் ஈடுபட்ட 150 அரசு ஊழியர்களை கைது செய்தனர். கோபி, சத்தியமங்கலத்தில் நேற்று கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் ஒரு வேனில் ஏற்றப்பட்டு அந்தந்த பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.


Next Story